எடிட்டர் ஏரியா

ரவு நேரம். இயற்கை உந்துதல்...

கண்ணை கஷ்டப்பட்டு திறந்து செல்லிடைப் பேசியில் மணியைப் பார்க்கிறேன்... சரியாக 3 மணி 17 நிமிடங்கள். ஒரு ஐந்து மணி என்றால் அடக்கி ஆறு மணிக்கு வெளியேற்றலாம். அகால நேரம்... அவசரம் பாதி, பயம் மீதி.

என் வீட்டுப் பின்புறம் கிணற்றுக்கு அருகில் இருக்கும் பாத்ரூம் போறதுக்குள் இல்லாத கற்பனை. எப்பவோ தூக்கு மாட்டிச் செத்த எதிர்வீட்டுப் பெண் கிணற்றுக்கு மேலே நிற்கிற மாதிரி இருக்கு.

ஐயோ என்ற பயத்துடன் உற்றுப் பார்த்தால் காற்றில் பறந்து சென்று தொங்கிய பாவாடை என்று தெரிந்ததும்தான் பெருமூச்சு சிறுமூச்சாக மாறியது.

வேகவேகமாக பாத்ரூம் உள்ளே சென்று கதவை மூடி உச்சா போனதும் ஏற்படும் நிம்மதியைச் சொல்லி மாளாது.

அரைத் தூக்க கண்களோடு கதவைத் திறக்க, கதவின் தாழ்ப்பாளை நோக்கி கை போன நேரத்தில் அனிச்சைச் செயலாக 1000 வாட்ஸ் வேகத்தில் கை நின்றது.

‘ஐயோ பாம்பு...’ கதவின் மேல் பட்டா போட்டுக் கட்டிய பங்களாவில் அமர்ந்துள்ளது போல் உள்ளது.

எண்ணங்கள் ஏதேதோ நினைக்கிறது. இப்படி பாம்புக் கடிக்கவா உயிர்.

சரி, எதையாவது செய்ய வேண்டும்.

பாம்பு என்னைப் பார்த்து விட்டதா தெரியலை. பாம்பு பிடிக்கறவங்க பிடிப்பது போல் பிடித்து ஒரே அடி அடிச்சு சாகடிக்கலாம் என்றால்... அந்தப் பாத்ரூமோ நானே வேகமா திரும்பினா அடிபடும். இங்க எங்கே பாம்பப் பிடிக்கறது, அடிக்கறது...?

அதோ... கக்கூஸ் கழுவ வைத்திருக்கும் அந்தக் கழுவாத அழுக்குப் பிடித்த பிரஷ் கண்ணில் பட்டது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். பிரஷ்ஷ எடுத்தமா, ஓங்கி மொட்டேர் என்று அடித்தமா என்று தைரியத்துடன் அதை எடுத்தேன். அய்யகோ... அது நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்ததால் மாவாகக் கொட்டியது.

என்ன செய்வது என்று தெரியாமல் அந்தக் கருமம் பிடித்த கக்கூஸ் சுவற்றின் மூலையில் பதுங்கியபடி யோசித்தேன்.

‘பாக்கெட் நாவல் அசோகன் பாம்பு கடித்து...’ என்று அந்த காலை பேப்பரின் தலைப்புச் செய்தி தெரிகிறது. அதற்குக் கீழே ஏதோ எழுதி இருக்கு. சரியாப் படிக்க முடியலை. அந்த வரிகள்...

ஆஸ்பத்திரியில் அனுமதி! என்றா, ஆத்மா சாந்தியடைந்தது! என்றா...? தெரியலை.

கண்களில் நீர் பிதுங்கி வருகிறது.

நாம போய்ட்டா... புத்தகங்களை யார் கொண்டு வருவார்கள்...?

திடீர் என கரண்ட் கட். இப்ப அந்தப் பாம்பு என்ன செய்யப் போகுதோ... ஒருவேளை நம்ம மேல ஏறினா ஆடாமை அசையாம இருக்கணும். அது அப்டியே போய்டும்... என்ற யோசனையில் இருக்கும்போது...

ஒருவித சத்தம் கேட்கிறது. காலில் ஏதோ ஊறுது. கால் தானா நடுங்கத் தொடங்குது.

காலில் கொத்திவிட்டது. குதிக்கறேன்.

இரண்டாவது கொத்தறா மாதிரி இல்ல. யாரோ காலில் அடிக்கற மாதிரி இருக்கு.

மெல்லிய குரல் கேட்கிறது.

“ஏங்க, கால எடுங்க. என் இயர்போன் ஒயர் உங்க காலில் மாட்டியிருக்கு.”

எழுந்த என்னைப் பார்த்து என் மனைவி கேட்ட முதல் கேள்வி, “ஏங்க உங்க மூஞ்சி பேயறைஞ்ச மாதிரி இருக்கு...?” என்பதுதான்.

அடக்கடவுளே... அப்ப அது கனவா...?

இந்த வயதில் கனவு. அதுவும் பாம்புக் கனவு. இதற்குக் காரணம்...

ஆங்... புரிந்து விட்டது.

‘கருநாகபுர கிராமம்’ கதையை நேற்று இரவுதான் முழுவதும் படித்து முடித்தேன்.

ஆம்... இது மூன்று வழிக் கதை.

ஒன்று ராஜா காலத்துக் கதை. இரண்டு நிகழ்காலக் கதை. இரண்டிலும் கதாநாயகன் திரு.நாகராஜன் என்கிற பாம்புதான். மூன்றாவது பாம்புகள் பற்றிய புரிய விஷயம் (அரிய விஷயத்தையும் புரியும்படி சொன்னதால் அது புரிய விஷயம்.)

இதை ஆர்வ ஆர்வமாகப் படித்துவிட்டு படுத்ததில் ஏற்பட்டதுதான் இந்த பாம்புக் கனவு பாதிப்பு.

என் பர்சனல் கனவ ஏன் உங்ககிட்ட பகிர்ந்து கொண்டேன் என்றால்... இதைப் படித்ததும் உங்களுக்கு அதுமாதிரி வரக்கூடாது என்பதற்காகத்தான்.

சரி, நீங்க புடிங்க... சாரி, படிங்க...

நான் புறப்படறேன்...

அன்புடன்

ஜி.அசோகன்