8

தென் அமெரிக்காவின் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப் பெரிய பாம்பினம் என்றால் அது அனகொண்டாதான். நன்கு வளர்ந்த ஒரு அனகொண்டா பாம்பு முப்பது அடி நீளம் வரை இருக்கும். எடை இருநூறு கிலோ. ஆடு, மான், முதலை போன்றவற்றை சுற்றி வளைத்து எலும்புகளை நொறுக்கிய பின் அப்படியே விழுங்கும். எல்லா உயிரினங்களிலும் ஆண்தான் வலிமை மிக்கதாக இருக்கும். ஆனால் அனகொண்டா பாம்புகளில் பெண் அனகொண்டா பாம்புகள் ஆண் இனத்தைவிட ஐந்து மடங்கு பெரியவை. அனகொண்டாவின் கண்களும், மூக்குத் துவாரங்களும் தலையின் உச்சியில் அமைந்திருப்பதால், அவை தண்ணீரில் மூழ்கியிருக்கும்போது அவற்றின் கண்களும், மூக்குத் துளைகளும் நீர்மட்டத்திற்கு மேலே இருக்கும். அனகொண்டா விஷமற்றது. நாம் பார்க்கும் சாதாரண பாம்புகள் முட்டையிட்டு அதன் மூலம் குட்டிகளைப் பெற்றுக் கொள்பவை. ஆனால் அனகொண்டா பாம்புகள் முட்டையிடாமலேயே குட்டிகளைப் பிரசவிக்கும். ஆடு, மாடு போன்ற பாலூட்டி பிராணிகள் போல இந்த அனகொண்டா பாம்புகள் குட்டிகளைப் போடுவதால் இதை எந்த இனத்தில் சேர்ப்பது என்று ஹெர்பெட்டோலாஜிஸ்ட் (herpetologist) வல்லுநர்களுக்கு குழப்பம்.

விநாடிகள் கரைந்து கொண்டிருக்க, யுகன் தன்னுயை இரண்டு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, ஒரு புன்னகையோடு நின்றிருந்தான்.

அமைச்சர் நல்லியக் கோடனார் தன் முகத்தில் இருந்த சீற்றம் சிறிதும் குறையாமல், அவனை நெருங்கி ஒரு உக்கிரமான பார்வை பார்த்தார். யுகன் அவருடைய கோபத்தைப் பொருட்படுத்தாமல் நிதானமான குரலில் கேட்டான்:

“என்ன அமைச்சரே... எதற்காக என் மீது இந்த அனலான பார்வை...?”

“எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.”

“என்ன சந்தேகமாய் இருக்கிறது?”

“உண்மையிலேயே நீ யார்?”

“ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேனே நான் ஒரு குதிரை வியாபாரி என்று...”

“பார்த்தால் அப்படித் தெரியவில்லை.”

“வேறு எப்படித் தெரிகிறது அமைச்சரே?”

“உன்னைப் பார்த்தால் இந்தக் குதிரைக்கு சொந்தக்காரன்போல் என் மனதுக்குத் தோன்றவில்லை...”

“குதிரையைத் திருடிக் கொண்டு வந்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா?”

“என்னுடைய அனுமானத்தை நீ அப்படியே சொல்லிவிட்டாய். இந்தக் குதிரை உனக்கு எப்படி கிடைத்தது?”

யுகன் ஒரு சிறிய புன்னகையோடு அமைச்சரையே பார்த்தான்.

“நீங்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நம்ப வேண்டும்.”

“முதலில் நீ உன்னுடைய பதிலைச் சொல்!”

“இந்த வெண் புரவியை எனக்குக் கொடுத்தது ஒரு சித்தர்.”

அமைச்சரின் புருவங்கள் உயர்ந்தன.

“சித்தரா?”

“ஆமாம்... அசுவமேத சித்தர். அதோ... அந்த அடர்ந்த கானகத்தில் உள்ள ஒரு குகைதான் அவருடைய இருப்பிடம். நான் அவரிடம் ஊழியம் புரியும் வேலையாளாய் இருந்தேன். சென்ற பௌர்ணமியன்று அவர் ஒரு குகையில் பூமிக்குக் கீழே ஜீவசமாதி அடைந்துவிட்டார். ஜீவசமாதி அடைவதற்கு முன்பு அவர் எனக்கு இந்த வெண்புரவியைப் பரிசாகக் கொடுத்தார். அசுவமேத சித்தர் இந்த வெண்புரவியில் ஏறித்தான் கானகத்தில் சஞ்சாரம் செய்வார். இந்தப் புரவி எனக்குக் கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம்.”

யுகன் சொல்லச் சொல்ல அமைச்சர் நல்லியக் கோடனார் அவனை ஒரு நம்பாத பார்வை பார்த்தார்.

“நீ சொல்வது உண்மையா?”

“இதில் பொய்யிற்கு இடமில்லை... முற்றிலும் உண்மை.”

“பின் எதற்காக இந்தக் குதிரையை சந்தையில் விற்கப் போவதாக பொய் சொன்னாய்?”

“நான் பொய் சொல்லவில்லை அமைச்சரே... உண்மையிலேயே இந்தக் குதிரையை சந்தையில் விற்கத்தான் நான் சென்று கொண்டிருந்தேன்.”

“சரி, சந்தையில் விற்கப் போன நீ எதற்காக மன்னருக்கு பரிசாகத் தருவதாக சொன்னாய்? அவர்தான் உன்னுடைய இந்தக் குதிரைக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக சொன்னாரே? அந்தப் பொற்காசுகளை வாங்கிக் கொண்டு குதிரையை அவரிடம் ஒப்படைக்க வேண்டியதுதானே?”

“நான் இந்தக் குதிரையை பொன் பொருளுக்காக விற்கக் கூடாது என்பது அசுவமேத சித்தரின் கட்டளை. நான் கேட்கும் கேள்விக்கு யார் சரியான பதிலைச் சொல்கிறார்களோ, அவர்களிடம்தான் இந்தக் குதிரையை ஒப்படைத்துவிட வேண்டும் என்று சித்தர் எனக்குப் போட்ட நிபந்தனையைத்தான் நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்.”

அமைச்சர் சில விநாடிகள் மௌனமாய் இருந்துவிட்டு அந்தக் கேள்வியைக் கேட்டார்:

“சரி... இப்போது குதிரையை ஏன் விற்கிறாய்? உன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?”

“என்னால் இந்தக் குதிரையை பராமரிக்க முடியவில்லை. இதனை சரியானபடி பராமரிக்க முடியாவிட்டால் அது நாளடைவில் நலிவுற்று அதனிடம் இருக்கும் சிறப்பம்சங்கள் காணாமல் போய்விடும். அதனால்தான் குதிரையை ஒரு தக்க நபரிடம் சேர்ப்பிக்க நினைத்து சந்தைக்கும் புறப்பட்டேன். மன்னர் இந்தக் குதிரையைப் பார்த்துவிட்டு விருப்பப்பட்டதால் நான் அவரிடம் கேள்வியைக் கேட்க வேண்டியதாயிற்று. இந்தக் குதிரை அரசரிடம் இருந்தால் நல்லது என்று நினைத்தேன்.”

“நீ இப்போது சொன்னதையெல்லாம் என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.”

யுகன் சிரித்தான்.

“நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் அமைச்சரே. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.”

“சரி... அந்தக் கேள்வியை மறுபடியும் ஒரு தடவை சொல். எனக்குப் பதில் தெரிகிறதா என்று பார்ப்போம்.”

யுகன் சொல்ல ஆரம்பித்தான்: “ஒரு இடத்தில் மிகப் பெரிய கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றின் அருகிலேயே ஏழு சிறிய கிணறுகளும் இருக்கின்றன. பெரிய கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதையும் எடுத்துக் கொட்டினால் ஏழு சிறிய கிணறுகளும் நிரம்பிவிடும். ஆனால் அந்த ஏழு சிறிய கிணறுகளில் உள்ள மொத்தத் தண்ணீரையும் எடுத்து ஊற்றினாலும் அந்த பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை. ஏன்?”

அமைச்சர் சில விநாடிகள் தீவிரமான யோசனையில் இருந்துவிட்டு தலையை அசைத்தார். அவர் முகம் இறுகிப் போயிருந்தது.

“எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கேள்வி கேட்ட உனக்கு கேள்விக்கான பதில் தெரியுமா?”

“தெரியும் அமைச்சரே...! எனக்கு பதில் தெரிந்த காரணத்தால்தான் கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். உங்கள் மன்னர் ஞான தியானம் செய்யப் போயிருக்கிறார். அவர் என்னிடம் கேட்டிருந்த ஒரு நாழிகை அவகாசம் முடிய சிறிது நேரமே இருக்கிறது. மன்னர் என்னுடைய கேள்விக்கான பதிலோடு வரப் போகிறாரா... இல்லை... குதிரைக்கு புல் கொய்து போடும் பணியைச் செய்யப் போகிறாரா... என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

யுகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தொலைவில் ஒரு பாறையின் உச்சியில் இருந்து மன்னன் பிரகதத்தன் இறங்கி வந்து கொண்டிருந்தான். அமைச்சர் ஆர்வமானார், உற்சாகமானார்.

“அதோ...! மன்னர் வந்துவிட்டார்”