9

விஷமற்ற பாம்புகளில் சாரைப் பாம்பும் ஒன்று. சாரைப் பாம்பின் ஆங்கிலப் பெயர் Ptyas Mu Osus (Indian Rat Snake) என்பதாகும். சாரைப் பாம்பின் கழுத்தைவிட தலையின் அளவு பெரியது. கண்கள் பெரிய அளவோடும் கண்ணின் மணிகள் (Pupil of the Eyes) வட்டமாகவும் இருக்கும். சாரைப் பாம்பின் செதில்கள் வழவழப்பாகவும் மேல் வரிசை இணைப்புகளோடும் காணப்படும். உடலின் அடிப்பகுதியில் தெளிவான கரும்பட்டைகள் காணப்படும். மிக வேகமாக நகரக் கூடியது. பகல் நேரத்தில் மட்டுமே வெளியே வந்து சற்றும் பயமில்லாமல் எலி வலைகளையும், கரையான் புற்றுகளையும் தேடி அலையும். தவளை, ஓணான், பறவை, எலி, வௌவால்கள் போன்ற தனக்கான இரைகளைப் பார்த்துவிட்டால் ஒரே பாய்ச்சல்தான்.

தன் இரையை சாரைப் பாம்புகள் நெரித்துக் கொல்வதில்லை. மாறாக அவை நகர இயலாமல் போகும் வரை இரையை அழுத்திக் கொன்று பின் அவற்றை முழுதாக விழுங்கிவிடுகின்றன. சாரைப் பாம்புகள் கொத்தினால் கடி வலி மிகுந்து காணப்பட்டாலும் அது விஷமற்றது என்பதால் உயிர்க்கு எந்த ஒரு ஆபத்தும் இருக்காது.

ந்தோஷ் அந்த கருநாகப் பாம்பின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் செம்மலை கொஞ்சம் பயத்தோடு குரல் கொடுத்தார்.

“ஒரு பாம்போட போட்டோவை எதுக்காக மாட்டி வெச்சிருக்காங்கன்னு தெரியலை ஸார்.”

கான்ஸ்டபிள் விஜயன் குறுக்கிட்டு சொன்னார்:

“ஸார்... இந்த கருநாகபுரம் கிராமத்துல இருக்கிற ஒரு சில குடும்பங்கள் பாம்பு போட்டோவை வெச்சு, நாக பஞ்சமி அன்னிக்கு பூஜை பண்ணுறதைப் பார்த்திருக்கேன். அதுமாதிரி இந்தக் குடும்பமும் பூஜை பண்ணிட்டு வந்து இருக்கலாம் ஸார்...”

சந்தோஷ் அந்த போட்டோவினின்றும் பார்வையை விலக்காமல் செம்மலையிடம் கேட்டார்:

“நீங்க இப்பத்தான் இந்தப் போட்டோவை முதல் தடவையாய் பார்க்கறீங்களா?”

“ஆமாம் ஸார்.”

“கருநாகபுரம் சம்பந்தப்பட்ட அந்த வழக்கு ஃபைலில் இப்படியொரு பாம்பு போட்டோ இருந்தது பற்றி மென்ஷன் செய்யப்படவே இல்லையே?”

“ஒரு வேளை மென்ஷன் பண்ண மறந்து போயிருக்கலாம் ஸார்.”

“நோ” சந்தோஷ் தீர்க்கமாய் தலையாட்டினார். தொடர்ந்து பேசினார்:

“அதெப்படி மறக்க முடியும்...? என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த பாம்பு போட்டோ ஒரு முக்கியமான தடயம். பதிமூணு பேர் மர்டர் சம்பந்தமாய் முதல் முதல்ல எஃப்.ஐ.ஆர். போட்டது இன்ஸ்பெக்டர் லூயிஸ் தங்கராஜ்தானே?”

“ஆமா... ஸார்...!”

“அவரோட செல்போன் நெம்பர் உங்ககிட்ட இருக்கா?”

“இருக்கு... ஸார்...”

“நான் அவர்கிட்ட பேசணும். அவர் இப்ப எந்த ஊர் ஸ்டேஷன்ல இருக்கார்?”

“விழுப்புரம் ஸார்.”

“அவர்க்கு... போன் போட்டு பேசுங்க... அவர்கிட்ட நான் இங்கே வந்திருக்கிற விபரத்தை சொல்லிட்டு என்கிட்ட போனைக் குடுங்க.”

“எஸ் ஸார்...” என்று சொல்லி தலையாட்டிய செம்மலை தன்னுடைய செல்போனை எடுத்து லூயிஸ் தங்கராஜை தொடர்பு கொண்டு ஒரு நிமிஷ நேரத்திற்குள், சந்தோஷ் பற்றின விபரங்களைச் சொல்லிவிட்டு செல்போனை சந்தோஷிடம் நீட்ட அவர் வாங்கிப் பேசினார்.

“ஹலோ லூயிஸ்!”

செல்போனின் மறுமுனையில் லூயிஸின் குரல் உற்சாகமாய்க் கேட்டது.

“ஸார்...! வணக்கம். இன்ஸ்பெக்டர் செம்மலை உங்களைப் பற்றிச் சொன்னார். அந்த கருநாகபுரம் கிராமம் பதிமூணு பேர்களோட ‘மிஸ்ட்ரி டெத்’ ஃபைலை ரீ ஓப்பன் பண்ணி, மறுபடியும் நீங்க இன்வெஸ்டிகேட் பண்ணப் போறதாய் சொன்னார். நான் செவ்வரளிப்பட்டி ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டராய் இருந்த வரைக்கும் என்னால் அந்தக் கேஸை நகர்த்த முடியலை. நீங்க இப்போ சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து வந்திருக்கீங்க. உங்களால கண்டிப்பா முடியும்ன்னு நினைக்கிறேன் ஸார். விஷ்... யூ... ஆல்... த... பெஸ்ட். அந்தக் கேஸைப் பத்தின விபரங்கள் ஏதாவது தேவைப்பட்டா சொல்லுங்க ஸார். ஐ... வில்... பி... அட்... யுவர்... சைடு”

“தேங்க்ஸ் ஏ லாட் லூயிஸ். நானும் இன்ஸ்பெக்டர் செம்மலையும் இப்போ அந்த கருநாகபுரம் கிராம வீட்டுக்குள்ளே எஸ்.ஓ.ஸி. பார்க்கிறதுக்காக வந்தோம். சீல் வெச்சிருந்த பூட்டை உடைச்சு வீட்டுக்குள்ளே போய்ப் பார்த்தபோது, கேஸ் ஃபைலுக்குள் இல்லாத ஒரு விஷயம் இங்கே இருக்கிறது தெரிய வந்தது.”

“ஈஸிட்...! அது என்ன ஸார்?”

“வீட்டுக்குள்ளே மூணாவது அறையைக் கடக்கும்போது எதிர் சுவரில் கருநாகப் பாம்போட போட்டோ ஒண்ணு மாட்டப்பட்டிருக்கு.”

“பாம்போட போட்டோவா?”

“ஆமா...”

“நான் எஸ்.ஓ.ஸி. பார்த்து எஃப்.ஐ.ஆர். போடும்போது அப்படியொரு போட்டோ அந்த வீட்டுக்குள்ளே இருந்த மாதிரி எனக்குத் தெரியலை ஸார்.”

“ஆர்... யூ... ஷ்யூர்?”

“எஸ்... ஸார்...”

“நீங்க இவ்வளவு தீர்மானமாய் சொல்லும் போது சீல் வெச்சு பூட்டின வீட்டுக்குள்ளே யார் உள்ளே வந்து பாம்போட போட்டோவை மாட்டியிருக்க முடியும்?”

“ஸார்... ப்ளீஸ் டூ ஒன் திங்க்.”

“என்ன... சொல்லுங்க லூயிஸ்?”

“அந்த பாம்போட போட்டோவை ‘ஸ்நேப்’ பண்ணி எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க முடியுமா...?”

“இதோ... ஒரு நிமிஷத்துக்குள்ளே அனுப்பறேன்.”

சொன்ன சந்தோஷ் அடுத்த ஒரு நிமிஷத்திற்குள் பாம்பின் போட்டோவை லூயிஸின் ‘வாட்ஸ் அப்’புக்கு அனுப்பி வைக்க, அவர் ‘வாட்ஸ் அப்’ பைப் பார்த்துவிட்டு உடனே பேசினார்.

“ஸார்... நான் அந்த வீட்டை எஸ்.ஓ.ஸி. பார்த்து எல்லாத் தடயங்களையும் நோட் பண்ணி, வீட்டுக்கு சீல் வெச்சு பூட்டும்போது பாம்போட போட்டோ வீட்டுக்குள்ளே இல்லை ஸார். அப்படியிருந்திருந்தா அந்தப் போட்டோ நிச்சயமாய் என்னோட பார்வையில் பட்டிருக்கும்.”

“இப்போ வீட்டுக்குள்ளே போட்டோ இருக்குன்னா எப்படி அது சாத்தியம்?”

“ஐ ஹவ் நோ ஐடியா ஸார்.”

“சீல் வெச்சு பூட்டின பூட்டு அப்படியே இருக்கும்போது யார் உள்ளே வந்து போட்டோவை மாட்டிட்டு போயிருக்க முடியும்?”

“ஸார்... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இந்த கேஸ் ஃபைல் ஏற்கெனவே மிஸ்ட்ரி டெத் கேட்டகிரியில் இருக்கு. இப்ப நீங்க சொல்ற இந்த பாம்பு போட்டோ விஷயம் அப்நார்மலா தெரியுது...!”

சந்தோஷ் மெல்லச் சிரித்தார்.

“இது அப்நார்மல் விஷயம் இல்லை லூயிஸ். பதிமூணு பேர் மரணித்த இந்த கேஸை டைவர்ட் பண்ண யாரோ முயற்சி பண்றாங்கன்னு நினைக்கிறேன். பூட்டியிருக்கிற இந்த வீட்டை அவங்க பிரேக் பண்ணி உள்ளே வந்து போட்டோவை மாட்டிட்டு போயிருக்கலாம். மறுபடியும் வீட்டைப் பூட்டி பூட்டுக்கு சீல் வெச்சுட்டுப் போயிருக்கலாம். அப்படியில்லேன்னா இந்த வீட்டுக்கு உள்ளே வர வேறு ஏதாவது ரகசிய வழி இருக்கலாம்...! இட்ஸ் ஓ.கே. லூயிஸ்... இந்த கருநாகபுரம் கிராம கேஸ் ஒரு சாதாரண கேஸ் இல்லை என்கிற விபரம் இப்போ எனக்குள்ளே ஊர்ஜிதமாயிடுச்ச... இனிமே நான் டீல் பண்ணிக்கிறேன். வேற ஏதாவது விபரம் தேவைப்பட்டா உங்களை காண்டாக்ட் பண்றேன். தேங்க்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்ஸ்.”

சந்தோஷ் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தார். பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளை திரும்பிப் பார்த்தார்.

“விஜயன்...”

“ஸார்...”

“அந்தப் போட்டோவை கழட்டுங்க.”