10

பாம்புகளில் கொடிய பாம்பு கட்டுவிரியன். இதன் பிராணியியல் பெயர் Bungarus Cheruleus என்பதாகும். இப்பாம்பு பெரு நான்கு என்று அழைக்கப்படும் பாம்புகளில் ஒன்று. இது தமிழில் கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதன் உடலின் நிறம் கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். இதன் நீளம் சராசரியாக ஒரு மீட்டர். தன் முதுகெலும்பு நெடுக அறுகோண வடிவிலான பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். வால்களின் முடிவில் வெண்ணிறப் பட்டைகள் போன்ற வரிகள் காணப்படும். கட்டுவிரியன் பாம்புகளுக்கு பசியுணர்வு அதிகம். தவளை, பல்லி போன்ற இரைகள் கிடைக்காத வேளைகளில் தங்களுடைய குட்டிகளையே விழுங்கி பசியைத் தீர்த்துக் கொள்ளும் இயல்பு கொண்டவை. பகல் நேரங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தலையை உள்ளே வைத்து உடலை பந்து போல் சுருட்டிக்கொள்கின்றன.

ரசன் பிரகதத்தன் சலனமில்லாத பார்வையொன்றைப் பார்த்தபடி யுகனை நெருங்க, அவன் தலையைச் சாய்த்து வணங்கினான்.

“என் கேள்விக்கு தங்களிடம் பதில் இருக்கிறதா அரசே?”

பிரகதத்தன் பதில் ஒன்றும் பேசாமல் மௌனம் காக்க, அமைச்சர் நல்லியக்

கோடனார் லேசாய் பதட்டப்பட்டார்.

“அரசே! நிச்சயமாக யுகன் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கும்... சொல்லுங்கள்”

“இல்லை அமைச்சரே! நான் ஞான தியானத்தில் அமர்ந்தும் யுகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய அளவுக்கு தெளிவான விளக்கத்தைப் பெற முடியவில்லை... நான் இந்த குதிரை வியாபாரி யுகனிடம் தோற்றுவிட்டேன். தோல்வியை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொன்ன பிரகத்தன் யுகனிடம் திரும்பினான்.

“தெய்வாம்சம் பொருந்திய இந்த வெண்ணிறப் புரவியைப் பெறும் பேறு எனக்கில்லை. அதற்கு உணவாக பசும்புல் பறித்து வந்து ஊட்டும் பணியையாவது நான் மகிழ்வோடு மேற்கொள்கிறேன்.”

அரசன் பிரகதத்தனை பவ்யமாய் வணங்கி வழி மறித்தான் யுகன்.

“சற்றே பொறுங்கள் அரசே!”

“என்ன?”

“நான் கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். நான் கேட்ட கேள்வியும் சற்று கடினமானதும்கூட. எனவே உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கிறேன்.”

பிரகதத்தனின் முகத்தில் பெருவியப்பு சூழ்ந்தது.

“என்ன சொன்னாய்...? எனக்கு இன்னொரு வாய்ப்பா?”

“ஆம்... அரசே. நான் கேட்ட கேள்வி கடினமாய் இருந்தது என்பதால், சற்று சுலபமாக நீங்கள் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு இன்னொரு கேள்வியைக் கேட்கப் போகிறேன். நீங்கள் சம்மதித்தால் அந்தக் கேள்வியைக் கேட்கிறேன். உங்களுக்கு அதில் சம்மதமில்லையென்றால் வேண்டாம்.”

பிரகதத்தனின் முகம் வெளிச்சமாய் ஒளிர்ந்தது.

“யுகனே! அந்த வெண்புரவியை அடையும் பாக்கியம் இன்னமும் என்னைவிட்டுப் போகவில்லை என்று நினைக்கிறேன். நீ உன்னுடைய இரண்டாவது கேள்வியைக் கேள்.”

“இதோ கேட்கிறேன் அரசே! ஒரு யானை அது தன் முதுகின்மேல் வைத்த அம்பாரியுடன், ஒரு சிறிய ஊசியின் துவாரத்தில் நுழைய முயற்சிசெய்தது. பல நாழிகைகள் முயற்சிக்குப் பின் அதன் உடல் முழுவதும் அந்த ஊசியின் துவாரத்தில் நுழைந்துவிட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் நுழையவில்லை. ஏன்? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு என்னுடைய வெண் புரவியை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.” மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியபடி பேசி முடித்தான் யுகன்.

இப்போது மன்னன் பிரகதத்தனின் முகம் கோபத்தில் சற்றே சிவக்க, யுகனை ஏறிட்டான். வார்த்தையில் கடுமையைக் கலந்து கேட்டான்.

“இதுதான் நான் பதில் சொல்வதற்கேற்ற சுலபமான கேள்வியா?”

“ஏன் அரசே! இந்தக் கேள்வி நான் கேட்ட முதல் கேள்வியைவிட கடினமாகத் தோன்றுகிறதா தங்களுக்கு?”

“மிகமிகக் கடினமான கேள்வி இது. ஊசியின் துவாரத்திற்குள் ஒரு எறும்பு நுழைவதே பெரும்பாடு. இதில் அம்பாரி வைத்த யானை எப்படி நுழையும்?”

“நான் இப்படி பேசுவதற்காக மன்னிக்க வேண்டும் அரசே...! உங்களுக்கு ஒரு கேள்வி கடினமாக இருந்தால் மற்றவர்களுக்கும் கடினமாக இருக்கும் என்று நீங்களாகவே நினைத்துக் கொள்வது மிகவும் தவறு!”

“உனக்கு இந்த இரண்டாவது கேள்விக்கு விடை தெரியுமா?”

“முதல் கேள்விக்கும் விடை தெரியும். இரண்டாவது கேள்விக்கும் விடை தெரியும்... நீங்களும் சற்றே சிந்தித்தால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் உரிய பதிலை சொல்லிவிட முடியும்”

அமைச்சர் நல்லியக் கோடனார் பிரகதத்தனை நெருங்கி மெல்லிய குரலில், “மன்னா...! சற்று தனியே வாருங்கள்” என்றார்.

இருவரும் யுகனை விட்டு விலகி ஒரு மரத்தின் மறைவுக்குப் போனார்கள்.

பிரகதத்தன் பெருமூச்சோடு அவரைப் பார்த்தான்.

“என்ன அமைச்சரே!”

“மன்னா! இந்தக் கேள்விகளைக் கேட்கும்போது பதில் சொல்வதற்கு கடினமாக இருப்பது போல் தோன்றினாலும் இதில் ஏதோ உட்பொருள் இருப்பது தெரிகிறது”

“உட்பொருள் என்றால்?”

“மறைமுகமான பதில். அதாவது யானை என்றால் யானையே அல்ல. யானைக்கு பதிலாக வேறு ஏதோ ஒன்று!”

“அமைச்சரே... இப்போதுதான் எனக்குப் புரிகிறது. யுகன் கேட்ட கேள்வியை நாம் உள்வாங்கிக் கொண்டு பதிலை வேறு கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்கிறீர்கள்?”

“அதேதான் மன்னா!”

“இனி எனக்கு விடை கண்டுபிடிப்பது சுலபம். என்னுடைய ஞான தியானத்தை நான் சற்று சிரத்தையுடன் மேற்கொண்டால் யுகன் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் எனக்கு பதில் கிடைத்துவிடும்.”

“முயற்சியுங்கள் மன்னா... கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.”

பிரகதத்தன் உற்சாகம் நிரம்பிய மனதோடு யுகனிடம் வந்தான்.

“யுகனே!”

“சொல்லுங்கள் அரசே!”

“எனக்கு இன்னும் ஒரு நாழிகை நேரம் கொடுத்தால் நீ கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடுகிறேன்.”

யுகன் மீண்டும் தன் தலையைத் தாழ்த்தி வணங்கினான்.

“தேவைப்பட்ட நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அரசே! கேள்விகளுக்குரிய பதில்களை நீங்கள் சரியாக சொல்லிவிட்டால் உங்களைக் காட்டிலும் நான்தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். உங்களைப் போன்ற ஒரு மாமன்னர்க்கு என்னுடைய வெண் புரவியைப் பரிசளிக்கவே நான் விரும்புகின்றேன்.”

“நன்றி யுகனே!”

பிரகதத்தன் சொல்லிவிட்டு மறுபடியும் ஞான தியானம் செய்வதற்காக பக்கத்தில் இருந்த பாறைத்திட்டை நோக்கி நடந்தான்.