13
நாகங்களில் ராஜநாகம் பெயர்க்கு ஏற்றாற்போல் 15 அடி முதல் 18 அடி நீளம் கொண்டவையாக இருக்கின்றன. பெண் ராஜநாகமானது தனது நீள உடல் முழுவதையும் வட்டமாக சுருட்டிக் கொண்டு அதன் உள்ளே முட்டைகளை இட்டு பாதுகாப்பான முறையில் அடைகாக்கின்றன. முட்டைகளிலிருந்து குட்டிகள் வெளியே வருவதற்கு 280 டிகிரி அளவுக்கு வெப்பம் தேவைப்படுவதால், தன்னுடைய முட்டைகளின் மேல் காய்ந்த இலைச்சருகுகளைப் போட்டு வைத்துக் கொள்ளும்.
முட்டைகளில் இருந்து குட்டிகள் வெளியே வந்ததும் அவை தாயைக் கண்டு கொள்வது இல்லை. தாயும் குட்டிகளை விட்டு விட்டு உடனடியாய் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றுவிடும். ஒரு பெரிய ராஜ நாகத்துக்கு இருக்கிற அதே விஷமும், வீரியமும்தான் குட்டிகளுக்கும் இருக்கும். எனவே குட்டிப் பாம்புகள் தன்னிடம் இருக்கும் கொடிய விஷத்தை ஆயுதமாகக் கொண்டு துணிச்சலாய் இரை தேட ஆரம்பித்துவிடும்.
சந்தோஷும், செம்மலையும் ஜன்னலின் வழியாக அந்த வேப்ப மரத்தையே பார்த்துக் கொண்டிருக்க, கான்ஸ்டபிள்கள் இருவரும் மரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். செம்மலை ஒரு பெருமூச்சோடு சொன்னார்:
“ஸார்! இந்த கருநாகபுரம் கிராமம் கேஸை நீங்க ரீஓப்பன் பண்ணி விசாரிக்க வந்தது, யார்க்கோ பிடிக்கலைன்னு நினைக்கிறேன். ஒரு பெண் மரத்துக்குப் பின்னாடி நின்னுட்டு ஒரு பைனாக்குலர் வழியா இந்த வீட்டைப் பார்த்துட்டிருக்கான்னா, அவகிட்டே ஏதோ ஒரு தப்பு இருக்குன்னு அர்த்தம்”
செம்மலை சொல்லிக் கொண்டிருக்கும்போது அவருடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.
கான்ஸ்டபிள் விஜயன்.
செம்மலை செல்போனை எடுத்து காதில் வைத்தார்.
“சொல்லு... அந்தப் பெண்ணைப் பார்த்தியா?”
“நீங்க சொன்ன மாதிரி எந்த ஒரு பொண்ணும் இங்கே இல்ல ஸார்”
“என்னது இல்லையா?”
“ஆமா ஸார்”
“யோவ்... நல்லா பாருங்கய்யா... அந்தப் பொண்ணு அதே ஏரியாவில் எங்கேயாவது புதர்க்குப் பின்னாடியோ, இல்லைன்னா வேற ஏதாவது ஒரு மரத்துக்குப் பின்னாடியோ மறைஞ்சு உட்கார்ந்திருக்கலாம்...”
“ஸார்... இந்த ஏரியா ஒரு பொட்டல் வெளி. வேற மரங்களே இல்லை.”
“அவ அங்கதான் இருக்கணும்! நானும் ஸாரும் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி அந்தப் பொண்ணைப் பார்த்தோம். நல்லாத் தேடுங்க. அவ்வளவு சீக்கிரத்துல அவ அந்த இடத்தைவிட்டு போயிருக்க முடியாது.”
“பார்த்துடறோம் ஸார்...”
கான்ஸ்டபிள் விஜயன் மறுமுனையில் செல்போனை அணைத்துவிட செம்மலை சந்தோஷை ஏறிட்டார். எரிச்சலான குரலில் சொன்னார்.
“ரெண்டு காப்ஸும் புது ரெக்யூர்மெண்ட் ஸார். ஒரு வேலையை ஒழுங்கா பார்க்கமாட்டாங்க.”
“கான்ஸ்டபிள்ஸ் வர்றதைப் பார்த்துட்டு அந்தப் பொண்ணு அங்கிருந்து சாமர்த்தியமா ‘எஸ்கேப்’ ஆயிருக்கலாம்”
“எப்படியும் மடக்கிடலாம் ஸார். அவகிட்ட ஏதோ தப்பு இருக்கப் போய்த்தான் கான்ஸ்டபிள்ஸைப் பார்த்ததும் ஓடிட்டா.” செம்மலை சொல்லச் சொல்லவே...
“ஸாரி... ஸார். நான் தப்பான பெண் கிடையாது.”
பின்பக்கம் பெண் குரல் கேட்க சந்தோஷும் செம்மலையும் திடுக்கிட்டவர்களாய் திரும்பிப் பார்த்தார்கள்.
மஞ்சள் நிற சுடிதாரும் சிவப்பு துப்பட்டாவும் அணிந்த அந்த இளம் பெண் நின்றிருந்தாள். மார்புக்கு குறுக்கே கையைக் கட்டியிருந்தாள்.
அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம். மாநிறம். திருத்தமான முகம். கண்களுக்கு கொடுத்திருந்த மெலிதான ஸ்பெக்ஸ் அவளுடைய வட்டமான முகத்துக்கு கூடுதல் அழகைக் கொடுத்தது. நெற்றியில் மஞ்சள் ஸ்டிக்கர் பொட்டு.
சந்தோஷ், செம்மலை இருவரும் அவளை வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் இருவரையும் நெருங்கினாள்.
“ஸார்... என்னோட பேரு இனிதா. சொந்த ஊர் திருவண்ணாமலை. தொல்லியல் மற்றும் ஆவணக் காப்பக ஆராய்ச்சித் துறை படிப்பில் நான் எம்.ஃபில் பண்ணிட்டிருக்கேன். முக்கியமா ஓலைச்சுவடி, சித்தர் நம்பிக்கை ரகசியங்கள் பற்றிய ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரை பண்ணிட்டிருக்கேன். அந்த ஆய்வுக் கட்டுரைக்கான விஷயங்கள் இந்த கருநாகபுரம் கிராமத்தில் கிடைக்கும்ன்னு ஒரு புத்தகத்துல படிச்சேன். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் இந்த கிராமத்திற்கு வந்தேன். இங்கே ஹோமியோபதி டாக்டராய் இருக்கிற யாதகிரி என்னோட தாத்தாவுக்கு தெரிஞ்சவர். அவர் வீட்லதான் நான் தங்கியிருக்கேன். இது என்னோட ஐ.டி. கார்டு.”
சந்தோஷ் அந்தப் பெண் இனிதாவை ஒரு மெல்லியப் புன்னகையோடு பார்த்தபடி அவள் நீட்டிய ஐ.டி. கார்டை வாங்கிப் பார்த்தார். வாய்விட்டு படித்தார்:
அ. இனிதா
த/பெ தா. அருணகிரி
(தொல்லியல், மற்றும் ஆவணக் காப்பக ஆராய்ச்சித்துறை மாணவி)
முனைவர் பட்டத்துக்கான மேற்படிப்பு வரிசை எண் 115.
பண்பாட்டு பல்கலைக்கழகம். திருவண்ணாமலை.
கார்டை முழுவதும் படித்து முடித்த சந்தோஷ், அதை அவளிடம் நீட்டிக் கொண்டே கேட்டார்:
“ஓ.கே. மிஸ் இனிதா! இவ்வளவு வெளிப்படையாய் இருக்குற நீங்க ஏன் மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சு நின்னுகிட்டு பைனாக்குலர் வழியா இந்த வீட்டைப் பார்க்கணும்?”
“ஸார்! இந்த கருநாகபுரம் கிராமத்துல நான் ரெண்டு நாளா சுத்தி சுத்தி வந்துட்டிருக்கேன். பொதுவா இங்கேயிருக்கிற மக்கள் யாரோடும் எதுவும் அநாவசியமா பேசாமே அவங்கவங்க வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. இந்தக் கிராமத்தைப் பத்தின ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தின ஒரு ஆன்மீக உண்மை யார்க்கும் தெரியலைங்கிறது என்னோட ஆதங்கம்.”
“ஆன்மீக உண்மையா?”
“ஆமா ஸார்...”
“என்ன உண்மை அது?”
“இந்தக் கிராமத்துக்கு கருநாகபுரம் கிராமம்ன்னு பெயர் வந்ததுக்கு என்ன காரணம்ன்னு உங்களுக்குத் தெரியுமா ஸார்?”
“தெரியாது.”
“காரணம் என்னவாயிருக்கும்ன்னு கெஸ் பண்றீங்க?”
“ஏதாவது ஒரு கால கட்டத்துல இந்த கிராமத்துல கருநாகப் பாம்புகள் அதிகமாய் இருந்து இருக்கலாம்...”
“காரணம் அதுவல்ல ஸார்.”
“அப்புறம்?”
“ஒரு சித்தரோட ஜீவசமாதி இந்த கிராமத்துல இருக்கு.”
“சித்தரோட ஜீவசமாதியா?”
“ஆமா ஸார்... அந்த சித்தரோட பேரு கரு அரவச் சித்தர். தமிழ்ல பாம்புக்கு இன்னொரு பேரு அரவம். கரு அரவம்ன்னா கருநாகப் பாம்பைக் குறிக்கும்.”
இனிதா சொன்னதைக் கேட்டு, சந்தோஷும், செம்மலையும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
“இது என்ன புதுக்கதை!”
இனிதா ஒரு பெருமூச்சை உஷ்ணமாய் வெளியேற்றிவிட்டு தீர்க்கமான குரலில் சொன்னாள்:
“இது புதுக் கதையில்லை ஸார். ரொம்ப ரொம்ப பழைய கதை. ஆனா உண்மைக் கதை. ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி நடந்த கதை.”
“உண்மைக் கதைன்னா அதுக்கு ஆதாரம் இருக்கணுமே...?”
“இருக்கு ஸார். அந்த ஆதாரத்துக்கு பேரு சித்தர் கடிதம்”
“மிஸ் இனிதா! நீங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை... இந்த சித்தர் பாஷையெல்லாம் எனக்குப் புதுசு”
“புரியும்படியாவே சொல்றேன் ஸார்.” சொன்ன இனிதா தன்னுடைய செல்போனை கையில் எடுத்துக் கொண்டு ‘வாட்ஸ் அப்’ ஆப்ஷனுக்குப் போய் திரையைத் தேய்த்தாள்.
ஒரு படம் உற்பத்தியாயிற்று.
“இதைக் கொஞ்சம் பாருங்க ஸார்”
சந்தோஷ் பார்த்துவிட்டு ‘‘ஏதோ ஓலைச்சுவடி மாதிரி தெரியுது” என்றார்.
“அதேதான் ஸார்... திருவண்ணாமலையில் இருக்கிற சைவ சித்தாந்த மையத்தில் இருக்கிற சிற்றம்பலம் என்கிற ஒரு பெயரிவரை நான் பேட்டி எடுக்கப் போயிருந்தபோது அவர் இந்த பழங்கால ஓலைச்சுவடியைக் கொடுத்து அதுல என்ன எழுதியிருக்குன்னு படிக்கச் சொன்னார் என்னால ஓரளவுக்குத்தான் படிக்க முடிஞ்சுது... உங்களால படிக்க முடியுதான்னு பாருங்க ஸார்.” சொன்ன இனிதா ‘வாட்ஸ் அப்’பில் ஓலைச்சுவடி போட்டோவை ஜூம் செய்து காட்டினாள்.
சந்தோஷ் ஓலைச் சுவடியில் தெரிந்த எழுத்துக்களை உற்றுப் பார்த்தார். தமிழ்
எழுத்துக்கள் வித்தியாசமாய் தெரிந்தாலும் சற்றே புரிந்த மாதிரி இருந்தது.
‘கரு அரவச் சித்தரின் கலி வாக்கு’