17
கண்ணாடிவிரியன் மற்றும் கட்டுவிரியன் இந்த இரண்டு பாம்புகளும் பகலில் தலைகாட்டாமல் இரவில் மட்டுமே இரையைத் தேடி வெளியே வருபவை. கட்டுவிரியனைவிட கண்ணாடிவிரியன் அதிக ஆபத்தானது.
கட்டுவிரியனின் பல், அளவில் சிறியது. ஆனால் கண்ணாடிவிரியன் பாம்பின் பல் அளவில் பெரியது. கண்ணாடிவிரியன் ஒரு மனிதனைக் கடிக்க நேர்ந்தால் அதன் விஷம் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக ரத்தத்தை உறைய வைத்துவிடும் அளவுக்கு வீரியம் படைத்தது. இதன் பல் ஊசி போன்ற கூர்மையான முனையைக் கொண்டிருப்பதால், விஷம் உடனடியாக மனிதனின் ரத்த மண்டலத்திற்குள் கலந்துவிடும். கடித்த நான்கு மணி நேரத்திற்குள் ‘ஆன்டி ஸ்நேக் வீனம்’ என்கிற ஊசியைப் போட்டுக் கொண்டால் ரத்தம் உறைவது தடுக்கப்பட்டு அந்த மனிதன் உயிர் பிழைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
செவ்வரளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன்.
இரவு பதினோரு மணி.
இன்ஸ்பெக்டர் செம்மலைக்கு முன்பாய் உட்கார்ந்திருந்த சந்தோஷ் அவர் நீட்டிய ஃபைல்களை வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு இடது கை விரல்களால் நெற்றியைப் பிடித்துக் கொண்டார்.
“மிஸ்டர் செம்மலை... பதிமூணு பேர் சம்பந்தப்பட்ட மரணங்கள் பற்றிய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்கள் எல்லாமே ஒரே மாதிரியான மெடிக்கல் வார்த்தைகளால் நிரப்பப்பட்டு இருந்தாலும், ஒரே ஒரு டாக்டர் மட்டும் ‘ஸீம்ஸ் டு பி சஸ்பிஸீயஸ்’ன்னு ஒரு வார்த்தை எழுதி அடிக்கோடு போட்டிருக்கார். அதை நோட் பண்ணீங்களா?”
“பண்ணினேன் ஸார்! அந்த டாக்டர் பேரு கதிரொளி. நாத்திகவாதி. கடவுள் நம்பிக்கை அறவே கிடையாது. கொஞ்சம் ‘எக்ஸெண்ட்ரிக்’ டைப் வேற. எந்த ஒரு பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணினாலும் சரி ரிப்போர்ட் கொடுக்குமபோது, அதுல ஒரு குழப்பமான வார்த்தையைப் போட்டுடுவார். தான் ஒரு அதி புத்திசாலின்னு காட்டறதுக்காக இப்படி பண்றார்ன்னு மத்த டாக்டர்ஸ் சொல்றாங்க... இந்த பதிமூணு பேர் மரணங்கள் சம்பந்தப்பட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் டாக்டர் கதிரொளி அப்படிப்பட்ட ஒரு வேலையைத்தான் பண்ணியிருக்கார். ‘என்ன காரணத்துக்காக சந்தேகப்படறீங்க’ன்னு கேட்டா பதில் சொல்லமாட்டார். டிபார்ட்மெண்ட் ரீதியாய் வற்புறுத்திக் கேட்டா ‘போலீஸ் எதுக்கு இருக்கு... கண்டுபிடிங்க’ன்னு சொல்வார். டாக்டர்களில் இப்படியும் ஒருத்தர். நாம என்ன செய்ய முடியும் ஸார்” செம்மலை சொல்ல சந்தோஷ் சில விநாடிகள் யோசனையாய் இருந்துவிட்டு “செம்மலை” என்றார் மெள்ள-
“ஸார்...”
“ஹோமியோபதி டாக்டர் யாதகிரி சொன்ன அந்த கரு அரவச் சித்தர் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க...?”
“அதெல்லாம் பழங்கதை ஸார்... அவர் சொல்லும்போது விஷயம் சுவாரஸ்யமா இருக்கு. ஆனா யோசிச்சு பார்த்தா அவர் சொல்ற வரலாற்றுக் கதைக்கும் இந்த பதிமூணு பேரோட மரணங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்க முடியாது. சித்தர்கள் வாழ்ந்தது உண்மையாய் இருக்கலாம். அவங்க ஜீவசமாதி அடைஞ்ச விபரங்களைக்கூட நம்பலாம். ஆனா இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் சமாதியாகிவிட்ட சித்தர்களுக்கு, இப்போ வாழ்ந்துட்டு இருக்கிற மக்கள் மேல கோபம் வர என்ன காரணம் இருக்கு? எனக்கென்னமோ டாக்டர் யாதகிரி சொன்னது சரியாப்படலை ஸார்!”
சந்தோஷ் கையமர்த்தினார்.
“நோ... நோ... டாக்டர் யாதகிரி சொன்னதை நாம அப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியாது... செம்மலை! நான் கடந்த நாலைஞ்சு நாளா இந்த கிராமத்துல இருக்கிற பல்வேறுதரப்பட்ட மக்களை மறைமுகமாய் விசாரிச்சுப் பார்த்துட்டேன். அப்படி விசாரிச்சுப் பார்த்த அளவில் அந்தக் குடும்பத்துக்கு எதிரிகள் யாருமேயில்லை. அந்தக் கூட்டுக் குடும்பம் கிராமத்தில் இருந்த எல்லார்கிட்டேயும் ஒரு நல்ல உறவை மெய்ன்டைன் பண்ணிட்டு வந்திருக்காங்க. ஸோ... இது மர்டர்ஸாய் இருக்க வாய்ப்பில்லை. இயற்கையான முறையில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு வினைப் பயனின் காரணமாய் இறந்துபோயிருக்காங்கன்னு நினைக்கிறேன்... திஸ் ஈஸ் மை கெஸ் வொர்க்.”
“ஸாரி ஸார்...!”
“எதுக்கு ஸார்?”
“அவங்க இறந்ததுக்கு காரணம் வினைப்பயன்னு நீங்க சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. நீங்க கருநாகபுரம் கிராமத்துக்கு வந்து விசாரணையை ஆரம்பிச்சு, இன்னும் ஒரு வாரம்கூட ஆகலை. அதுக்குள்ளே இந்த கேஸை முடிச்சு ஃபைலை க்ளோஸ் பண்ண நினைக்கறீங்க யாதகிரி சொன்ன சித்தர் வரலாறை மறந்துட்டு, நாம கேஸை வேற ஒரு கோணத்திலிருந்து மூவ் பண்ணினா யூஸ்ஃபுல்லான ரிசல்ட் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்... இப்படி சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும் ஸார்.”
சந்தோஷ் கோபத்தில் லேசாய் முகம் சிவந்தார்.
“லுக் மிஸ்டர் செம்மலை...! கருநாகபுரம் கிராம கேஸை எப்படி டீல் பண்ணி, எப்படி முடிக்கணும்ன்னு எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் எனக்கு சொல்லித்தர வேண்டாம்...! அந்த பதிமூணு பேரும் அடுத்தடுத்து இறந்து போனதுக்கு காரணம் அவங்களுக்கு பரம்பரை பரம்பரையா வந்த தோல் நோய்தான். ஸ்நேக் ஸ்கின் டிஸீஸ் என்கிற அந்த நோய் வினைப்பயனின் காரணமாய்த்தான் வரும்.”
செம்மலை சில விநாடிகள் மௌனமாய் இருந்து விட்டு தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்தார்: “நான் உங்களுக்கு எதிராய் பேசறதா நினைக்க வேண்டாம் ஸார்... பதிமூணு பேர் இறந்து போன அந்த ஃபேமிலியைப் பத்தி இத்தனை நாளும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நேத்து ராத்தி கேள்விப்பட்டேன்.” செம்மலை இப்படி சொன்னதும், சட்டென்று சந்தோஷின் புருவங்கள் உயர்ந்தன.
“என்ன கேள்விப்பட்டீங்க?”
“அந்தக் குடும்பத்துல இருக்கிற சிவராமனோட மகள் கல்பனாவுக்கும், சேரியூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த காளையப்பன் என்கிற இளைஞனுக்கும் இடையே காதல் இருந்திருக்கு...
சிவராமனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. சிவராமன் காளையப்பனோட அம்மா, அப்பாவைப் போய் பார்த்து மிரட்டிட்டு வந்திருக்கார். அந்த அவமானத்தைத் தாங்கிக்க முடியாமே காளையப்பன் கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணியிருக்கான்.”
செம்மலை சொன்னதைக் கேட்டு சந்தோஷ் மெலிதாய் புன்னகைத்தார்.
“இந்த விஷயமும் எனக்கு புதுசு இல்லை. கடந்த நாலைஞ்சு நாளா நான் நடத்தின இன்வெஸ்டிகேஷனில் இந்த கல்பனா காளையப்பன் விவகாரமும் எனக்குத் தெரிய வந்தது. அஞ்சு வருஷத்துக்கு முந்தி நடந்த சம்பவம் இது. காளையப்பன் குடிபோதைக்கு அடிமையானவன். தினமும் ராத்திரி ஃபுல்லா குடிச்சுட்டு வருவான். அப்படி ஒரு நாள் குடிச்சுட்டு வரும்போதுதான் நிலை தடுமாறி கைப்பிடிச் சுவர் இல்லாத கிணத்துல விழுந்து இறந்திருக்கான். சேரியூர் போலீஸ் ஸ்டேஷன்ல இந்த மரணம் ஒரு விபத்தாய் பதிவு பண்ணப்பட்டிருக்கு. காளையப்பனோட அம்மாவும் அப்பாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நோய்வாய்ப்பட்டு இயற்கையான முறையில் இறந்து போயிருக்காங்க. எல்லாத்துக்கும் மேலா காளையப்பன்தான் கல்பனாவை ஒருதலைபட்சமாய் காதல் பண்ணியிருக்கான். இந்த விஷயத்தை கல்பனா தன்னோட அப்பா சிவராமன்கிட்டே சொல்லவும், அவர் கோபமாய் புறப்பட்டுப் போய் காளையப்பனோட அம்மாவையும், அப்பாவையும் பார்த்து பையனுக்கு புத்திமதி சொல்லும்படியாய் சொல்லியிருக்கார்... இதெல்லாம் என்னிக்கோ நடந்துபோன விஷயங்கள். பதிமூணு பேர்களோட மரணங்களுக்கும் காயைப்பன் விவகாரத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லை... நான் தரோவா என்கொயர் பண்ணிட்டேன்.”
“இட்ஸ்... ஓகே ஸார்... என்னோட மனசுக்குப் பட்டதை நான் சொன்னேன். மேற்கொண்டு இந்தக் கேஸை நீங்க எப்படி டீல் பண்ணினாலும் எனக்கு சரியே!”
சந்தோஷ் ஒரு பெருமூச்சோடு, பார்த்துக் கொண்டு இருந்த ஃபைலை மூடினார்.
“செம்மலை...! உடனடியாய் நான் எந்த ஒரு முடிவுக்கும் வந்துடமாட்டேன். இன்னும் நாலைஞ்சு நாள்தான் இந்த கிராமத்துல இருப்பேன். அவசரப்பட்டு கேஸை முடிக்கிற எண்ணம் எனக்கு இல்லை. டாக்டர் யாதகிரி சொன்ன அந்த சித்தர்கால விஷயங்கள் ஓரளவுக்கு அந்த பதிமூணு பேர்களோட மரணங்களோடு பொருந்திவர்றதால அந்தக் கோணத்துல போற இன்வெஸ்டிகேஷன் ஓரளவுக்கு பொருந்தி வருது... அதை வெறும் கதைன்னு நாம் உதாசீனப்படுத்திட முடியாது. லெட் அஸ் வெயிட் அண்ட் ஸீ.”
“எஸ்... ஸார்.”
“ரெண்டு டீ சொல்லுங்க. சாப்பிட்டுகிட்டே பேசுவோம்...”
செம்மலை திரும்பிப் பார்த்து அங்கே நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் டீக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே-
சந்தோஷின் செல்போன் ரிங்டோனை மெலிதாய் வெளியிட்டது.
எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். இனிதாவின் செல் எண் பளிச்சிட்டது.
காதுக்கு ஒற்றி குரல் கொடுத்தார்:
“சொல்லுங்க இனிதா!”
“ஸார்... அந்த கரு அரவச்சித்தர் விஷயமா டாக்டர் யாதகிரி இன்னமும் சில நம்பகமான தகவல்களை உங்களோடு பகிர்ந்துக்க விரும்பறார். நீங்களும் இன்ஸ்பெக்டர் செம்மலையும் இன்னிக்கு சாயந்தரம் ஒரு ஆறு மணி சுமார்க்கு வந்து பார்க்க முடியுமா?”
“வர்றோம். ஏதாவது ஆதாரங்கள் கிடைச்சிருக்கா?”
“நேர்ல வாங்க ஸார்... அவரே சொல்வார்.”
சந்தோஷ் செல்போனை அணைத்துவிட்டு செம்மலையை ஏறிட்டார்.
“டாக்டர் யாதகிரி உங்களையும், என்னையும் இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு கூப்பிடறார். கரு அரவச் சித்தர் சம்பந்தமாய் சில நம்பகமான தகவல்கள் கிடைச்சிருக்காம்!”
செம்மலை எரிச்சலோடு முணுமுணுத்தார்.
“புதுசா ஏதோ ஒரு கதையைச் சொல்லப் போறார்ன்னு நினைக்கிறேன்!”
“என்ன சொல்றார்ன்னு போய்ப் பார்ப்போம்” சொன்ன சந்தோஷ், கான்ஸ்டபிள் விஜயன் கொண்டு வந்து வைத்த டீ டம்ளர்களில் ஒன்றை எடுத்துக் கொண்டார்.