அர்த்தமுள்ள அரட்டை

பேசும் ரேகைகள்

விவேக் மதிய உணவை முடித்துக் கொண்டு வாழைப்பழத்தை உரித்துக் கொண்டிருந்த போது, ரூபலா அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“என்னங்க... உலகத்துல ஒருத்தர்க்கு இருக்கிற கட்டை விரல் ரேகையைப் போலவே இன்னொருத்தர்க்கு இருக்காதுன்னு சொல்றது எந்த அளவுக்கு உண்மை...?

“உண்மையோ உண்மை...”

“அது எப்படிங்க... உலகத்தோட ஜனத்தொகை இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 800 கோடி. இந்த 800 கோடி மக்களின் கட்டைவிரல் கைரேகைகள் ஒரேமாதிரி இருக்காதுன்னு சொல்லப்படுவதற்கு என்ன ஆதாரம் இருக்கு.”

“ஒரே ஒரு ஆதாரம்தான்...”

“என்ன...?”

“இதுவரைக்கும் உலகத்தில் பிடிபட்ட குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வைத்துள்ள இண்டர்நேஷனல் ஃபிங்கர் பிரிண்டிங் சர்வீசஸ் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கைதான் ஆதாரம்... யார்க்குமே ஒரே மாதிரியான கட்டை விரல் ரேகைப்பதிவு இல்லவேயில்லைன்னு அந்த அறிக்கை சத்தியம் பண்ணாத குறைதான்...”

“நம்பறதுக்கு கஷ்டமாயிருக்கு...”

“ஆனா அதுதானே நிதர்சனமான உண்மை.”

“கொலை நடந்த இடத்துல கிடைச்ச கைரேகைப் பதிவுகளை வெச்சுகிட்டு ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியும் என்கிற உண்மையை எந்த வருஷம் எந்த நாட்ல யார் கண்டு பிடிச்சாங்க...?”

“சொன்னா... உனக்கு ஆச்சர்யமாய் இருக்கும் ரூபி. கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நுட்பத்தை கண்டுபிடிச்சவரோட பேர் எட்வர்ட் ஹென்றி. இவர் இந்தியாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி. 1890ம் ஆண்டு வங்காளத்தில் அவர் அந்த டிபார்ட்மெண்ட்ல ஒரு அதிகாரியா இருந்தார். அதற்கப்புறம் 1901ம் ஆண்டில் ஸ்காட்லாண்ட் யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.”

“அப்படீன்னா இந்த கைரேகையின் மூலம் புலனாய்வு என்கிற முறை நம்ம நாட்டிலிருந்துதான் ஆரம்பமாயிருக்கு...?”

“ஆமா...”

“இருங்க... ஒரு ரெண்டு நிமிஷம் பெருமைப்பட்டுக்கிறேன்” என்று சொன்ன ரூபலா இடுப்பில் தன் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துவிட்டு விவேக்கை ஏறிட்டாள்...

“என்னங்க... எனக்கொரு சந்தேகம்...”

“என்ன?”

“குற்றம் நடந்த இடத்தில் எத்தனை மணி நேரம் வரைக்கும் குற்றவாளியின் கைரேகைப் பதிவு அழியாமல் இருக்கும்...”

“எந்த ஒரு குற்றம் நடந்தாலும் சரி, சம்பவம் நடந்த ரெண்டுமணி நேரத்துக்குள்ள கைரேகைப் பதிவுகளை எடுத்தால்தான் தெளிவாக கிடைக்கும். ஈரப்பதம் காய்ந்து விட்டால் அதாவது Moisture இல்லாவிட்டால் ரேகைகள் தெளிவாக இருக்காது. அதுவும் இல்லாமே ஒரு இடத்துல என்ன மாதிரியான குற்றம் நடந்து இருந்தாலும் சரி, அது கொலையோ இல்லை திருட்டோ முதலில் அந்த அறைக்குள்ளே நுழையறவங்க ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எடுக்கிற நிபுணர்களாகத்தான் இருக்கணும்.”

“இப்ப உருவாகிற குற்றவாளிகள் எல்லோருமே அதிபுத்திசாலிகளாய் இருக்காங்க. ஏதாவது ஒரு குற்றத்தை செய்ய போகும்போது கைகளுக்கு உறைகளை மாட்டிக்கறாங்க. அது மாதிரியான சமயங்களில் கைரேகைப் பதிவுகள் எப்படி கிடைக்கும்?”

“கிடைக்கும்.”

“அதுதான் எப்படின்னு கேட்கிறேன்...?”

“குற்றவாளிகள் எவ்வளவு புத்திசாலித்தனமாய் செயல்பட்டாலும் சரி, அவர்களையும் அறியாமே ஒரு சின்ன துண்டு ரேகையாவது விட்டுட்டு போயிடுவாங்க. இப்படி அவங்களையும் அறியாமே விட்டுட்டு போற கைரேகையை போலீசார் (Burglar’s Visiting Card) பர்க்கலர்ஸ் விசிட்டிங் கார்டுன்னு சொல்லுவாங்க... அப்படியும் கைரேகைப் பதிவுகள் கிடைக்காத பட்சத்தில் குற்றவாளிகளின் கால்பதிவுகள் (Foot print) கண்டிப்பாக கிடைக்கும்”.

“ஒருவன் குற்றவாளின்னு உறுதி செய்ய ரேகைப் பதிவுகளை எதுமாதிரியான முறையில் சோதிச்சுப் பார்ப்பாங்க?”

“குற்றம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ரேகைகளை குற்றவாளின்னு சந்தேகப்படற ஒரு நபரின் கைரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து குற்றவாளின்னு முடிவு செய்ய எட்டும் பாயிண்ட்கள் தேவைப்படும். வளைவான ரேகைப் பதிவு கிடைச்சா அந்த வளைவின் கோணத்தை அளப்பது மிக முக்கியமான வேலையா இருக்கும். இது நிதானமாய் செய்ய வேண்டிய வேலை என்பதால் இந்தத் துறையில் எழுபது சதவீதம் பேர் பெண்கள் பணியாளர்களாக இருப்பாங்க”

ரூபலா இப்போது குறுக்கிட்டுக் கேட்டாள்.

“குற்றம் நடந்த இடத்தில் எங்கெல்லாம் கைரேகைகள் இருக்கும் என்று ஃபாரன்ஸிக் நிபுணர்களுக்குத் தெரியும்?”

“அனுபவம் வாய்ந்த ஃபாரன்ஸிக் நிபுணர்களுக்கு சாதாரண கண்களுக்கே (Naked Eyes) கைரேகைகள் இருக்குமிடம் தெரியும். உடனே அதன் மேல் பௌடர் தூவி போட்டோ எடுப்பாங்க.”

“பௌடர்ன்னா, எது மாதிரியான பௌடர்?”

“அது ஒரு வகையான ஒளிரும் தன்மை கொண்ட ‘டைட்டானியம் ஆக்ஸைட்ன்’னு அழைக்கப்படுகிற ரசாயனப் பௌடர்.”

“துணிகளை ஒரு குற்றவாளி தொட்டிருந்தா அந்தத் துணிகள் மேலேயும் கைரேகைப் பதிவுகள் இருக்குமா?”

“இருக்கும்.”

“அதை எப்படி எடுப்பாங்க...”

“அது மாதிரியான கைரேகைகளை பதிவு செய்ய சில்வர் நைட்ரேட் முறை இருக்கு. அதே மாதிரி கொலை செய்யப்பட்ட ஒரு நபரின் மேல் இருக்கிற கைரேகைப் பதிவுகளை எடுக்க லேசர் பீம் (Laser Beam) மெதட் இருக்கு...!

“எனக்கு இன்னொரு சந்தேகம்?”

“என்ன?”

“குற்றவாளிகளின் ரேகைகள் மீது வீட்டில் உள்ளவர்களின் ரேகைகள் தெரியாமல் படிந்து விட வாய்ப்பு இருக்கா... இல்லையா?”

“நிறையவே வாய்ப்பு இருக்கு. உதாரணத்திற்கு ஒரு குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் அந்த வீட்டைச் சேர்ந்தவங்க பதட்டத்தோடு செயல்படும்போது அவங்களோட கைரேகைப் பதிவுகள் ஏற்கெனவே படிந்து இருக்கும் குற்றவாளிகளின் கைரேகைகளின் மேல் பதிய வாய்ப்பு இருக்கு.

இதை ஃபாரன்ஸிக் பீப்பிள் ‘ஒவர்லேப்பிங்’ (Over Lapping) ன்னு சொல்லுவாங்க. அப்படி ‘ஓவர் லேப்பிங் இருந்தாலும்கூட குற்றவாளியின் ரேகை ஒரே ஒரு சிறு பகுதி வெளியே தெரிஞ்சாலும் கூட, அதை வெச்சுகிட்டு ரேகைகளை இனம் பிரிச்சுடுவாங்க. இனம் பிரித்த பின்னாடி வீட்டில் உள்ளவங்க ரேகைகளை எல்லாம் கண்டுபிடிச்சு எலிமினேட் (Eliminate) பண்ணிடுவாங்க”

“ரத்தத்தில் கைரேகைகள் இருந்தா அதை எப்படி கண்டுபிடிப்பாங்க?”

“பௌடர் போட்டு எடுத்துப் பார்த்தாலே ரேகைகள் எளிதாக பார்வைக்குத் தட்டுப்பட்டு விடும். இப்போது கைரேகைப் பதிவுகளைக் கண்டுபிடிக்க ஒரு வெளிநாட்டுக் கண்டுபிடிப்பு வந்துள்ளது.”

“அது எது மாதிரியான கண்டுபிடிப்பு?”

“அது ஒரு நவீன கருவி. பெயர் ப்யூமிங் கிட் பாக்ஸ் (Fuming Kit Box). இந்த கருவியில் உள்ள ரசாயனப் புகையை குற்றம் நடந்த இடத்தில் பரப்பிவிட்டு, அரை மணி நேரம் கழித்து அறையைத் திறந்துப் பார்த்தால், அந்த அறையின் எந்த மூலை முடுக்கில் குற்றவாளிகளின் கைரேகைகள் பதிந்து இருந்தாலும் அத்தனைப் பதிவுகளும் துல்லியமாய் தெரியும்.”

“நம் நாட்டில் இந்த கைரேகைப் பதிவுத் துறை மேம்படுத்தப்பட்டு இருக்கா.?”

“இந்தத் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ஆண்டு தோறும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்குகிறது. ஒவ்வொரு வருடமும் 1500 ஃபிங்கர் பிரிண்ட் கிட் பாக்ஸ்கள் நாட்டில் உள்ள எல்லா காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆரம்பத்தில் கைரேகைப் பிரிவு டெக்னிகல் சர்வீஸ் ஐ.ஜி.யின் கட்டுப் பாட்டில் இருந்தது.

அதன் பிறகு சி.பி.சி.ஐ.டி. தலையின் கட்டுப்பாட்டில் இயங்கியது. இப்போது மாநில குற்ற ஆவணக்காப்பகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த ஒட்டு மொத்த அமைப்புக்குப் பெயர் ‘சிங்கிள் டிஜிட்’ (Single Digit) இந்த சிங்கிள் டிஜிட் அமைப்புத்தான் போலீஸ் துறைக்கு முதுகெலும்பாக இருந்து பல்வேறு வகைகளில் உதவி செய்கிறது.

குற்றம் நடந்த இடத்தில் ஒரு கைரேகைப் பதிவு கிடைத்தால் அதை உள்ளூர் மையத்தில் சரிபார்த்துவிட்டு ரேகை ஒத்துப்போகவில்லை என்றால் வெளியூர் மையப் பிரிவுகளுக்கு அனுப்புவார்கள். இந்த ‘சிங்கிள் டிஜிட்’ அமைப்பில் மொத்தம் 26 பிரிவுகள் இருப்பதால் ஏதாவது ஒரு பிரிவில் குற்றவாளி மாட்டிக் கொள்வான்.”

“அப்படியா...?”

“வேற வழி...?” விவேக் சிரித்துவிட்டு நியூஸ் படிக்கிற பாணியில் பேச்சைத் தொடர்ந்தான்.

“1895ம் வருடம் சென்னை ஐ.ஜி. அலுவல கத்தில் இரண்டு இன்ஸ்பெக்டர்களோடு ஆரம்பிக்கப்பட்ட கைரேகைப் பதிவு இன்று ஆண்டு தோறும் 1500 குற்றவாளிகளை அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கிறது. இதன் மூலம் காவல் துறை குற்றவாளிகளின் மேல் உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைகளைப் பெற்றுத் தருகிறது. இன்று இந்த ‘சிங்கிள் டிஜிட்’அமைப்பிடம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் கைரேகைகள் உள்ளன. இந்த கைரேகைகள் அதி நவீன கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்டு உரிய முறையில் பாதுகாக்கப்படுகிறது.

“நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லச் சொல்ல எனக்கு பிரமிப்பாய் இருக்கு... எனக்கு இன்னும் ஒரே ஒரு சந்தேகம்.”

“என்ன... கேட்டுடு...! இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே நான் கமிஷனர்க்கு முன்னாடி இருக்கணும்... அவர் வரச் சொல்லியிருக்கார்.”

“1895ம் வருஷத்துக்கு முன்னாடி, அதாவது கைரேகைப் பிரிவு தொடங்கப்படுவதற்கு முன்னாடி எந்த முறையை அடிப்படையாய் வெச்சு போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சாங்க?”

“கடைசியாய் நீ இப்ப ஒரு கேள்வி கேட்டியே... இதுதான் நல்ல கேள்வி. 1895 வருஷத்துக்கு முன்னாடி ‘ஆன்த்ரோ பாமிஸ்ட்ரி என்கிற முறையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சுட்டு வந்தாங்க. அதாவது குற்றவாளியின் முக நீளம், தோள் அளவு, கைவிரல்களின் நீளம் போன்ற இந்த அளவுகள் எல்லாம் குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களோடு ஒத்துப் போகிறதா என்று சரி பார்ப்பதுதான் ஆன்த்ரோ பாமிஸ்ட்ரி (Anthro Palmistry) முறை.”

“எதிர்காலத்துல இந்தத் துறையில் எது மாதிரியான முன்னேற்றம் இருக்கும்ன்னு நினைக்கறீங்க?”

“ஒரு குற்றவாளியின் ரேகையை கம்ப்யூட்டர்க்குக் கொடுத்தா அது குற்றவாளியின் உருவத்தை அப்படியே வரைஞ்சு கொடுக்கும்.”

“உண்மையா?”

“ஆமா... அதுக்கு இன்னும் முப்பது வருஷமாகும்.”