2

விஷத்தன்மை கொண்ட பாம்புகள் மனிதனையோ மற்ற உயிரினங்களையோ கடிக்கும்பொழுது அதனுடைய விஷம் இரண்டு வகைகளில் பரவி உயிரை பலி கொள்கின்றன. நாகப் பாம்பு, கட்டுவிரியன், பவளப்பாம்பு போன்ற பாம்புகள் கடிக்கும்பொழுது அதன் விஷம் கடிபட்டவர்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்பு போன்றவைகளின் விஷம் ரத்த மண்டலத்தைக் குறி வைத்துத் தாக்கி, ரத்தக் குழாய்களையும் ரத்த அணுக்களையும் வேக வேகமாய் அழித்து இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தத்தை உறைய வைக்கிறது. பாம்புகளில் சில வகைப் பாம்புகள் அதிக நஞ்சினை உருவாக்கும் வல்லமையுடன் இருக்கின்றன. அதில் ஒன்று கருப்பு மாம்பா (Black Mamba) எனப்படும் ஆப்பிரிக்க பாம்பு. இதைப் பற்றி மூன்றாவது அத்தியாயத்தில் பார்ப்போம்.

காங்கேய நாட்டு மன்னன் பிரகதத்தன், காட்டில் வேட்டையாடி முடித்துவிட்டு அந்தப் பெரிய ஆலமரத்தின் அடியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த குடிலுக்கு வந்து சேர்ந்தபோது மதிய வேளை.

சூரியன் உச்சி வானத்தில் இருந்து சுட்டாலும் அந்தக் கோடையின் கடுமை, ஆலமரத்தின் அடர்த்தியான இலைகளால் வடிகட்டப்பட்டு விட்டதால் அவனுக்கு குளுமையாகவே இருந்தது. குடிலுக்கு வெளியே இருந்த பாறைத்திட்டின் மீது தாவி ஏறி உட்கார்ந்தான்.

குடிலில் இருந்து வெளிப்பட்ட அமைச்சர் நல்லியக் கோடனார், மன்னன் பிரகதத்தனை நெருங்கினார்.

“மன்னா...! உணவு அருந்தும் வேளை. நாம் மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டரை நாழிகை நேரத்திற்குள் நாடு போய்ச் சேர வேண்டும். இன்று இரவு சீன வியாபாரிகள் வர்த்தகம் பற்றிப் பேச வந்துவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் அரசவையைக் கூட்டி சில முன்னேற்பாடான விஷயங்களைப் பேசி முடிக்க வேண்டும்...”

“எனக்கு நினைவிருக்கிறது அமைச்சரே! அதைப் பற்றி உங்களிடம் நானே பேச வேண்டும் என்று இருந்தேன்...!”

நல்லியக் கோடனார் தன்னுடைய முகத்தில் பெரியதொரு திகைப்பைக் காட்டினார்.

“என்னிடம் எதைப்பற்றிப் பேச வேண்டும் மன்னா...?”

“நமக்கு இந்த சீன வர்த்தகம் தேவையா...?”

“ஏன் மன்னா...?”

“சென்ற முறை அவர்கள் நம்மிடம் வந்து வியாபார பேச்சுவார்த்தை நடத்தும்போது, பேசிய உரையாடலில் நிறைய பொய் இருந்தது. கண்களில் ஒருவித தந்திரம் தெரிந்தது. எனக்கு மட்டும் இப்படி தோன்றவில்லை. என்னுடைய சகோதரர்கள் இளந்தத்தன், கொற்றன் ஆகியோர்க்கும் அதேபோன்ற எண்ணம் தோன்றியுள்ளது.”

அமைச்சர் நல்லியக் கோடனார் மன்னன் பிரகதத்தனை ஏறிட்டார்.

“மன்னா...! உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் நீங்களும் சரி, உங்களுடைய சகோதரர்களும் சரி, பின்னால் ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். இந்த சீனர்களின் வர்த்தக விஷயத்திலும் அது சரியாகவே இருக்கும். இன்றைக்கு அவர்களோடு நடத்தப் போகும் வணிக வர்த்தகப் பேச்சில் நாம் பட்டும் படாமல் பேசுவோம். நாம் பேசும் பேச்சிலிருந்தே அவர்கள் புரிந்துகொண்டு நம்மைவிட்டு விலகிவிடுவார்கள்.

பிரகதத்தன் மேற்கொண்டு பேசும் முன்பு பெரிய மரத்திற்கு பின்புறம் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.

“அது என்ன சத்தம் அமைச்சரே?”

“குதிரையின் குளம்பொலி போல் தெரிகிறது மன்னா!”

இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த மரத்தின் பின்னாலிருந்து பால் போன்ற வெண்மை நிறத்தில் நல்ல உயரத்தில் குதிரையொன்று தெரிய, அதன் மேல் கரிய நிறத்தோடு திடகாத்திரமான உடம்போடு ஒருவன் உட்கார்ந்திருந்தான்.

மன்னன் பிரகதத்தன் அந்தக் குதிரையைப் பார்த்து கண்ணிமைக்க மறந்தான்.

“அமைச்சரே!”

“மன்னா!”

“குதிரையை பார்த்தீங்களா... எவ்வளவு அழகாய் இருக்கிறது?”

“ஆம் மன்னா...! இதுபோன்ற தும்பைப் பூ நிறத்தில் இப்படியொரு குதிரையை நான் பார்ப்பது இதுதான் முதல் தடவை”

“எனக்கு அந்தக் குதிரையைப் பிடித்து இருக்கிறது அமைச்சரே! இப்படியொரு குதிரையில் ஏறி அமரவும், பயணிக்கவும் ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் குதிரையின் மேல் உட்கார்ந்திருப்பவன் அந்தப் பெருமைக்கு ஏற்றவன்போல் தெரியவில்லையே? அவன் யார் என்பதை விசாரியுங்கள்.”

“இதோ... மன்னா.”

சொன்ன அமைச்சர் அந்த விநாடியே வேகமாய் நகர்ந்து குதிரையை நோக்கிப் போனார்.

குதிரையின் மேல் இருந்தவன், அமைச்சரைப் பார்த்ததும் கீழே இறங்கி வணங்கினான். அமைச்சர் அவனை உற்றுப் பார்த்தபடி கேட்டார்:

“யார்... நீ...? இந்தக் கானகத்தில் உனக்கு என்ன வேலை...?”

நெடிது வளர்ந்து கரிய நிறத்தில் இருந்த அந்த மனிதன் மறுபடியும் வணங்கிவிட்டுப் பணிவான குரலில் பேசினான்:

“என் பெயர் யுகன். நான் ஒரு குதிரை வியாபாரி. இங்கிருந்து முப்பது காதம் தொலைவில் உள்ள கலியனூர் கிராமத்தில் வசிப்பவன். இந்தக் குதிரையை விற்பதற்காகப் பழையனூர் சந்தைக்குக் கொண்டு போகிறேன்.”

“நான் யாரென்று உனக்குத் தெரிகிறதா?”

“தெரிகிறது... நீங்கள் இந்த நாட்டின் அமைச்சர்.”

“சரி... என்னோடு வா... மன்னர்க்கு இந்தக் குதிரையை மிகவும் பிடித்துவிட்டது. அவரிடம் வந்து பேசு.”

“மன்னரா?”

“பயப்படாதே... வா...” அமைச்சர் சொல்லி விட்டு நடக்க, யுகன் அவரைப் பின் தொடர்ந்து பணிவாய் நடந்தான். பாறைத்திட்டில் உட்கார்ந்திருந்த மன்னன் பிரதத்தனைப் பார்த்ததும் சேவிக்காத குறையாய் வணங்கி “வாழ்க மன்னர்” என்றான்.

அமைச்சர் நல்லியக் கோடனார் பிரகதத்தனிடம் யுகனைப் பற்றி சொல்லிவிட்டு, அவன் குதிரையைப் பழையனூர் சந்தைக்கு கொண்டுபோய் விற்க இருப்பதாகவும் சொல்ல, மன்னன் அந்த யுகனை வியப்பாய் பார்த்தான்.

“இந்த அற்புதமான, அழகான, அபூர்வமான வெண்ணிறக் குதிரையை விற்கப் போகிறாயா?”

“ஆம் மன்னா.”

“அப்படி நீ இந்தக் குதிரையை விற்பதாக இருந்தால் அதை நீ சந்தைக்கு கொண்டுபோக வேண்டாம். நானே வாங்கிக்கொள்கிறேன். இந்தக் குதிரைக்கு என்ன விலை வைத்து இருக்கிறாய்?”

யுகன் பதில் ஒன்றும் பேசாமல் மௌனமாய் நின்றிருக்க, அமைச்சர் அவனைக் கோபமாய் பார்த்தார்.

“மன்னர் சொன்னது உன்னுடைய காதில் விழுந்ததா இல்லையா?”

“விழுந்தது அமைச்சரே!”

“அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்!”

“மன்னிக்க வேண்டும் அமைச்சரே!”

“எதற்காக மன்னிப்பு?”

“மன்னர் இந்தக் குதிரையை விரும்புவதாக இருந்தால் நான் அதை விலைக்கு விற்பதாக இல்லை.”

“பிறகு...?”

“எனது பரிசாகத் தருகிறேன்!”

மன்னன் பிரகதத்தன் பெருமிதமாய் அமைச்சரைப் பார்க்க, யுகன் சொன்னான்:

“மன்னா! இந்தக் குதிரை அபூர்வமான வெண்மை நிறம் கொண்டது. அதன் உடம்பில் ஒரு கடுகளவு கூட வேறு நிறம் கிடையாது. இதுபோன்ற ஒரு குதிரையை இந்த உலகத்தின் எந்தப் பகுதியிலும் பார்க்க முடியாது. அப்பேர்ப்பட்ட குதிரையைப் பரிசாகப் பெறும் ஒருவர் என் மனசில் உள்ள ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அந்த பதில் சரியாக இருந்தால் மட்டுமே குதிரையை நான் பரிசளிப்பேன்.!”

அமைச்சரின் முகம் கோபத்தில் நெருப்பாய் சிவக்க, தன் இடுப்பில் இருந்த உடைவாளை உருவினார்.

“என்ன சொன்னாய்...! நீ கேட்கும் கேள்விக்கு மன்னர் பதில் சொல்ல வேண்டுமா?”

மன்னன் பிரகதத்தன் எழுந்து அமைச்சரைத் தடுத்தான்.

“பொறுங்கள் அமைச்சரே! யுகன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. அந்த வெண்ணிறப் புரவியை நான் பரிசாகப் பெற எனக்கும் ஒரு தகுதி வேண்டாமா?” என்று சொன்ன பிரகதத்தன் யுகனிடம் திரும்பினான்.

“உன்னுடைய கேள்வி என்ன?”