நனவோடை நினைவுகள்
Nanavodai Ninaivugal
Author:
இரா. குமார்
Era. Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/era-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
*****
சுமை கூட சுகமே
இறைவன் எனக்கு அளித்த கொடை, ரசனையும் நினைவாற்றலும். சிறு வயது முதலே நல்லன பலவற்றையும் ரசித்திருக்கிறேன். அப்படி ரசித்துச் சுவைத்த காரணத்தாலேயே அவை என் நினைவில் பதிந்திருக்கின்றன. நான் எதையும் திட்டமிட்டதில்லை. ஆனாலும் எதுவும் கெட்டுப் போனதில்லை. பெரிதாக எதையும் நான் எதிர்பார்ப்பதும் இல்லை. என்றாலும் எனக்கு வாய்த்திருக்கிறது. பல பெரிய மனிதர்களுடன் பழகும் அரிய வாய்ப்புகளை இறைவன் எனக்கு அருளியிருக்கிறான். அவனை நான் வழிபடாது இருந்த காலத்திலும் என்னை நன்றாகவே வழி நடத்தியிருக்கிறான்.
சிறுவயது முதலே எனது பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான். துன்பங்கள் தொடர்ந்த போது கூட, அதுவும் ஒரு அனுபவம்தான் என்று எண்ணி ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால், சுமைகூட சுகமானதாகவே இருந்திருக்கிறது. படித்தது, பார்த்தது, பலர் சொல்லக் கேட்டது, என்று பலவித அனுபவங்கள் என்னுள் இன்னமும் நீங்காது புதைந்து கிடக்கின்றன. அந்த அனுபவங்களை அசை போடுவதுதான் இந்த நூல்.
நினைவுகள் சுகமானவை. அதுவும் சுகமான, சுவையான நினைவுகள் மிகவும் சுகமானவை. இந்த நூல் முழுவதும் அந்த சுகமான நினைவலைகளில் ஆனந்தமாக நீந்திக் கரை சேர்ந்திருக்கிறேன். ஆனால் பாதையைத் தேர்ந்தெடுத்து நான் நீந்தவில்லை. அலைகள் என்னைக் கொண்டு போன போக்கில் போயிருக்கிறேன்.
கதை சொல்லும் உத்திகளில் ஒன்று நனவோடை முறை (stream of consciousness). கதை தன் போக்கில் போய்க் கொண்டிருக்கும். அதைப் போலத்தான், எனது நினைவுகளை அதன் போக்கிலேயே இந்த நூல் முழுவதும் அசை போட்டிருக்கிறேன். அதனால் தான் நூலுக்கு நனவோடை நினைவுகள் என்று பெயர் சூட்டினேன். நூல் தலைப்பும் அதன் போக்கிலேயே வந்ததுதான்.
இந்த நூலில் பலரைப் பற்றி சொல்லியிருக்கிறேன். நான் அண்ணாந்து பார்த்தவர்கள், அன்போடு பழகியவர்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள், இருப்பவர்கள், கல்லுாரித் தோழர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பலரும் இந்த நூலில் வருகிறார்கள். அதில் யாருடைய மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். என்னையும் மீறி யாருக்காவது சிறு சிராய்ப்பு ஏற்படுமானால் கூட, அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நனவோடையில் நீங்களும் இறங்கி மூழ்கலாம். முத்துகள் கிடைத்தால், அந்தப் பெருமை, இதில் யாரைப் பற்றி சொல்கிறேனோ அவரைச் சேரும். சிப்பி மட்டுமே கிடைத்தால் இந்தச் சிறியவனே பொறுப்பு. எது கிடைத்தாலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னும் எழுத வையுங்கள்.
அன்புடன்
தொடர்புக்கு: erakumar25@gmail.com
*****
நனவோடை நினைவுகள்
நெஞ்சில் உரத்தையும் நேர்மைத் திறத்தையும் எனக்கு அளித்தவர் என் அப்பா தெய்வத்திரு இராமசாமி பிள்ளை அவர்கள். எங்கள் கிராமத்தில் மட்டுமின்றி சுற்றுப்பட்டு கிராமங்களிலும் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார். எதுவும் பிரச்னை என்றால் என் அப்பாவிடம்தான் பஞ்சாயத்துக்கு வருவார்கள். எங்கள் வயலில் அறுவடை நடந்து களத்தில் நெல் குவித்து வைத்திருந்தார்கள். அதில் சிறிதளவை ஒருவர் திருடிவிட்டார். அவரை கண்டுபிடித்து அழைத்துவரச் செய்தார் என் அப்பா. திருடியவருடன் அவருடைய அண்ணன், அப்பா அகியோரையும் வரச் சொன்னார். காலையில் வந்த அந்த மூன்று பேரும் என் அப்பா முன்பு நின்றனர். என் அப்பா ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். திருடியவரைத் தவிர மற்றவர்களும் பேசிக் கொண்டிருந்தனர். மதியம் ஆனது. அவர்களுக்கு எங்கள் வீட்டிலேயே சாப்பாடு போடப்பட்டது. மாலை வரை மீண்டும் பேச்சு தொடர்ந்தது. என் அப்பா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர்கள் மூன்று பேரும் காலையில் இருந்து நின்ற படியேதான் பேசிக் கொண்டிருந்தனர். மாலை ஆனதும் போய்விட்டு நாளைக்கு வாங்க என்று அனுப்பினார் அப்பா. மறுநாள் காலை வந்தார்கள். முதல் நாள் போலவே அடுத்த நாளும் கழிந்தது. மாலை ஆனதும், திருடியவரின் அப்பா, 100 ரூபாய் பணத்தை கொண்டு வந்து வைத்து அபராதமாக வைத்துக் கொண்டு மன்னித்துவிடுங்கள் என்று கேட்டார். சரி என்று சொல்லிவிட்டார் என் அப்பா.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது நான் விருத்தாசலம் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தேன். 500 ரூபாய் திருடினால் 1000 ரூபாய் அபராதம் போட வேண்டும். 100 ரூபாய் போட்டால் எப்படி? திருடிவிட்டு, அந்தப் பணத்திலேயே அபராதம் கட்டிவிடுவார்களே அப்பா? என்று கேட்டேன். அதற்கு அவர், அவனே வறுமை காரணமாகத்தான் திருடுகிறான். அதிக தொகையை அபராதமாக விதித்தால் பணத்துக்கு அவன் எங்கே போவான்? கடன் வாங்குவான். பிறகு கடனை அடைக்க மீண்டும் திருடுவான். அவன் மீண்டும் திருடுவதற்கான சூழலை நாமே ஏற்படுத்தக் கூடாது. அதனால் தான் 100 ரூபாய் மட்டும் அபராதம் போடுகிறேன் என்று விளக்கினார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த என் தந்தையின் சமுதாயச் சிந்தனை என்னை வியக்க வைத்தது. ஆனாலும் இன்னொரு கேள்வி என் மனதில் எழுந்தது. நீங்கள் சொல்வது சரி. ஆனால் அதை உடனே சொல்லி முடிக்கலாமே எதற்கு இரண்டு நாள் நிற்க வைத்துப் பேச வேண்டும்? என்று கேட்டேன். அதெல்லாம் இப்ப உனக்குப் புரியாது போ என்றார் அப்பா.
அடுத்த சில நாட்களில் ஒருவர் தன் தம்பியை எங்கள் பண்ணையில் வேலைக்குச் சேர்த்து விட்டார். தனது தம்பியிடம் அவர் சொன்னது என் காதில் விழுந்தது. ஏதாவது வேணும்னா கேளு. கொடுப்பாங்க. திருடிபுடாத. கணுக்கால் ரத்தம் வடிய வடிய ரெண்டு நாள் நிக்க முடியாது என்றார். என் அப்பா ஏன் நிற்க வைக்கிறார் என்பது அப்போது எனக்கு புரிந்தது. நிற்பதுதான் தண்டனை.
ஒரு பணக்காரரைப் பற்றி என் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். இவ்வளவு பணம் வச்சிருக்காரு செலவே செய்ய மாட்டேங்கிறாரே என்றேன். அறுபது வருஷ ஊறுகாய் கதைதான் என்றார். என்னப்பா அது என்று கேட்டேன்.
ஒருவன் 60 வருஷத்து ஊறுகாய் வச்சிருக்கேன்னு சொன்னான். அப்படியா எங்கே கொஞ்சம் கொடு தின்று பார்க்கிறேன் என்று கேட்டான் இன்னொருத்தன். கொடுத்திருந்தால் எப்படிடா 60 வருஷத்துக்கு ஊறுகாய் இருந்திருக்கும் என்றானாம். அதுபோல செலவு செய்யாததால்தான் அவனிடம் பணம் இருக்கிறது என விளக்கினார் அப்பா. இப்படி உலகியல் பற்றி பலவும் சொல்லியிருக்கிறார்.
பெரும் செல்வம் இருந்தும் கஞ்சத்தனமாக வாழ்பவர்களைப் பற்றி என் மனைவி கலைச்செல்வி ஒரு முறை, சிலர் பணக்காரராக இறப்பதற்காக வாழ்நாள் முழுவதும் ஏழையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார். கஞ்சத்தனமாக வாழ்பவர்களைப் பற்றி இதைவிட அற்புதமாக சொல்ல முடியுமா என்று எண்ணி வியந்தேன். பணம் இருந்தும் செலவு செய்யாதவர்கள் ஏழைதானே. என்ன ஒன்று? இறக்கும்போது கோடீஸ்வரர் இறந்துவிட்டார் என்று சொல்வார்கள் அவ்வளவுதான்.
எங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள பேரூரான திரு முட்டத்தில் எழாவது வரை படித்தேன். அதன் பிறகு நான் படிக்க வைக்கிறேன் என்று என் சித்தப்பா டாக்டர் நடனம் அவர்கள் என்னை சென்னைக்கு அழைத்து வந்தார். 1971 ஜூன் 14ம் தேதி சென்னை வந்தேன். வேப்பேரியில் உள்ள திரு பவுல் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். அது மிகவும் பழமையான பள்ளி. 8ம் வகுப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றார்கள். அப்படி ஒரு வார்த்தையை நான் அதுவரை கேள்விப்பட்டது கூட கிடையாது. ஆங்கிலத்திலும் கணிதத்திலும் தேர்வு. கூடவே ஞிணிதீ என்று தலைப்பு கொடுத்து கட்டுரை எழுதச் சொன்னார்கள். ஆங்கில பாடமெல்லாம் மனப்பாடம் செய்துதான் தேர்ச்சி பெறுவது வழக்கம். அதனால், ஆங்கிலத்துக்கும் எனக்கும் அதிக தூரம். வால், கொம்பு ஆகியவற்றுக்கான ஆங்கிலச் சொல் எது என்பதில் எனக்கு அப்போது குழப்பம் ஏற்படும். கட்டுரையில், ஞிணிதீ டச்ண் ணாதீணி ணாச்டிடூண் ச்ணஞீ ணிணஞு டணிணூணஎன்று எழுதிவிட்டேன். ஆனாலும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள். தமிழாசிரியர்கள் திரு. சிவப்பிரகாசம், திரு. கங்காதரன் ஆகியோர் அற்புதமாக பாடம் நடத்துவார்கள். இதனால் தமிழ் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. போதாக்குறைக்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞரை என் சித்தப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். அவரது தமிழ்ப் பேச்சு பற்றி அடிக்கடி சிலாகித்துப் பேசுவார். எனக்கு தமிழார்வம் வளர அதுவும் ஒரு காரணம்.
கலைஞரின் பேச்சு, பேட்டி ஆகியவற்றை பத்திரிகைகளில் தவறாமல் படிப்பேன். சட்டசபையில் கலைஞர் சொல்லும் பதில்கள் ரசிக்கும் படியாக இருக்கும். பூம்புகாரில் கலைக்கூடம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம் என கலையம்சத்துடன் கூடிய பலவற்றை நிறுவினார் கலைஞர். அவற்றின் திறப்பு விழாவும் இந்திரவிழாவும் 1972ம் ஆண்டு நடந்தது. அந்த விழாவுக்காக ஒரு லட்சம் டியூப் லைட்கள் கட்டப்பட்டன. அப்போது தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு. சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் அனந்தநாயகி எழுந்து, "கடும் மின்வெட்டு உள்ள இந்த நிலையில், இந்திர விழாவுக்காக ஒரு லட்சம் டியூப் லைட்களை எரியவிட்டீர்களே இது தேவைதானா?" என்று கேட்டார். முதல்வர் கலைஞர் எழுந்து, "எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் நம் வீட்டு முதல் திருமணம் என்றால் கடன் வாங்கியாவது சிறப்பாக நடத்துகிறோம் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்" என்றார்.
சுதந்திரா கட்சி எம்எல்ஏ ஹெச்.வி. ஹண்டே, சட்டசபையில் அதிகம் கேள்வி எழுப்புவார். கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைப்பார். இவரது வாதத் திறமையை பாராட்டி, கலைஞரே ஒருமுறை, "உட்கார்ந்தால் ஹண்டே; எழுந்தால் சண்டை" என்றார்.
அப்போது குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் தீவிரமாக நடந்த நேரம். நிறைய இடங்களில் பெரிய பெரிய விளம்பர பலகைகள் அமைத்து, அதில் முதல்வர் கலைஞர் படம் வரைந்து, "நாம் இருவர் நமக்கு இருவர்" என்று எழுதினர். சட்டசபையில் இது பற்றி பேசிய ஹண்டே, "குடும்பக் கட்டுப்பாடு விளம்பர பலகையை யார் பார்க்கிறார்களோ அவர்களைப் பார்த்து நாம் இருவர் நமக்கு இருவர்? என்று முதல்வர் சொல்வது போல இந்த விளம்பரப் பலகைகள் உள்ளன. இதை ஒரு பெண் பார்த்தால் எப்படி இருக்கும்? அவ்வளவு நாகரிகமாக இல்லை" என்றார்.
உடனடியாக ஒரே இரவுக்குள் அத்தனை விளம்பரப் பலகைகளிலும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வாசகம் அழிக்கப்பட்டது. பின்னர், "பொன்னென்றும் மணியென்றும் வைரமென்றும் வைடூரியமென்றும் கணக்கின்றி பிள்ளைகளை பெறுதல் விடுத்து, நெல் என்றும் கரும்பென்றும் எள் என்றும் கொள் என்றும் உணவைப் பெருக்கிடுவீர்; உற்பத்தி செய்திடுவீர்" என்ற கலைஞரின் கவிதை எழுதப்பட்டது.
குமுதம் வார இதழ் வீட்டுக்கு வரும். படிப்பேன். அதில் கடைசி பக்கத்தில் 'சந்தித்தேன் சிந்தித்தேன்' என்ற தலைப்பில், தான் சந்தித்தவர்களைப் பற்றி ஒரு பக்கம் எழுதி வந்தார் கவியரசு கண்ணதாசன். தவறாமல் படிப்பேன். அதில், அவர் சந்தித்த இலங்கை கவிஞர் பற்றி எழுதியிருந்தார். ஒருவனின் வறுமையைப் பற்றி அவர் குறிப்பிடும் போது, அவன் வேட்டியில் நெய்த நூலை விட தைத்த நூல்தான் அதிகம் இருந்தது என்று கூறியதாக கண்ணதாசன் எழுதியிருந்தார்.
கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதி ஆண்டு விழாவுக்குக் கண்ணதாசன் வந்திருந்தார். அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். அந்த விழாவுக்குப் போனேன். அதில் பேசிய கண்ணதாசன், அவர் எழுதிய 'பார்த்தேன் ரசித்தேன் பக்கத்தில் வரத் துடித்தேன்' என்ற திரைப்பாடலை பாடினார். அற்புதமாக இருந்தது. 1980ல் நான் மாநிலக் கல்லுாரியில் எம்.ஏ. படிக்கும் போது, கண்ணதாசனை அழைத்து வந்து பேச வைத்தேன். காரில் அவரை அழைத்து வரும்போது, "விழாவில் பேசும்போது, பார்த்தேன் ரசித்தேன் பாடலை பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன். "அந்தப் பாட்டை நான் பாடுவேன் என்பது உனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டார் கண்ணதாசன். "1972ல் கால்நடை மருத்துவக் கல்லுாரி விடுதி விழாவில் நீங்கள் பேசும்போது கேட்டிருக்கிறேன்" என்றேன். புன்னகையையே பதிலாக தந்தார். பேசும் போது எனது வேண்டுகோளை நிறைவேற்றினார். பெரு மகிழ்ச்சி எனக்கு. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கும் போது அவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பேன். தொல்காப்பியத்துக்கும் சிலப்பதிகாரத்துக்கும் நான் உரை எழுதியிருக்க வேண்டும். விட்டுவிட்டேன். இப்போது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. இளமைக் காலத்தை வீணடித்துவிட்டேன் என்று ஒரு முறை வருத்தப்பட்டார். நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஒரு நாள், திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் அவரே போன் செய்து குரலை மாற்றிப் பேசி, கண்ணதாசன் இறந்து விட்டார் என்று சொன்னார். பலரும் அலறியடித்துக்கொண்டு, அவர் வீட்டுக்கு சென்றனர். சிரித்தபடி அமர்ந்திருந்தார் கவிஞர். "என்ன? இறந்துவிட்டேன் என்று தகவல் வந்ததா? நானேதான் அப்படிச் சொன்னேன்" என்றார். "ஏன் அப்படிச் சொன்னீர்கள்?" என்று கேட்டனர். "உயிரோடு இருக்கும் போதே, இறந்துவிட்டதாக தகவல் பரவினால் ஆயுள் நீடிக்கும் என்று ஒருவர் சொன்னார். நான் நீண்ட காலம் வாழ விரும்புகிறேன் அதற்காகத்தான் இப்படி செய்தேன்" என்றார். ஆனால், இயற்கைக்கு இறக்கமில்லை. 56வது வயதிலேயே அவரை அழைத்துக் கொண்டுவிட்டது.
மொட்டு மலர் காய் கனிகள் ஆனவுடன்
வாழையடி வாழையொன்று ஜனனம் – அது
வந்தபின்பு தாய் விழுந்து மரணம்.
ஒன்று மட்டும் உண்மை அறிவூற்றிலொரு
பாட்டெழுதும்
செந்தமிழ் மாகவிக்கு மரணம் – அது
வந்தபின்தான் அவன் பெருமை ஜனனம்
என்று எழுதுவார் கண்ணதாசன். இது உண்மைதான். என்றாலும் அவர் மட்டும் விதிவிலக்கு. வாழும் காலத்திலேயே புகழ் பெற்றிருந்தார்.
ஒருவன் தனக்கு எது நேர்ந்தாலும் இந்த உலகுக்கு அதை அறிவிக்க முடியும். ஆனால், தனது மரணத்தை அறிவிக்க முடியாது. அதையும் அறிவித்தான் ஒருவன். ஆம். தினமலர் நாளிதழில் என்னுடன் பணியாற்றிவர்களில் ஒருவர். அவர் பெயரும் குமார்தான். திறமைசாலி. முற்போக்கு சிந்தனை உடையவர். பின்னர் தினமணி நாளிதழுக்குப் போய்விட்டார். அவர் இறந்துவிட்டதாக ஒரு நாள் தகவல் வந்தது. அவர் தங்கியிருந்த வீட்டுக்குப் போனேன். வீட்டின் கதவில், குமார் செத்துவிட்டான் என்று எழுதி ஒட்டியிருந்தார். உள்ளே போய் பார்த்தேன். துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். கதவில் அவர் எழுதி ஒட்டியிருந்ததைப் பார்த்துதான் பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே போய் பார்த்திருக்கிறார். தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்திருந்தார் குமார். அந்தக் கடிதம்
விடியும் விடியும் என்றிருந்தேன்
முடியும் பொழுதாய் விடிந்ததடா
என தொடங்கியிருந்தது. இந்த வரிகளையும் அவர் மரணத்தையும் மறக்க முடியவில்லை.
அந்தக் கடிதத்தில், "வாழ்க்கையில் நான் செய்த இரண்டு தவறு, ஒன்று உமாவை காதலித்தது. இன்னொன்று தினமணியை காதலித்தது" என்று எழுதியிருந்தார். இதைப்படித்த போலீஸ்காரர், "உமா, தினமணின்னு இரண்டு பெண்ணை காதலிச்சிருக்கார் சார் இவரு" என்றார். அந்த சோகத்திலும் சிரிப்பு வந்தது எனக்கு. இவரெல்லாம் புலானாய்வு செய்தால் வழக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து நொந்து கொண்டேன்.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, கண்ணதாசனைப் பற்றி நிறைய சொன்னார். ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டார். கண்ணதாசன் மீது அவ்வளவு பாசம் அவருக்கு. கண்ணதாசனுடனான தனது பல அனுபவங்களை நினைவு கூர்ந்தார். அவர் சொன்னதில் சில இதோ...
ராமண்ணா இயக்கத்தில் பெரிய இடத்துப் பெண்படம். அன்று காலை 9 மணிக்கு கம்போசிங். முதல் நாள் இரவு வேலை முடிய நீண்ட நேரமாகிவிட்டது. அதிகாலை 3 மணிக்குதான் படுத்தேன். பொழுது விடிந்த பிறகும் நீண்ட நேரம் தூங்கிவிட்டேன். ராமண்ணாவும் கண்ணதாசனும் அலுவலகம் வந்துவிட்டனர். நான் மட்டும்தான் போகவில்லை. என் வீட்டுக்கு கண்ணதாசன் போன் செய்திருக்கிறார். நான் தூங்கிக் கொண்டிருப்பதாக என் உதவியாளர் சொல்லியிருக்கிறார். இன்னும் என்னடா தூக்கம் எழுப்புடா என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். என் உதவியாளர் பயந்து கொண்டு என்னை எழுப்பவில்லை. பத்து மணிக்கு மேல்தான் கண் விழித்தேன். கண்ணதாசன் போன் செய்ததை உதவியாளர் சொன்னார். எழுப்பியிருக்கலாமே என்று கூறிவிட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றேன். ராமண்ணா மட்டும் இருந்தார். எங்கே கவிஞன் கோச்சுகிட்டு போய்ட்டானா? என்று கேட்டேன். இல்லை. சரணத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அதற்கு டியூன் போடச் சொன்னார். அதற்குள் வந்துவிடுவதாக சொன்னார் என்று ராமண்ணா கூறினார். சரணத்தை வாங்கி படித்துப் பார்த்தேன். 'அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ' என்று எழுதியிருந்தார்.
அவன்தான் மனிதன் படத்துக்கு ஒரு பாடல் எழுத வேண்டியிருந்தது. கண்ணதாசன் காலதாமதம் செய்து கொண்டிருந்தார். எழுதிக் கொடுங்கள் என்றேன். எழுதுவோம்டா..... என்றார். மே மாதம் படம் ரிலீஸ் இப்ப ஜனவரி ஆகிவிட்டது என்றேன். அதுக்கு இப்ப என்ன? என்று கேட்டார். இல்ல கவிஞரே... மே மாதம் படம் ரிலீஸ் பண்ணனும். பாட்டு எழுதிக் கொடுக்காம இருக்கிங்களே என்றேன். என்னடா மே.... மே... ங்கிற... டியூன போடுடா என்றார் கவிஞர். டியூன் போட்டேன். உடனடியாக
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
என்று பாடல் வரிகளைச் சொன்னார். இந்தப் பாடல் முழுவதுமே மே என்ற எழுத்தில்தான் முடியும். இப்படி பல அனுபவங்களைச் சொன்னார் விஸ்வநாதன்.
திமுகவில் இருந்த கண்ணதாசன், அக்கட்சியை விட்டு வெளியேறி, அண்ணாவைப் பிரிந்தபோது எழுதியதுதான்
அண்ணன் காட்டிய வழியம்மா – இது
அன்பால் விளைந்த பழியம்மா
என்ற பாடல்.
பிறகு, அண்ணா முதல்வரான பின், அவருக்கு உடல் நலம் குன்றியது. அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது எழுதியதுதான் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும்
நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும் நலந்தானா?
என்ற பாடல்.
எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் சுமுக உறவு இல்லாமல் இருந்த நேரம். எம்ஜிஆர் தனது படங்களுக்கு கண்ணதாசன் பாட்டெழுதக் கூடாது என்று சொல்லிவிட்டார். ஸ்ரீதர் இயக்கத்தில் உரிமைக்குரல் படம் தயாராகிக் கொண்டிருந்தது. எம்ஜிஆர்தான் கதாநாயகன். அதில் ஒரு கனவுக் காட்சியில் கதாநாயகனும் நாயகியும் பாட்டு பாடுவது போல ஒரு காட்சி. ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர்சொல்லியிருந்தார். பிரம்மாண்டமாக செட்டிங் போட்டு அந்த காட்சியை படமாக்க முடிவு செய்யப்பட்டது.
அந்தக் காட்சிக்கான பாடலை எழுத வாலியை அழைத்திருந்தார்கள். எத்தனையோ அற்புதமான பாடல்களை எழுதியவர் வாலி. உரிமைக் குரல் படத்துக்காக அவர் பல பாடல்களை எழுதிக் கொடுத்தார். ஸ்ரீதர் திருப்தி அடையவில்லை. மூன்று நாட்கள் உட்கார்ந்து எழுதினாராம் வாலி. அப்படியும் திருப்திபடுத்த முடியவில்லை. பிறகு கண்ணதாசனை அழைத்தார் ஸ்ரீதர். பாட்டெழுதச் சொன்னார். சின்னவருக்குப் பிடிக்காதே என்றார் கண்ணதாசன். திரையுலகில் எம்ஜிஆரை சின்னவர் என்பார்கள். பெரியவர் அவரது அண்ணண் எம்.ஜி. சக்கரபாணி. நீங்கள் எழுதுங்கள் எம்ஜிஆரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்றார் ஸ்ரீதர். ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தார். ஓகே சொன்னார் ஸ்ரீதர். அது
விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் காற்று
உனக்காகவே நான் வாழ்கிறேன்
என்ற பாடல்தான்.
பாடல் ரெக்கார்டிங் முடிந்ததும் எம்ஜிஆரிடம் பாட்டை போட்டுக் காட்டினார் ஸ்ரீதர். பாட்டு பிரம்மாதமா வந்திருக்கு... ஆனால், இது வாலி எழுதுன பாட்டு மாதிரி தெரியலையே என்றாராம் எம்ஜிஆர். ஆமாம் அண்ணே. வாலி எழுதுனது திருப்தியா இல்லை. அதனால் கவிஞரை அழைத்து எழுதச் சொன்னேன் என்றார் ஸ்ரீதர். கண்ணதாசன் கண்ணதாசன்தான் என்று பாராட்டினாராம் எம்ஜிஆர்.
சிவாஜி நடித்த பாகப்பிரிவினை படம். கதாநாயகன் தாலாட்டு பாடுவது போல ஒரு காட்சி. இந்தப் பாடலை எழுத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அழைத்தனர். அதி அற்புதமான கவிஞர். பொது உடைமை கொள்கையில் பற்று கொண்டவர். திரைப்பாடல்களில் பகுத்தறிவுக் கருத்துகளைப் புகுத்தியவர். அவர் வந்து, கதாநாயகன் தாலாட்டு பாடுவதற்கான பாடலை எழுதத் தொடங்கினார். அவருக்கே திருப்தியாக இல்லை. சிறிது நேரம் கழித்து தாலாட்டு பாட்டெல்லாம் கண்ணதாசனுக்குதான் நல்லா வரும். அவரைக் கூப்பிட்டு எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பிறகு கண்ணதாசனை அழைத்து எழுதச் சொன்னார்கள். அதுதான்
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லையொரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே
என்ற தாலாட்டுப் பாடல்.
கலைஞரும் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள். கண்ணதாசனை கவிஞர் என்று முதன் முதலில் மேடையில் அறிமுகப்படுத்தியவர் கலைஞர்தான். திமுக தொடங்கப்படுவதற்கு முன், தி.க.வில் கலைஞர் இருந்த காலகட்டம். கோவையில் ஒரு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். கருணாநிதி... கருணாநிதி.... என்று குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார். ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்த கண்ணதாசன் எழுந்து வந்தார். அருகில் வந்ததும், எங்கே போகிறாய்? என்று கேட்டார் கண்ணதாசன். பொள்ளாச்சியில் பொதுக் கூட்டம் பேசப் போகிறேன் என்றார் கலைஞர். நானும் வருகிறேன் என்று சொல்லி கலைஞருடன் புறப்பட்டார் கண்ணதாசன். அங்கே பொதுக் கூட்டத்தில் நானும் பேசுகிறேன் என்று கண்ணதாசன் சொன்னார். என்னய்யா இது... நடப்பது தி.க. கூட்டம். நீ நெற்றி நிறைய விபூதி பூசியிருக்கிறாய். நீ எப்படி இந்தக் கூட்டத்தில் பேச முடியும்? என்று கேட்டார் கலைஞர்.
இதென்ன பிரமாதம்? என்று சொல்லிவிட்டு, நெற்றியில் இருந்த விபூதியை அழித்துவிட்டு, இப்ப பேசலாமா? என்று கேட்டார். அந்த மேடையில் இப்பொழுது கவிஞர் கண்ணதாசன் பேசுவார் என்று அறிமுகம் செய்தார் கலைஞர். கவிஞர் என்று கண்ணதாசன் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த கூட்டத்தில் தான்.
காலங்கள் உருண்டோடின. கண்ணதாசன் காங்கிரசில் சேர்ந்தார். 1972ல் கலைஞர் முதல்வர். அவரது தலைமையில் கணக்கு என்ற தலைப்பில் கவியரங்கம். கண்ணதாசனும் பங்கேற்றார். மேடையில் கவிபாட வரும்படி கண்ணதாசனை கலைஞர் எப்படி அழைத்தார் தெரியுமா? இதோ அந்த வரிகள்.....
குயிலென்று பறக்கவிட்டேன் பாடிவர
கோட்டான்கள் கூட்டத்தில் குயில் பாட்டு
எடுபடுமா?
கூப்பிட்டுக் கொண்டேன்
என் தோட்டத்துக்கே – என்
தோட்டத்துக் குயிலே
தோளில் தொத்தும் கிளியே
கூட்டல் கவிதை யாத்து – இந்தக்
கூட்டத்தை களிப்பில் ஆழ்த்து
என்று அழைத்தார்.
இந்தக் கவியரங்கம் நடந்த நேரத்தில் எம்ஜிஆர் திமுகவில் இருந்தார். அவர் அமைச்சர் பதவி கேட்பதாக ஒரு பேச்சு இருந்தது. இந்த நேரத்தில் கவியரங்குக்கு தலைமை வகித்து கலைஞர் பாடிய கவிதை இதோ....
கணக்குகள் பலவிதம்
கணக்கு கேட்பவர்கள் பலவிதம்
பாட்டாளி வியர்வையிலே
முதலாளி பார்ப்பதுதான் பணக்கணக்கு
கூட்டாளி தன் அன்புக்கு கூலியொன்று
கேட்பதுதான் பதவிக் கணக்கு
மந்தையிலே மாட்டுக் கணக்கு ஆட்டுக் கணக்கு
மொந்தையிலே மட்டும் போடாதே கணக்கு
இருபதும் பதினெட்டும் கூட்டிச் சொல்லல் மனக் கணக்கு
இருபது பதினெட்டை கூட்டிச் செல்லல் காதல் கணக்கு
இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் – இது
குடும்பக் கட்டுப்பாடு கணக்கு
குசேலனுடன் போட்டியிட்டால் கொடுமையின் கணக்கு
மான் போட்ட கணக்கு தப்பென்று வீழ்த்திட்டது வேங்கை
ஏன் போட்டாய் தப்புக் கணக்கென்று
வேங்கையினை வீழ்த்திட்டான் வேடன்
இதுதான் உலகு
இப்படி கவிதை வாசித்தார் கலைஞர்.
எழுத்து எதுவானாலும் கலைஞருக்கு கைவந்த கலை. அவர் வசனம் எழுதிய மறக்க முடியுமா படத்துக்கு டி. இராமமூர்த்தி இசையமைத்தார். அதில் ஒரு பாடலை எழுதுவதற்காக கவிஞர் மாயவநாதனை அழைத்திருந்தனர். அப்போதெல்லாம் பெரும்பாலும் பாடலை எழுதச் சொல்லி அதற்கேற்ப மெட்டுப் போடுவதுதான் வழக்கம். பாடலை எழுதிக் கொடுத்தார் மாயவநாதன். இது மெட்டுக்கு சரியாக வரவில்லை; வேறு எழுதிக் கொடுங்கள் என்றார் ராமமூர்த்தி. இப்படி மூன்று, நான்கு பாடல் எழுதிக் கொடுத்தார் மாயவநாதன். எதுவுமே மெட்டுக்கு சரியாக வரவில்லை என்று ராமமூர்த்தி கூறிவிட்டார். மாயவநாதனுக்கு கோபம் வந்துவிட்டது. என் பாட்டுக்கு உன்னால் மெட்டுப் போட முடியவில்லை. நீ மெட்டுப் போடு. அதற்கு நான் பாட்டெழுதுகிறேன் என்றார் மாயவநாதன். இல்லை நீ பாட்டெழுது நான் மெட்டுப் போட்டுக் கொள்கிறேன் என்றார் ராமமூர்த்தி. முடியாது நீ மெட்டுப் போடு என்றார் மாயவநாதன். என்னய்யா பெரிய மெட்டு..... மாயவநாதன்.... மாயவநாதன்.... மாயவநாதன்... மாயவநாதன்.... இதுதான் மெட்டு. பாட்டை எழுது என்றார் ராமமூர்த்தி. என்ன கிண்டல் பண்றீங்களா என்று கோபித்துக்கொண்டு போய்விட்டார் மாயவநாதன். இந்த தகவலை கலைஞரிடம் கூறினர்.
அப்படியா? சரி, நானே அந்த மெட்டுக்கு பாட்டெழுதி விடுகிறேன் என்று கூறிவிட்டு பாடலை எழுதிக் கொடுத்தார் கலைஞர். அது
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
என்ற பாடல் தான்.
மாயவநாதன் என்பதை ஏற்றி இறக்கி பாடினால் எப்படி இருக்கும்? அதுதான் இந்தப் பாடல் முழுக்க மெட்டாக அமைந்தது. கலைஞரின் திறமை கண்டு சுற்றி இருந்தவர்கள் வியந்து போனார்கள்.
தமிழகத்தில் 1971ம் ஆண்டு, கலைஞர் ஆட்சியில் தான் மதுக்கடை திறக்கப்பட்டது. அதுவரை மதுவிலக்கு அமலில் இருந்தது. அந்த ஆண்டில் அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. அந்த நேரத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கலைஞரை காதலியாக வருணித்து கண்ணதாசன் பாடினார்.
சந்திர வதனமன்று, சந்திரன் தலையில் ஏறி
இந்திர சபையக் கூட்டும் எழிலான வழுக்கை இன்று
என்று கலைஞரின் வழுக்கைத் தலையை வர்ணித்திருப்பார். அதே கவிதையில்
மங்கையின் பெயரைக் கேட்டேன்
மந்திரி குமாரி என்றாள்
பன்னிநான் கேட்டபோது
பராசக்தி வடிவமென்றாள்
சென்னைதான் ஊரா என்றேன்
திருவாரூர் நகரமென்றாள்
மருத்துவ பட்டம் தந்தார்
மங்கைக்கு நியாயம்தானே
மஞ்சத்தில் இழுத்துப்போட்டு
மதுக்கடை திறந்து வைத்தாள்
என்று பாடினார் கண்ணதாசன்.
கவிஞர் நா. காமராசன் மிக நல்ல மனிதர். புதுக்கவிதை துறையில் முதலில் வெற்றி பெற்றவர் இவர்தான். இவரது கறுப்பு மலர்கள் புதுக்கவிதை தொகுப்பு சாகா வரம் பெற்றது. நா. காமராசனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். கண்ணதாசன் பற்றி பேச்சு வந்தது. ஜனாதிபதியைப் போல் சம்பளம் வாங்குகிறார்; இந்தியாவைப் போலவே கடன் வாங்குகிறார் என்று கண்ணதாசன் பற்றி சொன்னார் காமராசன்.
கண்ணதாசனுக்குப் பிறகு திரையுலகில் கோலோச்சும் கவிஞர் வைரமுத்து. ஒரு சில முறை, செல்போனில் என்னை தொடர்பு கொண்டு பேசியிக்கிறார். அப்போதெல்லாம், என்ன அருமையான பாடலை ஹலோ டியூனாக வைத்திருக்கிறீர்கள் குமார். நல்ல ரசனை உங்களுக்கு. கண்ணதாசன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான் என்று சொன்னார். ஹலோ டியூனாக அப்போது நான் வைத்திருந்த பாடல் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். திரைப்பாடல்கள் மூலம் பல அற்புதமான வரிகளைத் தந்தவர் வைரமுத்து. அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும்
எனக்கு மட்டும் சொந்தம் உந்தன்
இதழ்கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எந்தன் உயிர்
உருகும் சத்தம்
என்ற வரிகள் என்னை வியக்க வைத்தவை. அவரும்கூட கலைஞர்தான் எனது தமிழாசான் என்பார்.
குமுதம் வார இதழில் குறளோவியம் எழுதிக் கொண்டிருந்தார் கலைஞர். அந்த வார இதழ் திமுகவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதையடுத்து குமுதத்தில் குறளோவியம் எழுதுவதை நிறுத்திக் கொண்டார் கலைஞர். பின்னர், அவரது நண்பர் சாவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த தினமணிக்கதிர் வார இதழில் குறளோவியத்தை தொடர்ந்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டினார் கலைஞர். அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் 3 வரை மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், 1976 ஜனவரி 30ம் தேதியே அவரது ஆட்சியை கலைத்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ஆனால், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடந்தது. தமிழ் உணர்வுக்கு தொடர்பில்லாத பலர் கலந்து கொண்டனர். உரிய மரியாதை கொடுத்து அழைக்காததால் இந்த விழாவுக்கு கலைஞர் போகவில்லை. வள்ளுவர் கோட்டம் திறப்பு விழா பற்றி தினமணிக்கதிரில் சாவி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையை, 'இந்த விழாவில் யார் யாரோ பேசினார்கள். என் மனம் மட்டும் ஒருவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் காரணம் அவர்தானே என்று. நான் வள்ளுவரைச் சொல்கிறேன். நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ' என்று முடித்திருந்தார். அடுத்த பக்கத்தில் குறளோவியம் வெளியாகியிருந்தது.
இது பற்றி வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் அடுத்த இதழில் வெளியாகியிருந்தது. அதில், 'நீங்கள் வள்ளுவரையே நினைத்துக் கொண்டிருங்கள். நாங்கள், அடுத்த பக்கத்தில் இருந்த குறளோவியத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார் அந்த வாசகர்.
அப்போது மிசா என்ற நெருக்கடி நிலை பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது. ஆட்சி கலைக்கப்பட்ட பின், திமுகவிகனர் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த என் மாமா திரு. பொன். சொக்கலிங்கமும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தபோது சட்டையைக் கழற்றி முதுகைக் காட்டினார். தோல் உரிந்து வெள்ளை வெள்ளையாக இருந்தது. அந்த அளவுக்கு சிறையில் அடித்துக் கொடுமைப் படுத்தியிருந்தனர்.
நெருக்கடி நிலை காலத்தில் பெரும் கெடுபிடி. இதற்கு பத்திரிகைகளும் தப்பவில்லை. தணிக்கை செய்யப்பட்ட செய்திகளை மட்டுமே பத்திரிகைகள் வெளியிட வேண்டும். இதற்காக ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் ஒரு தணிக்கை அதிகாரியை அரசு நியமித்தது. திமுகவில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை முரசொலியில் வெளியிட முடிவு செய்தார் கலைஞர். ஆனால் இந்த செய்தியை வெளியிடக் கூடாது என்று தணிக்கை அதிகாரிகள் தடுத்து விட்டனர். பிப்ரவரி மூன்றாம் தேதி அண்ணா நினைவு நாள். அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய செய்தியை முரசொலியில் வெளியிட்ட கலைஞர், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இயலாதோர் பட்டியல் என்று எழுதி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர்களை வெளியிட்டார். தணிக்கை அதிகாரிகள் ஏமாந்து போய் விட்டுவிட்டனர். அதுதான் கலைஞரின் திறமை.
"மரம் பசுமை போர்த்தி நிற்கிறது. பசுமை என்ற சொல்லில் 'ப' போய்விட்டால் 'சுமை' அதாவது விறகு ஆகிவிடுகிறது. சுமை என்ற சொல்லில் 'சு' போய்விட்டால் 'மை' அதாவது கரியாகி விடுகிறது. தமிழ் எவ்வளவு அழகான மொழி பார்த்தாயா?" - விருத்தாசலம் அரசு கலைக் கல்லுாரியில் நான் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்தபோது, தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் திரு. ம.வீ.பச்சையப்பன் அவர்கள்தான் இதைச் சொன்னார். மிகவும் ரசித்தேன்.
விருத்தாசலம் பழைய ஆலடி சாலையில் நான் அறை எடுத்து தங்கியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் பேராசிரியர் பச்சையப்பன் தங்கியிருந்தார். அவ்வப்போது நான் அவர் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக் கொண்டிருப்பது உண்டு. அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது, பசுமை பற்றி அவர் சொன்னது மிகவும் நன்றாக இருந்தது என்று சொன்னேன்.
அவர் உடனே, "என்னை வைத்துதான் அதை சொன்னேன்" என்றார். "புரியவில்லை ஐயா" என்றேன். "என் பெயர் பச்சையப்பன். எனக்கு வயதாகிவிட்டதால் பசுமை போய்விட்டது. இப்போது உடலே சுமையாகிவிட்டது. அடுத்தது கரியாக வேண்டியதுதான்" என்றார். மனது கனத்துப்போனது. ஆனாலும் அவரது தமிழை ரசித்தேன்.
அதே கல்லுாரியில் திரு. பி. கலியபெருமாள் என்று இன்னொரு பேராசிரியர். வகுப்பில் யாரும் குறும்பு செய்தால் திட்டுவார். ஆனால், அவர் திட்டியதாக யாரும் சொல்ல முடியாது. காரணம், திட்டியதை பாடத்தோடு இணைத்துவிடுவார்.
இலக்கியத் திறன், இலக்கிய மரபு, இலக்கியக் கலை ஆகிய மூன்று புத்தகங்கள் சேர்ந்தது ஒரு தாள். இதில், இலக்கியக் கலை மட்டும் கலியபெருமாள் எடுத்தார். வகுப்புக்கு வந்தவர், இலக்கியக் கலை என்று சொன்னார். என் வகுப்புத் தோழர் இரகுராமன், இலக்கியத் திறன் என்று குறும்பாக சொன்னார். பேராசிரியர் உடனே, தான்தோன்றித் தனமாக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினால் இலக்கிய மரபு கெட்டு விடும் என்றார். இரகுராமன் தான்தோன்றித்தனமாக பேசுகிறார் என்று திட்டிய அதே நேரத்தில், அவரைத் திட்டியதாக சொல்ல முடியாதபடி, தான் திட்டியதையே பாடமாக்கிவிட்டார்.
ஒரு முறை எதிர்விளைவு பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். எதிர் விளைவு என்றால் என்ன? என்று கேட்டார். அப்போது ஒரு மாணவன் விசிலடித்தான். உடனே அவர், 'காலிப்பயல்' (என்று சொல்லி, சற்று நிறுத்திவிட்டு) என்று நான் உங்களைச் சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கோபம் வரும் அல்லவா? அதுதான் எதிர் விளைவு என்றார். வியந்து போனேன்.
விருத்தாசலம் அரசு கல்லுாரியில் பணியாற்றிய பேராசிரியர் அ. சா. முத்துசாமி திருக்குறள் நடத்தினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரு திருக்குறளை நடத்த இரண்டு மணி நேரம் போதாது அவருக்கு. அவரை திருக்குறளார் என்று செல்லமாக நாங்கள் அழைப்பதுண்டு. பாடத்துக்கு நடுவே பல பொது அறிவுக் கருத்துகளையும் சுவாரசியமான பயனுள்ள பல பழைய சம்பவங்கள் பற்றியெல்லாம் சொல்வார். ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் எப்படி அமையும் என்பது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். தாய் வழி தாத்தா, பாட்டி, தந்தை வழி தாத்தா, பாட்டி இவர்களின் குணங்கள், தோற்றங்களை குழந்தை ஒத்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், அப்பா மாதிரி குழந்தை இல்லையென்றால் சந்தேகப்படக் கூடாது என்று விளையாட்டாக சொன்னார். அவரை எப்படியாவது மடக்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். அப்பா மாதிரி இல்லாவிட்டால் பரவாயில்லை. அடுத்த வீட்டுக்காரன் போல இருந்தால் சந்தேகப்படாமல் இருக்க முடியுமா? என்று கேட்டேன். சற்றும் யோசிக்காமல் அவர் திருப்பிக் கேட்டார். உன் பக்கத்து வீட்டு குழந்தை உன்னை மாதிரி இல்லில்ல? என்று. வாயடைத்துப் போனேன். வகுப்பில் அவரை மடக்கவே முடியாது.
மாநிலக் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். அங்கு பணியாற்றிய பேராசிரியர் பொன். செல்வகணபதி நல்ல கவிஞர். அதைவிட முக்கியம் அற்புதமான மனிதர். மாணவர்களிடம் அன்பாக பழகுபவர். எனது கவிதை எழுதும் ஆர்வத்தை ஊக்குவித்தவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அண்ணாவைப் போல, செல்வகணபதியின் பேச்சே கவிதை போல இருக்கும். ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது,
அவள் இடையோ கடவுளைப் போன்றது;
கண்கள் பாலில் விழுந்த கறுப்பு திராட்சை
என்று எழுதுவார் அண்ணா. இடை இருக்கிறதா இல்லையா என்பது சந்தேகம் என்பதையே, இடையோ கடவுளைப் போன்றது என்பார். இப்படி அண்ணாவின் உரை நடையே கவிதை போல இருக்கும். அதைப்போலத்தான் பொன். செல்வகணபதியும். அவரது பேச்சே புதுக்கவிதை போல இருக்கும்.
வலம்புரி ஜான், கவிஞர் மு. மேத்தா ஆகியோர் இணைந்து கவிஞர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் தொடக்க விழா மயிலாப்பூரில் நடந்தது. அப்போது நடந்த கவியரங்கில் பொன். செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர். அதில் நானும் ஒருவன். அழைப்பிதழ் வந்தது. செல்வகணபதியின் பெயர் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மாணவர்கள் பெயர் பட்டியலோடு போடப்பட்டிருந்தது. பார்த்தவுடன் எனக்கு கோபம். உடனே செல்வகணபதி அவர்களை சந்தித்தேன். உங்களுடைய சோம்பேறித்தனத்தால் தான் ஒன்றும் இல்லாதவனெல்லாம் எகிறிக் குதிக்கிறான் என்று சொன்னேன். அதைக் கேட்டு, மிகவும் அமைதியாக சிரித்தபடி, 'எகிறிக் குதித்தாலும் பரவாயில்லை. என் மேலேயே குதிக்கிறான்' என்றார் செல்வகணபதி.
உங்களுக்கு சோம்பல் முறிப்பு விழா நடத்தப் போகிறேன். அதன் பிறகாவது நீங்கள் வேகமாக செயல்பட வேண்டும். நிறைய கவிதைகள் எழுத வேண்டும் என்று திரு செல்வகணபதி அவர்களிடம் கூறினேன். அதன்படி அவரது கவிதை நூல்களின் விமர்சன விழாவை நடத்தினேன். நல்ல கூட்டம். அவரே வியந்து போனார். விழாவுக்குப் பிறகும் அவர் வேகமெடுக்கவில்லை. பின்னர் ஒரு சமயம் தினமலர் நாளிழில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது தமிழ்ப்புத்தாண்டு மலருக்கு அவரிடம் கவிதை கேட்டேன். உங்களுக்கு உரிய கவிதைத் தலைப்பை எங்கள் செய்தி ஆசிரியர் கொடுத்துள்ளார் என்று சொன்னேன். என்ன தலைப்பு என்று கேட்டார். நான் ஒரு சோம்பேறி என்றேன். சிரித்துக் கொண்டே நீங்கள் கொடுத்த தலைப்பு போல இருக்கிறதே... என்றார். கொஞ்சமும் கோபப்படவில்லை. அந்தத் தலைப்பில் கவிதை எழுதிக் கொடுத்தார். அதில் எனக்கும் பதில் சொல்லியிருந்தார்.
சுறுசுறுப்பையெல்லாம்
காசாக்கும் இந்த உலகில்
என் சோம்பேறித்தனம்
எத்தனை மகத்தானது
என்று எழுதியிருந்தார்.
நான் பார்த்த கவிஞர்களில் செல்வகணபதிக்கு அன்பு மனம் அதிகமாகவே உண்டு. அதனால் தான் ஒரு விழாவில் இவரைப் பற்றி பேசிய கவிஞர் மு. மேத்தா அவர்கள், நான் பெரிய கவிஞன் என்ற கர்வத்தோடு இருந்தேன். என் சட்டைக் காலரை கிழித்தவர் செல்வகணபதி. கல்லூரியில் செல்வகணபதியைச் சுற்றிதான் மாணவர்கள் கூட்டம் இருக்கும். அதன் காரணத்தை நான் ஆராய்ந்த போதுதான் தெரிந்தது அவரது அன்பு மனம். பெரிய கவிஞனாக இருந்தால் மட்டும் போதாது. அன்பும் எளிமையும் வேண்டும். அதுதான் செல்வகணபதி என்றார். இந்த விழாவுக்கு வந்திருந்த நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்திய செல்வகணபதி அவர்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு விழா எடுத்தவர் குமார் என்று பெருமையாக சொன்னார். அந்த விழாவில் பேசிய செல்வகணபதி, "நான் அவ்வளவு விரைவில் செயல்பட மாட்டேன். அது குமாருக்கு தெரியும்" என்றார்.
அப்போது இன்னொரு விழா நடத்தினேன். அது கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் 80வது பிறந்த நாள் விழா. திருச்சி சென்று அவரை சந்தித்து சென்னையில் நடத்த இருக்கும் அவருடைய பிறந்தநாள் விழாவில் பற்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். "என் பிறந்த நாளை நீ எதுக்கு கொண்டாடுற?" என்று கேட்டார். "உங்களைப் பாராட்ட இது வாய்ப்பு" என்றேன். "என்னை எதுக்கு பாராட்டணும்?" என்று அடுத்த கேள்வி போட்டார். "நீங்கள் தமிழ்த் தொண்டாற்றுகிறீர்கள் அதனால்தான்" என்றேன். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக் கொண்டார்.
சென்னையில் விழா சிறப்பாக நடந்தது. அதில் பேசிய கி. ஆ. பெ. அவர்கள், ஒரு கூட்டுறவு வார விழாவுக்குப் போயிருந்தேன். அதில் 5 விவசாயிகளுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். அவர்களுக்கு எதற்காக பொன்னாடை அணிவித்தீர்கள்? என்று அமைச்சரிடம் கேட்டேன். இந்த மாவட்டத்திலேயே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியது இந்த 5 பேர் மட்டும்தான். அதனால் அவர்களை சிறப்பிக்கிறோம் என்றார். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டியது அவர்களின் கடமை. மற்றவர்கள் அதைச் செய்யவில்லை. அதனால் கடமையைச் செய்த இந்த ஐந்து பேரை பாராட்டுகிறார்கள். அது போலத்தான் எனக்கு நடக்கின்ற இந்த பாராட்டு விழாவும். தமிழுக்கு தொண்டாற்ற வேண்டியது, தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. அதைத்தான் நான் செய்தேன். மற்றவர்கள் அதைச் செய்யாததால் என்னை பாராட்டுகிறார்கள் என்றார்.
மாநிலக் கல்லூரியில் நான் எம்.ஏ. படிக்கும் போது எனது வகுப்புத் தோழர்களில் ஒருவர் பாண்டியன். இப்போது பூம்புகார் கலைக் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். வாயைத் திறந்தால் கவிதையாக கொட்டுவார். படிக்கின்ற காலத்திலேயே ஒரு குறுங்காவியம் எழுதினார். அதில்
கோலத்தைக் கலைத்திட்ட நிலையை எண்ணி
குழைந்திட்ட சோறானாள் பாவை முல்லை
காலத்தின் தீர்ப்புக்கும் திருத்தமுண்டோ
காகிதத்தில் பூ வரைந்தால் மணப்பதுண்டோ
என்று அவர் எழுதிய வரிகள் மறக்கவே முடியாதவை.
அவருடைய முறைப்பெண் மீது அவருக்கு காதல். கிராமத்துக்குப் போனபோது தன் காதலை அந்தப் பெண்ணிடம் சொன்னது பற்றி எங்களிடம் சுவாரசியமாக சொன்னார் பாண்டியன். அவர் சொன்னதை அப்படியே கீழே தருகிறேன்.
இந்த முறை ஊருக்குப் போனப்ப எங்க அக்கா வீட்டுக்கு போனேன் மாப்ள. அக்கா பொண்ணு மட்டும்தான் வீட்டுல இருந்தா. இதுதான் சரியான நேரம்.... காதலை சொல்லிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன். அந்தப் பொண்ணும் ஆசையா வாங்க மாமான்னு கூப்பிட்டு உட்காரச் சொன்னா. எனக்கு இன்னும் உற்சாகமாயிட்டுது. பொண்ணு அழகா இருப்பா. காதலைச் சொன்னேன். உனக்கு பயித்தியாமான்னு கேட்டா... ஆமாம்... உன் மேலன்னு சொன்னேன். என் நல்ல நேரம் சக்கையா மழை புடிச்சுகிச்சு. வீட்டை விட்டு வெளியில் வரமுடியல. ஒரு மணி நேரம் மழை கொட்டிகிட்டே இருந்துச்சு..... ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்தேன்
அகிலா என்றொரு மாது
அப்பப்பா அவள் ரொம்ப சாது
ஈரத்துகிலாய் இணைந்திடும் போது – வேறு
சொர்க்கம் எனக்கிங்கு ஏது?
இப்படி கவிதை எழுதி அவகிட்ட கொடுத்தேன். அதுக்கும் அவ மயங்குல. காதல் பற்றி ஒரு மணிநேரம் பாடம் நடத்தினேன் மாப்ளே..... கடைசி வரைக்கும் அவ ஏத்துக்கவே இல்லை. சரின்னு வந்துட்டேன்.
சாயுங்காலம் அவ வீட்டுப் பக்கம் போனேன். எங்க அக்கா.... அதான்.. அவ அம்மா என்னைக் கூப்பிட்டு பாண்டி பால் வாங்கியாந்து தர்றியான்னு கேட்டாங்க. சரின்னு போனேன். மூடியில்லாத துாக்கு குவளையில் வாங்கிகிட்டு சைக்கிள்ல வந்தேன். ரோடு குண்டு குழியா இருந்ததுல குலுங்கி குலுங்கி பால் கொஞ்சம் கீழே கொட்டிட்டுச்சு. அகிலாதான் வந்து பாலை வாங்கினா. என்ன பாதி பால் சிந்திப்போச்சுன்னு கேட்டா.
காலையில் ஏற்பட்ட பாதிப்பால்
சாலையில் சிந்தியது பாதிப் பால் ன்னு
சொன்னேன்... அவ அதை காதுல வாங்காத மாதிரி போய்ட்டா மாப்ளே.
இப்படி ரசித்துச் சொன்னார் பாண்டியன். கொஞ்சம்கூட ரசனையே இல்லாத அந்தப் பெண்ணை மறந்துடு. அது உனக்கு சரிபட்டு வராது என்றேன். பிறகுதான் தெரிந்தது நான் சொல்வதற்கு முன்பே அவர் அவளை மறந்துவிட்டு, வேறு பெண் மீது காதல் பார்வை வீசத் தொடங்கியுள்ளார் என்று. பாவம் கடைசி வரை அவருக்கு காதல் கைகூடவே இல்லை. ஆனால் நல்ல மனைவி அமைந்துள்ளார்.
நான் எம்.பில். படித்துக் கொண்டிருந்தபோது, தாய் பத்திரிகையில் அவ்வப்போது எழுதுவது உண்டு. அதற்கு காரணமாக இருந்தவர் நண்பர் ஆர்.சி. சம்பத். தாய் பத்திரிகையில் எழுதியதன் மூலம் அதன் ஆசிரியர் வலம்புரிஜானின் தொடர்பு கிடைத்தது. இளைஞர்களை ஊக்குவித்தவர். அதிகமான புத்தகங்களை படித்தவர். வார்த்தை சித்தர் என்று வர்ணிக்கப்பட்டவர். அற்புதமாக வார்த்தைகளை கையாள்வார். ரசிக்கும்படி இருக்கும். ஆனால் சில நேரங்களில் பொருள் புரியாது. சுந்தரராமசாமியின் ஜெஜெ குறிப்புகள் பற்றி உங்கள் கருத்து என்ன என்று வலம்புரிஜானிடம் கேட்டபோது, மாலை வெயிலின் மஞ்சளுக்கும் மாந்தளிர் பச்சைக்கும் நடக்கும் அம்மா அப்பா விளையாட்டு அது என்றார். கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தது. ஆனால், அதன் பொருள் இன்றுவரை எனக்கு புரியவே இல்லை. ஆனாலும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. எளிமையாக பழகுவார். அடிக்கடி போய் பார்ப்பேன். என்றாலும் நான் கவிதை எழுதுவேன் என்பதை அவரிடம் நான் சொன்னதில்லை. 1983ல் இருட்டுச் சுவடு என்ற கவிதை நூல் வெளியிட்டேன். அதைக் கொடுப்பதற்காக வலம்புரிஜானை பார்க்க தாய் பத்திரிகை அலுவலகம் சென்றேன். அதற்கு ஒரு வாரம் முன்புதான் அவர் ராஜ்யசபா எம்பி ஆகியிருந்தார். எப்போதும் போல கதவைத் திறந்துவிட்டு அவரது அறைக்குச் சென்றேன். என்ன தம்பி... நீங்க பாட்டுக்கு வர்றீங்க? கேட்டுட்டு வர வேண்டாமா? என்று கோபமாக கேட்டார். எம்.பி. ஆகிவிட்டதால் மாறி விட்டார் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். நான் எழுதிய புத்தகத்தை கொடுக்க வந்தேன் என்று கூறி எனது புத்தகத்தை கொடுத்துவிட்டு, நான் வருகிறேன் என்று சொல்லி, விருட்டென்று திரும்பிவிட்டேன். அவர் அப்படி கேட்டதில் மனதுக்குள் வருத்தம் எனக்கு.
மாலையில் மயிலாப்பூர் சீனிவாச சாஸ்திரி மண்டபத்தில் ஒரு இலக்கிய விழா. போயிருந்தேன். வலம்புரிஜான் கலந்து கொண்டார். காலையில் நடந்ததை குறிப்பிட்டு பேசினார். காலையில் என் அலுவலகத்துக்கு ஒரு இளைஞர் வந்தார். கதவை திறந்துவிட்டு என் அறைக்குள் வேகமாக நுழைந்தார். என்ன தம்பி அனுமதி பெற்று வரவேண்டாமா? என்று கேட்டேன். நான் எழுதிய புத்தகத்தை கொடுக்க வந்தேன் என்று சொல்லி ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு வந்த வேகத்தில் திரும்பிவிட்டார். அவர் போன பிறகு அந்தக் கவிதை நூலை படித்தேன். அந்த தம்பி இங்கேதான் இருக்கிறார். என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, காலையில் நான் கோபமாக பேசியதற்காக என்னை மன்னித்துவிடு. தென்றல்தான் காத்திருக்கும். நீ.. புயல், அதனால் தான் அனுமதிக்காக காத்திருக்காமல் உள்ளே வந்தாய். உன் புத்தகத்தை படித்த பிறகுதான் நீ புயல் என்பதை புரிந்து கொண்டேன் என்றார். மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நல்ல மனம் படைத்தவர். இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்டவர் வலம்புரிஜான்.
சிதம்பரம் தொகுதியின் எம்எல்ஏ., எம்.பி.யாக இருந்தவர் திரு. கனகசபை பிள்ளை அவர்கள். செல்வாக்கு மிக்கவர். சிறந்த பண்பாளர். அவரது மகன் திரு. கணபதி அவர்கள். மிக எளிமையாக பழகுபவர். அவருக்கு வயது 75. ஆனாலும் என்னிடம் நண்பராக பழகுவார். அவரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது, வலம்புரி ஜான் சொன்னது பற்றி கூறினார். மரம் உயிரோடு இருக்கும்போது அதை மரம் என்கிறோம் சரி. அதை வெட்டிய பிறகும் மரம் என்கிறோமே சரியா? இல்லை. வெட்டிய பிறகு அது கட்டை என்று வலம்புரிஜான் சொன்னார் என்று கணபதி அவர்கள் கூறினார்.
கணபதி அவர்களுக்கும் அவரது அப்பாவுக்கும் எம்ஜிஆருடன் நல்ல நட்பு உண்டு. 1985ம் ஆண்டில் எம்ஜிஆர் ஒரு முறை ஊட்டியில் தங்கியிருந்தார். அப்போது அங்கிருந்த கனகசபை பிள்ளை, மகன் கணபதியுடன் எம்ஜிஆரை பார்க்கச் சென்றார். போகும் போது சில மாம்பழங்களை கொண்டு சென்றார். அதை ருசித்த எம்ஜிஆர், அற்புதமாக இருக்கிறதே என்ன மாம்பழம் இது என்று கேட்டார். இமாம் பசந்த் என்றார் கனகசபை பிள்ளை. இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே எங்கே விளைகிறது என்று கேட்டார் எம்ஜிஆர். திருச்சி தாத்தாச்சாரி கார்டனில் என்று சொன்னபோது வியந்து போனார் எம்ஜிஆர். அடுத்த முறை திருச்சி சென்றபோது தாத்தாச்சாரி கார்டன் போய் பார்த்துவிட்டு இமாம் பசந்த் மாம்பழம் வாங்கி வந்தாராம் எம்ஜிஆர்.
தூரத்தில் இருந்தபோது நான் அண்ணாந்து பார்த்த பலர் அருகில் சென்றபோது உயரம் குறைந்து போனார்கள். ஆனால், அருகில் சென்றபோது அண்ணாந்து பார்க்க வைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் எம்ஜிஆர். மற்றொருவர் ராஜிவ் காந்தி. கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே இருந்தது. அவர்களின் அந்த நல்ல மனம்தான் அவர்களை என்னை அண்ணாந்து பார்க்கவைத்தது.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது திடீரென்று ஒரு நாள் மாலை அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி போன் செய்தார். ராமாவரம் தோட்டத்தில் இரவு 8 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் எம்ஜிஆர் என்று சொன்னார். நிருபர்கள் எல்லாரும் எம்ஜிஆர் வீட்டில் குவிந்து விட்டோம். சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். எல்லா நிருபர்களும் வந்துவிட்டார்கள் பத்திரிகையாளர் கூட்டத்தை தொடங்கலாம் என்றோம். எம்ஜிஆர் உடனே, செய்தி ஒன்றும் இல்லை. வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என்றார். ஒன்றும் புரியாமல் விழித்தோம். ஒருநாள் உங்களோடு சாப்பிட ஆசைப்பட்டேன் அதுதான் அழைத்தேன் என்றார் எம்ஜிஆர். செய்தி இல்லை சாப்பாடுதான் என்றதும் ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஒருவர் கோபப்பட்டார். எம்ஜிஆர் உடனே அருகில் சென்று, அவர் தோளில் கையைப் போட்டு, உங்களோட சாப்பிட விரும்புகிறேன். அது தப்பா? வாங்க உங்களுக்காக சைவ உணவு இன்னொரு மேசையில் தனியா வைக்க சொல்லியிருக்கேன் என்று சொன்னார். அந்த நிருபரும் சாப்பிட வந்தார்.
மிகப் பெரிய மேசை. எம்ஜிஆருடன் 20 பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிட்டுக் கொண்டே, யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதை கவனித்து, அவருக்கு அதை வை, இவருக்கு இதை வை என்று அத்தனை பேரையும் உபசரித்தார். வியந்து போனேன்.
தமிழகத்தில் ராஜிவ் காந்தி சுற்றுப் பயணம் செய்தபோதெல்லாம் செய்தி சேகரிப்பதற்காக பலமுறை அவரோடு சென்றிருக்கிறேன். அவர் மீது மக்கள் காட்டும் அன்பைக் கண்டு அவர் உருகிப்போனதை நேரில் பார்த்திருக்கிறேன். இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ராஜிவுக்கு முழுமையாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. அவருடைய சுறுசுறுப்பு, எளிமை எனக்கு மிகவும் பிடித்தது. உணவு அருந்தும்போது, எனக்கு அவரே பரிமாறியது பசுமையாக நினைவிருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் என்பதால்தான் எம்ஜிஆரும் ராஜிவும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு என் மனதில் உயர்ந்து நின்றனர்.
பஞ்சாபில் 1984ம் ஆண்டில் தீவிரவாதம் தலைவிரித்தாடியது. பிந்தரன் வாலே தலைமையில் பிரிவினைவாதிகள் ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் பதுங்கிக் கொண்டு தீவிரவாத செயல்களை அரங்கேற்றினர். அவர்களை ஒழிக்க பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அணுப்பினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அதனாலேயே சீக்கியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர், ராஜிவ் பிரதமரானார். 1985ம் ஆண்டில் பஞ்சாப் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் தோற்றது. சீக்கியர் கட்சியான அகாலிதளம் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் பஞ்சாபில் அமைதி ஏற்படுத்துவது சிரமமாகி இருக்கும். சீக்கிய கட்சியே வெற்றி பெற்றதால், காங்கிரசுக்கு சுமை குறைந்தது. அங்கே விரைவில் அமைதி திரும்ப வழி ஏற்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் தேர்தல் முடிவு பற்றி ராஜிவிடம் கேட்ட போது அற்புதமாக பதிலளித்தார்.
"சண்டையில் தோற்றோம்;
போரிலே வென்றோம்"
என்றார் ராஜிவ். அங்கே அமைதி ஏற்படுத்துவதுதான் இறுதி நோக்கம். அது நிறைவேறிவிட்டது என்பதையே போரிலே வென்றோம் என்று கூறினார் ராஜிவ். இந்த பதிலை மிகவும் ரசித்தேன்.
எனது இருட்டுச் சுவடு கவிதை நூல் வெளியீட்டு விழா 1983ம் ஆண்டு ஏப்ரல் 7ம் நாள், பாவாணர் நூலகக் கட்டட அரங்கில் நடந்தது. அமைச்சர் காளிமுத்து வெளியிட்டார். எனது ஆசிரியர் கவிஞர் மு. மேத்தா, அவரது ஆசிரியர் அவ்வை நடராசன், அவருடைய ஆசிரியர் பேராசிரியர் மெ. சுந்தரம் ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
அமைச்சர் காளிமுத்து பேசும் போது, 'மரபுக் கவிதையின் சுறுக்கெழுத்துதான் புதுக்கவிதை.'
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
என்று பாலை நிலம் பற்றி சிலப்பதிகாரத்திலே வரும். இதையே ஒரு புதுக்கவிஞன்,
பாலை
பூமித் தாயின்
கோடை நோய்
என்றான். ஆக, மரபுக் கவிதையின் சுறுக்கெழுத்து புதுக்கவிதை என்று சொல்லலாம் என்று விளக்கமளித்தார்.
காளிமுத்து மேலும் பேசுகையில், 'எந்த ஒரு பொருளையும் கவிதையில் சொன்னால் அது மனதில் தைக்கிறது. நினைவில் நிற்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் படித்தபோது, விடுதியில் தங்கியிருந்தேன். தமிழ்ப் பேரறிஞர் அ.கி. பரந்தாமனார்தான் விடுதி காப்பாளர். விடுதி தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தில் மாணவர்கள் தேங்காய் பறிப்பதாக அதை குத்தகைக்கு எடுத்தவர் புகார் செய்தார். விடுதி தென்னந்தோப்பில் உள்ள மரத்தில் யாரும் தேங்காய் பறிக்கக் கூடாது என்று அறிவிப்பு பலகையில் எழுதிப் போட்டார் பரந்தாமனார். அதை உரைநடையாக எழுதாமல்
திருவளர் கல்லூரி தென்னையில் ஏறி
தேங்காய் பறிக்கும் திருவாளர்களுக்கு
நட்டம் இதனால் நனி வரும் என்று
குத்தகை எடுத்த குரிசில் அன்புசாமி
முடங்கல் எழுதி முறையிட்டுள்ளார்
இத்திருச் செயலை இனியும் செய்து
நட்டம் பிறர்க்கு நல்காவாறு
ஈண்டு வாழ வேண்டுவன் யானே
என்று கவிதையாக எழுதியிருந்தார். அதை கவிதையாக எழுதியதால்தான் இன்றும் என் மனதில் நிற்கிறது என்றார்.
காளிமுத்து அவர்கள் மேடையில் பேசும் போது பாராட்டிப் பேசுவதை விடவும் எதிர் அணியினரை திட்டும்போதுதான் சுவாரசியமாக இருக்கும். காங்கிரசை ஒரு முறை அவர் விமர்சித்தபோது,
சருகு மலராகாது
கருவாடு மீனாகாது
கறந்த பால் மடி புகாது
காங்கிரஸ் ஆட்சிக்கு வராது
என்றார். இந்த வசனம் இன்றளவும் பேசப்படுகிறது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின், திமுகவில் சேர்ந்த காளிமுத்து, பின்னர் மதுரையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். இது பற்றி கலைஞரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கலைஞர், 'நரி பரியாவதும் பரி நரியாவதும் மதுரையில் இயல்புதானே' என்றார்.
கலைஞரின் இந்த பதில் பற்றி காளிமுத்துவிடம் நிருபர்கள் கேட்ட போது, 'நான் நரியானேனோ... பரியானேனோ.... இப்போது சரியாகிவிட்டேன்' என்றார். தமிழை வைத்துக்கொண்டு, இவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள் என்று சொன்னார் என் மனைவி.
இருட்டுச் சுவடு நூல் வெளியீட்டு விழாவில் ஒரு பெரும் இலக்கிய சர்ச்சை நடந்தது. மரபுக்கவிதைக்கு வடிவம் இருக்கிறது. புதுக்கவிதைக்கு எந்த வடிவமும் இல்லை. அதை எப்படி கவிதை என்று ஏற்க முடியும்? வடிவம் இல்லாதது இலக்கியமாகுமா? அப்படியே இலக்கியம் என்று நீங்கள் சொன்னாலும் காலப்போக்கில் அது நிலைத்து நிற்குமா? இதற்கெல்லாம் கவிஞர் மு. மேத்தாதான் பதில் சொல்ல வேண்டும் என்று தனது தலைமை உரையில் சர்ச்சையை தொடங்கி வைத்தார் அவ்வை நடராஜன்.
மு. மேத்தா பேசும்போது அவ்வைக்கு பதில் அளித்தார். 'சின்னக் குழந்தை கன்னத்தில் முத்தமிடுகின்ற போது நெஞ்சிலே உதைத்து விட்டது என்பதற்காக உன்னைக் கொல்லாமல் விடுவதில்லை என்று சொல்கிற பெரியவர்கள் போல ஏன் நடந்து கொள்கிறீர்கள்? எவன் எவனோ உங்களை உதைக்கிறான். உதைப்பதற்கு உரிமையில்லாதவனெல்லாம் உதைக்கிறான். அத்தனை உதையையும் வாங்கி ரகசியமாக போர்த்தி வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள்... முத்தமிட்ட குழந்தை நெஞ்சிலே உதைத்து விட்டது என்பதற்காக கொடுவாளை துாக்கிக் கொண்டு வருகிறீர்களே என்ன நியாயம்?' என்று ஆவேசமாக கேட்டார் மு. மேத்தா. இந்த சர்ச்சையை, 'ஒரு புதுக்கவிதை பிறக்கிறது; சண்டை வலுக்கிறது' என்ற தலைப்பில் தாய் வார இதழில் ஒரு பக்கத்துக்கு பதிவு செய்திருந்தார் நண்பர் ராசி. அழகப்பன்.
இந்த விழாவில் என்னைப் பற்றி மு.மேத்தா அவர்கள் பேசும்போது, 'இங்கே சின்ன நட்சத்திரத்தைத்தான் பார்க்கின்றேன். ஆனாலும் அதற்குள் ஒரு பவுர்ணமி வானமே பளிச்சென்று தெரிகிறது. இக்பால் சொல்வான்
பிறை நிலவே....
பிறை நிலவே...
உன் பேதமையை எண்ணி
வருந்தாதே
உனக்குள்ளேதான் ஒரு
பூரணச்சந்திரன்
புதைந்து கிடக்கிறான்
என்று சொல்வான்.
குமாருக்குள் ஒரு பூரணச்சந்திரன் புதைந்து கிடக்கிறான். குமாருக்குள் ஒரு பொற்கால கவிஞன் புதைந்து கிடக்கிறான்' என்று பாராட்டினார். எனக்குள் இருந்த கவிஞன் புதைந்தே போனான். பத்திரிகையாளன் தான் பரிணமித்துள்ளான்.
உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் மிக எளிமையானவர். அவரிடம் என் கவிதை நுாலைக் கொடுத்தேன். படித்தார். 'நான் ஒரு அறிவாளி என்று எழுதி கையெழுத்துப் போடு' என்றார். என்னங்கய்யா என்றேன். சும்மா போடுய்யா. கடவுள் பேசும்னு சொல்றான். என்னைக்கி பேசப் போவுது? ஆனாலும் பேசும்னு சொல்றான்ல,. அதுமாதிரிதான். இப்ப எழுதி கையெழுத்து போடு. அப்புறமா அறிவாளி ஆகிக்கலாம் என்றார்.
நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரி முதல்வராக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர் மருதூர் அரங்கராசன் எனது நீண்ட நாள் நண்பர். 1983ல் அவர் சென்னை புரசைவாக்கத்தில் இருந்த எம்சிடிஎம் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நல்ல இலக்கணப் புலவர். என் புதுக்கவிதை நூலை படித்தபின், அவருக்கும் புதுக்கவிதை எழுதும் ஆசை வந்தது. நிறைய எழுதி எடுத்து வந்து என்னிடம் காட்டினார். நன்றாகவே எழுதியிருந்தார்.
அதில் ஒரு கவிதை...
விளக்கு அணைந்துவிட்டது
தீப்பெட்டி தேட வேண்டும்
கண்ணே
கொஞ்சம் சிரி
இப்படி பல கவிதைகள். ஒரு சில திருத்தங்கள் மட்டும் செய்தேன். 'ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். அந்த நூலுக்கு மு. மேத்தா அவர்களிடம் அணிந்துரை வாங்கினார். மேத்தா என்ன நினைத்தாரோ, கவிதைக் கன்னி இவருக்கு கடைக் கண் காட்ட மறுக்கிறாள் என்று அணிந்துரையில் எழுதியிருந்தார். அரங்கராசன் தனது கவிதை நூலை சுரதா அவர்களிடம் கொடுத்தார். நானும் உடன் இருந்தேன். மேத்தாவின் அணிந்துரையை படித்த சுரதா, 'நீ இலக்கணப் புலவன். நீ ஏன் மேத்தாவிடம் அணிந்துரை வாங்கி விளம்பரம் தேடுற? பல்லுக்கு எதுக்கு வெள்ளை அடிக்கிற?' என்று கேட்டார்.
ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள், 1982ல் சென்னை வந்தபோது, அவரை சந்தித்தேன். ஈழத்தமிழர் நிலை பற்றி மிகுந்த கவலையோடு அதே நேரத்தில் கம்பீரத்தோடு பேசிக் கொண்டிருந்தார். அவரது காசி ஆனந்தன் கவிதைகள் நூலை எனக்கு பரிசளித்தார். அதில்,
'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை'
என்ற கவிதை வரிகளை எழுதிக் கொடுத்தார். அந்த நுாலில் இடம் பெற்ற
பட்டினி கிடந்து பசியால் நெளிந்து
பாழ்பட நேர்ந்தாலும்
என்னை தொட்டு வளர்த்த
அன்னை துயர் துடைக்க மறப்பேனா?
என்ற கவிதை உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும்.
இலங்கை தமிழர் தலைவர் திரு. அமிர்தலிங்கம் அவர்களை ஒரு முறை மாநிலக் கல்லூரிக்கு அழைத்து வந்து பேச வைத்தேன். அவரோடு அவரது மனைவி திருமதி மங்கையர்க்கரசி அவர்களும் வந்திருந்தார்கள். அந்த அம்மையார் பேசும்போது, 'பட்டினி கிடந்து பசியால் நெளிந்து' என்ற காசி ஆனந்தன் கவிதையை இசையோடு பாடினார். அந்தக் குரலில் இருந்த கம்பீரமும் கவிதைப் பொருளின் ஆழமும் கண்களில் நீர் வரவழைத்தது. இலங்கை தமிழர் பிரச்னையை உலக மக்களிடம் எடுத்துச் சென்றவர் அமிர்தலிங்கம். அவரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதை என்னால் ஏற்கவே முடியவில்லை. அதே போலத்தான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா படுகொலையும். இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை வெளியேறிய பிறகு, ஏராளமான இலங்கைத் தமிழர்களும் போராளி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கையை விட்டு வெளியேறினர். அவர்கள் ஒரிசா மாநிலத்தின் மால்கங்கிரியிலும் தண்டகாரண்யத்திலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். செய்தி சேகரிப்பதற்காக அங்கே சென்ற போது பத்மநாபாவை சந்தித்துப் பேசினேன். அடுத்த இரண்டு மாதத்தில், அவர் சென்னை வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். மனசு துடித்துப் போனது. இது நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். காரணம் 1983ம் ஆண்டில் பிரபாகரனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது அவர் என்ன எண்ணத்தில் இருக்கிறார் என்பது தெரிந்தது.
பிரபாகரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் மிகப் பெரிய போராளி. மாவீரன். 1983ம் ஆண்டில் சென்னை மத்திய சிறையில் இருந்து அவர் விடுதலை ஆனபிறகு அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. உலகின் புரட்சி வரலாறு அனைத்தும் அவருக்கு தெரிந்திருந்தது. ரஷ்யப்புரட்சி பற்றி அவர் சொன்னார். அங்கே 21 விடுதலை இயக்கங்கள் இருந்தன. எல்லா இயக்கங்களையும் ஒழித்துவிட்டு தனது இயக்கத்தை பலப்படுத்தினார் லெனின். அதனால் தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. ஒரு விடுதலை இயக்கம்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைய முடியும். பல இயக்கங்கள் இருந்தால் எதுவும் சரியாக நடக்காது என்று பிரபாகரன் சொன்னார். அவரது இந்த சித்தாந்தம்தான் அவரை சகோதர யுத்தத்துக்கு கொண்டு சென்றது. ஸ்ரீசபாரத்தினம் உட்பட மற்ற போராளி இயக்கத் தலைவர்களை படுகொலை செய்யத் தூண்டியது. ஆனாலும், ஜனநாயக இயக்கமான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமிர்தலிங்கத்தை ஏன் கொலை செய்தனர் என்பதுதான் இன்றுவரை புரியவில்லை. இங்கே காந்தியை நேதாஜி கொல்லவில்லையே. 1983ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழகமே கொந்தளித்தது. அந்த அளவுக்கு தமிழர்களிடம் மொழி உணர்வும் இன உணர்வும் ஏற்பட திராவிட இயக்கம்தான் காரணம். தமிழில் பேசுவதையே கவுரவக் குறைவாக நினைத்த காலத்தில் தமிழ் உணர்வை ஊட்டி, தமிழை ரசிக்கக் கற்றுக் கொடுத்தவர் அண்ணா.
தமிழக அரசியலுக்கு அண்ணா வந்த பிறகு, மேடைத் தமிழ் சிறப்பு பெற்றது. நல்ல தமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடுக்கு மொழியும் அழகு தமிழும் ஆட்சி செய்யத் தொடங்கின. திமுகவில் எல்லாரும் நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக் கொள்வது என்று முடிவெடுத்து, நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனார். ராமய்யா அன்பழகன் ஆனார். அறிவழகன், மதியழகன் என்று பலர் பெயர் மாற்றிக் கொண்டனர். இதைக் கிண்டல் செய்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன்,. 'அறிவழகன்றான், மதியழகன்றான்.... போற போக்கை பார்த்தா... மயிரழகன்ன்னு பேர் வச்சுப்பாங்க போலிருக்கு...?' என்றார்.
இதற்கு பதிலளித்த அண்ணா, 'எங்களில் யாருடைய பெயரும் அப்படி இல்லை. உங்கள் பெயர்தான் அந்த பொருளில் உள்ளது. உங்கள் பெயரின் பொருள் உங்களுக்குத் தெரியவில்லை என்றார். அளகம் என்றால் முடி. சிவன் சடாமுடிக்கடவுள் என்பதால் அளகேசன் என்பார்கள்.' இந்த விளக்கம் தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டார் ஓ.வி. அளகேசன்.
கேள்விக்கு பதில் சொல்வதில் அண்ணா கெட்டிக்காரர். ஒரு காங்கிரஸ்காரர் ஒரு முறை, தமிழ்த்தாய் தமிழ்த்தாய் என்கிறீர்களே.... தமிழ்த்தாயோட முகவரி என்ன? என்று கேட்டு கிண்டல் செய்தார். காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி பாரத மாதா என்பார்கள். அதை வைத்தே அவர்களுக்கு பதில் சொன்னார் அண்ணா. 'பாரத மாதா வீட்டுக்கு பக்கத்து வீடு'என்று.
அடுக்கு மொழி பேசுவதையும் இடம் பொருள் பார்த்து பேசவேண்டும். கிருபானந்த வாரியார் மிகப் பெரிய ஞானி. அவரைப் போல ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்த இன்னொருவர் பிறப்பாரா என்பது சந்தேகமே. அவருடைய சொற்பொழிவு ஜனரஞ்சகமாக இருக்கும். இடையிடையே நல்ல அறிவுரையும் சொல்வார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். கணவன் சொல்வதை மனைவி கேட்க வேண்டும். கேட்காவிட்டால் மனைவி சொல்வதை கணவன் கேட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் அமைதி நிலவும் என்று சொல்வார்.
தேர்தல் நேரத்தில் ஒருமுறை விருத்தாசலத்தில் சொற்பொழிவாற்றினார். பேச்சை தொடங்கும் போது, 'பெரியோர்களே தாய்மார்களே எதிரிலே அமர்ந்திருப்பவர்களே... நின்று கொண்டிருக்கும் பெரியோர்களே..... நிற்பவர்கள்தான் இப்போது பெரியவர்கள். ஏன்னா...? இது தேர்தல் நேரம்' என்றார். இப்படி சமயோசிதமாக பேசுவதில் வல்லவர் வாரியார் சுவாமிகள்.
ஒரு முறை ராமாயண சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு குவளையில் ஏதோ குடிப்பதற்கு கொடுத்தார்கள். அதை கையில் வாங்கிய வாரியார், 'இது காபி, நான் சொல்வது அசல்' என்றார். அருகில் இருந்த சிலம்புச் செல்வர் மபொசி அவர்கள், 'அது காபி இல்லை... பால்' என்றார். வாரியார் உடனே, 'நான் முப்பாலுக்கு அப்பால் இருக்கிறேன். இப்பாலும் வந்தது' என்றார். அவரது சமயோசிதம் வியக்கவைக்கும்.
சிலம்புச் செல்வர் மபொசி அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. விருத்தாசலத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, வடலூர் சத்தியஞான சபையில் சொற்பொழிவாற்றினார் மபொசி. போய் கேட்க வேண்டும் என்று ஆசை. பஸ்சுக்கு பணம் இல்லை. போகவர 44 கிலோ மீட்டர் தூரம். சைக்கிளில் போய் அவரது பேச்சை கேட்டுவிட்டு வந்தேன். அந்த அளவுக்கு அவர் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அற்புதமாக பேசுவார்.
முதுகலை படிக்க சென்னை வந்த பிறகு மபொசி அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். ஒரு விழாவுக்கு என்னையும் அழைத்துச் சென்றார். அந்த விழாவில் சாராய ஆலை அதிபர் ராமசாமி உடையாரும் கலந்து கொண்டார். ராமசாமி உடையார் பற்றி மபொசி பேசும்போது, 'அன்புடையார், அருளுடையார், பொருளுடையார்' என்று அடுக்கிக் கொண்டே போனார். விழா முடிந்து மபொசியுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தேன். நான் சும்மா இல்லாமல், 'என்னங்கய்யா.... ராமசாமி உடையார் பற்றி அன்புடையார் அருளுடையார்னு இவ்வளவு சொன்னீங்களே... சாராய உடையார்னு சொல்லியிருந்தா சட்டுன்னு எல்லாருக்கும் புரிஞ்சிருக்குமே' என்றேன். அவ்வளவுதான்.... வந்தது கோபம் மபொசிக்கு. 'மனுஷனா நீ... உன்னப்போய் கூட்டிகிட்டு வந்தேன் பார்' என்றார். உடனே, 'டேய் காரை நிறுத்துடா' என்று டிரைவரிடம் சொன்னார். கார் நின்றது. 'காரை விட்டு இறங்கு' என்று நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்று விட்டார். நடந்தே அவர் வீட்டுக்கு சென்றேன். எத்தனை கிலோ மீட்டர் தூரம் நடந்தேன் என்பது எனக்கும் அவருக்கும்தான் தெரியும்.
அண்ணா முதல்வராக இருந்தபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நிலைமை மோசமாக உள்ளது. அப்போது ஆளுநராக இருந்த உஜ்ஜல் சிங், அண்ணா நலம் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதுவரை கோயிலுக்கே போகாத திமுகவினர் பலர் கோயிலுக்கு சென்று பூஜை செய்து அங்கப் பிரதட்சணம் செய்தனர். அண்ணாவுக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து மில்லர் என்ற டாக்டர் வரவழைக்கப்பட்டார்.
இந்த நேரத்தில் நெய்வேலியில் சொற்பொழிவு நிகழ்த்தினார் வாரியார் சுவாமிகள். மரணம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். எமன் வந்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது என்று சொன்னவர், எதுகை மோனைக்காக, கில்லர் வந்து விட்டால் எந்த மில்லர் வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னார். உள்நோக்கம் எதுவுமின்றி, எதுகை மோனைக்காகத்தான் சொன்னார். ஆனாலும் அவர் சொன்னது, திமுவினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது. மின்சாரத்தை துண்டித்துவிட்டு, மேடை ஏறி வாரியாரை தாக்கினர். அடுக்கு மொழியால் வந்த ஆபத்து இது.
அண்ணாவின் தம்பியான கலைஞரும் பதில் சொல்வதில் கெட்டிக்காரர். 1970ம் ஆண்டுகளில் பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அப்போது, எல்லா பேருந்திலும் திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இது பற்றிய விவாதம் சட்டபையில் நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர் கருத்திருமன் எழுந்து, "'பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும்' என்ற குறளை ராஜாஜி வீட்டிலும், 'கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என்ற குறளை பெரியார் வீட்டிலும் வைக்க அரசு ஏற்பாடு செய்யுமா?" என்று குறும்பாக கேட்டார். உடனே எழுந்து பதிலளித்த முதல்வர் கலைஞர், "யார் வீட்டில் எந்த குறளை வைக்கிறோமோ இல்லையோ... 'யாகாவராயினும் நா காக்க என்ற குறளை கருத்திருமன் வீட்டில் வைக்க நிச்சயமாக ஏற்பாடு செய்யப்படும்' என்றார். சபையில் சிரிப்பலை எழுந்தது.
திமுக 13 ஆண்டுகளுக்கு பிறகு 1989ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன், 'தமிழ் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எவ்வளவோ செய்திருக்கிறது. மணியார்டர் பாரத்தை தமிழில் கொண்டுவர பாடுபட்டது காங்கிரஸ்தான்' என்றார். திமுக உறுப்பினர் சற்குண பாண்டியன் எழுந்து, 'நீங்கள் காகாதேகா கட்சி நடத்திக் கொண்டிருந்த போதுதான் தமிழில் மணியார்டர் பாரம் கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தினீர்கள். அதையடுத்து தமிழில் மணியார்டர் பாரத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்தப் பெருமை எப்படி காங்கிரசுக்கு சேரும்?' என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த குமரி அனந்தன், 'நான் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து விட்டதால், காகாதேகாவில் இருந்தபோது நான் செய்த சாதனைகளின் பெருமைகள் அனைத்தும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேரும்' என்றார்.
முதல்வர் கலைஞர் எழுந்து, '1983ல் இலங்கை தமிழர் பிரச்னைக்காக, இந்திரா காந்தி அம்மையார் படத்தை எரித்தீர்களே... அந்தப் பெருமையும் காங்கிரஸ் பேரியக்கத்தை சேருமா?' என்று கேட்டார். பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனார் குமரி அனந்தன்.
பேராசிரியர் அன்பழகனின் பதில்கள் வித்தியாசமானதாக இருக்கும். யாரும் எதிர்பார்க்காத, கணிக்க முடியாத பதிலைச் சொல்வார் பேராசிரியர். அந்த பதிலில் அத்தனை ஆழம் இருக்கும். பல வரிகளில் சொல்ல வேண்டிய பதிலை ஓரிரு வார்த்தைகளில் சொல்லிவிடுவார் அவர்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, 1983 ம் ஆண்டில் பேராசிரியரின் மணி விழா. பெரியார் திடலில் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. பேராசிரியரை எல்லாரும் பாராட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் தண்டையார் பேட்டையில் அதிமுக பொதுக் கூட்டம். முதல்வர் எம்ஜிஆர் பேசினார். அவர் பேசும் போது, 'மணிவிழா கண்டு கொண்டிருக்கும் பேராசிரியர் இங்கே இருக்க வேண்டியவர். அவர் அதிமுவுக்கு வரவேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்' என்று அழைப்பு விடுத்தார்.
இந்த தகவல், மணிவிழா மேடையில் இருந்த பேராசிரியருக்கு கிடைத்தது. விழா நிறைவில் பேசிய பேராசிரியர், எம்ஜிஆருக்கு பதிலளித்தார். 'நான் அதிமுகவுக்கு வரவேண்டும் என்று எம்ஜிஆர் அழைப்பு விடுத்திருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது. நான் அவருக்கு சொல்லக் கூடிய பதில்... வேண்டுமானால் என் வீட்டு சமையல்காரரை அனுப்பி வைக்கிறேன் என்பதுதான்' என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டார். சமையல்காரரரை அனுப்பி வைக்கிறேன் என்று பேராசிரியர் சொன்ன அந்த இரண்டு சொற்களுக்குள் எவ்வளவு அர்த்தம் பொதிந்து கிடக்கிறது என்பது விவரமுள்ளவர்களுக்குத்தான் புரியும்.
கடந்த 1985ம் ஆண்டு, அதிமுக ஆதரவு ஏடான சமநீதி பத்திரிகையில் 'கருணாநிதி வீட்டு வேலைக்காரன் அன்பழகன்' என்று எழுதி விட்டனர். மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அந்தப் பத்திரிகைக்கு பதிலளித்து பேராசிரியர் பேசினார். 'கருணாநிதி வீட்டு வேலைக்காரன் அன்பழகன் என்று ஒரு ஏடு எழுதுகிறது. இது நல்லதல்ல.... நான் வேலைக்காரன்தான்... ஆனால், எனக்கு எஜமானன் எவனுமில்லை...' என்றார்.
எம்ஜிஆர் இருந்தபோது, அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா, திமுகவையும் கலைஞரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும் அவருக்கு ரகுமான்கான் மட்டும்தான் பதில் சொல்வார். வேறு யாரும் பதில் சொல்வதில்லை. திருவல்லிக்கேணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய என். வி. என். சோமு ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிவிட்டு, 'இதற்கு மேல் பேசினால் ரகுமான்கான் கோபித்துக்கொள்வார்' என்று முடித்தார்.
அடுத்து பேசிய ரகுமான்கான், 'என்னை வைத்துக் கொண்டு ஜெயலலிதாவைப் பற்றி தம்பி சோமு கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார். என் மனம் என்ன பாடுபடும். அம்பு பட்ட புறாவாக துடித்தேன். கருணாநிதி காலி பாட்டில் என்கிறார் ஜெயலலிதா. நான் சொன்னேன். என்னைத் திட்டுங்கள். உங்களுக்கு இல்லாத உரிமையா? என் தலைவரை திட்டாதீர்கள் என்று சொன்னேன். அவர் கேட்கவில்லை. அவரைப் பார்த்து கருணாநிதி பயப்படுகிறார் என்று சொல்கிறார். உங்களைப் பார்த்துகூட பயம் வருமா? நீங்கள் என்ன சிங்கமா? புலியா? பயப்படுவதற்கு? நீங்கள் தங்கப் பதுமையல்லவா? அழகு சிலையல்லாவா? இதையெல்லாம் நான் சொன்னால் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிப்பதாக சொல்கிறார்' என்றார்.
ஜெயலலிதா ஒரு முறை, கருணாநிதியின் விலா எலும்பை முறிப்பேன் என்று சொன்னார். இதை அறிந்து ஆவேசப்பட்டார் பேராசிரியர். முதல் முறையாக ஜெயலலிதாவுக்கு பதில் சொன்னார். 'செல்வி சொல்கிறது... கருணாநிதியின் விலா எலும்பை முறிப்பேன் என்று.... அது என்ன.... உன் வீட்டு கட்டிலிலா படுத்திருக்கிறது? நீ முறிப்பதற்கு?" என்று கேட்டார் பேராசிரியர்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வர். பொன்னையன் நிதியமைச்சர். தேர்தலில் வெற்றி பெற்று எம். எல். ஏ ஆனார் என்றாலும், சட்டசபைக்கு கலைஞர் போவதில்லை. பேராசிரியர் எதிர்க்கட்சித் தலைவர். பொன்னையன் ஒருமுறை, 'உங்கள் கட்சித் தலைவர் கலைஞர்தான் சட்டசபைக்கு வருவதில்லையே... அவர் ராஜினாமா செய்துவிட்டு, அந்த தொகுதியில் வேறு ஒருவரை நிறுத்தினால், உங்கள் கட்சியில் இன்னொருவருக்கு வாய்ப்பு கிடைக்குமே' என்றார்.
'அதை கட்சிதான் முடிவு செய்யும்' என்றார் பேராசிரியர்.
'கட்சியும் அவரே... தலைவரும் அவரே... அப்படி இருக்க, கட்சி முடிவு செய்யும் என்கிறீர்களே?' என்றார் பொன்னையன்.
சட்டென்று எழுந்த பேராசிரியர், 'கட்சியும் அவரே... தலைவரும் அவரே... இரண்டுக்கும் பொதுச் செயலாளர் நானே...' என்றார்.
அதிமுக ஆட்சியில் காளிமுத்து சபாநாயகராக இருந்த நேரம். ஆளுநர் உரையை திமுக புறக்கணித்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பேராசிரியர். ஆளுநர் உரையை புறக்கணித்தது தொடர்பாக சட்டசபையில் காளிமுத்துவுக்கும் பேராசிரியருக்கும் நடந்த சுவையான விவாதம் இதோ...
காளிமுத்து: ஆளுநர் உரையை புறக்கணித்தீர்கள். ஆளுநர் உரையை புறக்கணிக்க, பேரவை விதியில் இடமில்லை. விதியை மீறி நடந்து கொண்டீர்கள்.
பேராசிரியர்: விதியை மீற வேண்டும் என்பதுதான் நோக்கமே. எதிர்ப்பை பதிவு செய்வதில் இதுவும் ஒரு முறை.
காளிமுத்து: மற்றவர்கள் விதியை மீறலாம்... பேராசிரியரே மீறலாமா?
பேராசிரியர்: அண்ணா மீறியிருக்கிறார். எம்ஜிஆர் மீறியிருக்கிறார். அந்த வழியில் இப்போது நானும் மீறியிருக்கிறேன்.
காளிமுத்து: எம்ஜிஆர் வழியில் நடப்பதாக பேராசிரியர் சொல்வதில் மகிழ்ச்சி.
பேராசிரியர்: அந்த எம்ஜிஆரே என்னைக் கேட்டுத்தான் திமுகவில் சேர்ந்தார்.
காளிமுத்து: அப்ப போகும் போதும் உங்களைக் கேட்டுவிட்டுதான் போயிருப்பார்.
இப்படி விவாதம் நடந்தது. எம்ஜிஆரை நான் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவர்தான் என் ஆலோசனையை கேட்டு, நான் சொன்னதை பின்பற்றினார் என்பதை விளக்கமாக சொல்லாமல், எம்ஜிஆரே என்னைக் கேட்டுத்தான் திமுகவில் சேர்ந்தார் என்று சுருக்கென்று சொல்லி முடித்தார் பேராசிரியர்.
பேராசிரியரின் மணி விழாவில் பேசிய கலைஞர்,
பேராசிரியப் பெருமகனே! அண்ணாவுக்கு மணி விழா எடுக்க முடியாத குறையை, உனக்கு மணிவிழா எடுப்பதன் மூலம் மன நிறைவு கொள்கிறேன். உன் மூளையை வைத்துத்தான் நான் சிந்திக்கிறேன். உன்னுடைய பார்வையில் இருந்துதான் என் விழிகள் ஒளி பெறுகின்றன
என்று பாராட்டினார்.
ஏற்புரையாற்றி பேராசிரியர் பேசிய போது, 'கருணாநிதி முதலமைச்சர் என்று சொன்னால் என் மனைவி கூட என்னை மதிக்கமாட்டாள் என்று சொன்னவன்தான் இந்த அன்பழகன். இன்று கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால், அவரை சரியாக புரிந்து கொண்ட காரணத்தால் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். பெரியாருக்கு உரிய துணிச்சலையும் அண்ணாவுக்கு உரிய அறிவாற்றலையும் தனக்கே உரிய செயல் திறனையும் ஒருங்கே பெற்றவர் கலைஞர். அதனால்தான் கருணாநிதி எனக்கு தலைவர். எனக்கு தலைவராக இருக்கக் கூடிய அருகதை, கலைஞரைத் தவிர அகில உலகத்தில் வேறு எவனுக்கும் இல்லை' என்றார்.
திமுக பேச்சாளர் வெற்றிகொண்டானின் ஒரு முகம்தான் பலருக்குத் தெரியும். அவருடைய பேச்சில் இரட்டை அர்த்தம் இருக்கும். இரண்டாவது அர்த்தம் விரசமாக இருக்கும். அதனாலேயே அவருடை இன்னொரு முகம் பலருக்கு தெரியாமல் போய்விட்டது. அந்த இன்னொரு முகம் என்று நான் சொல்வது, அவர் சிறந்த சிந்தனையாளர்.
மாலை நாளிதழாக வந்து கொண்டிருந்த விகடன் பேப்பரில் நான் பணியாற்றிய போது, வெற்றிகொண்டான் பொதுக் கூட்டத்துக்கு போயிருந்தேன். அவர் பேசும்போது, 'உலகத்துல எந்த நாட்டுக் கொடியை..... எந்த கட்சிக்கொடியை பார்த்தாலும் அது நேரா பறக்குதா தலைகீழா பறக்குதான்னு தெரியும். வைகோ கட்சிக் கொடி மட்டும் எப்படி பறந்தாலும் ஒரே மாதிரி இருக்கும்?' என்றார். அவரது இந்த பேச்சை செய்தியாக வெளியிட்டேன். அடுத்த இரண்டு நாட்களில் முன்னாள் அமைச்சர் திரு. காளிமுத்து அவர்களை சந்தித்தேன். வெற்றிகொண்டான் செய்தி பற்றி சொன்னார். வெற்றிகொண்டான் அண்ணனின் சிந்தனை மிக நன்றாக இருந்தது. நான் கூட மதிமுக கொடியை பல முறை பார்த்திருக்கிறேன். இந்த சிந்தனை எனக்குத் தோன்றவில்லை. அவர் எப்படி சிந்தித்திருக்கிறார் பாருங்கள் என்று பாராட்டினார். 2006 சட்டசபை தேர்தலின் போது, வெற்றிகொண்டானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்படியே ஒரு பேட்டி கொடுங்கள் என்றேன். சரி என்றார். உங்களுக்கு எப்படி இவ்வளவு நகைச்சுவை உணர்வு வந்தது? என்று ஒரு கேள்விதான் கேட்டேன். மடை திறந்த வெள்ளமாக பேசத் தொடங்கிவிட்டார். நான் அடுத்த கேள்வியை கேட்க இடம் தரவேயில்லை. ஒன்றரை மணி நேரம் பேசினார். சுவாரசியமாக இருந்தது. ஆதனால், நானும் இடை மறித்து கேள்வி கேட்காமல், அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் அலுவலகம் வந்து, அவர் பேச்சை எழுதி விட்டு இடையிடையே கேள்விகளை சொருகிவிட்டேன். அவர் பேசப் பேசதான் அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பது தெரிந்தது.
திட்டுவதுபோல பாராட்டுவதில் வெற்றிகொண்டான் வல்லவர். கலைஞர் நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்துக்கு போயிருந்தேன். ஆளுங்கட்சியை கடுமையாக தாக்கிப் பேசினார். பின்னர், 'இதெல்லாம் நான் யாரை நம்பி பேசுறேன் தெரியுமா? உங்களைப் போன்ற தொண்டர்களை நம்பிதான் பேசுறேன். என் தலைவரை நம்பி பேசல. அய்யய்யோ அவர நம்பக் கூடாது. நான் யாரையாவது திட்டி பேசிட்டு கீழ் இறங்குவேன். எவனை திட்டினேனோ அவனை கூப்பிட்டு அவன் தோள் மேல் கையைப் போட்டுப்பாரு. என்ன தலைவரே இப்பத்தான் நான் அவரை திட்டிபுட்டு வர்றேன். அவர் தோள்ல கையை போட்டுக்கிறீங்களேன்னு கேட்டா....' 'அட... விடுய்யா.... நம்ம தமிழன்தானன்னு சொல்லுவாரு'. 'பொடா சட்டத்துல கைதாகி வேலூர் ஜெயில்ல இருக்கிற வைகோவ போய் பார்த்துட்டு வந்தாரு. ஏன்யா நீ பெத்த புள்ள ஸ்டாலின் மதுரை ஜெயில்ல இருக்காரு... போய் பார்க்கவே இல்ல... யாரோ பெத்த புள்ள வைகோ... வேகாத வெய்யில்ல வேலூர் போய் அவரைப் பார்த்துட்டு வர்றியேன்னு' கேட்டேன். அதுக்கு அவரு என்ன சொல்றாரு தெரியுமா? 'என் புள்ள ஸ்டாலினை பார்க்க எழுபது லட்சம் தொண்டன் இருக்கான். வைகோவை பார்க்க என்ன விட்டா யார் இருக்கான்னு கேட்கிறாரு' என்று பேசினார். மேலோட்டமாக பார்த்தால் கலைஞரை திட்டுவது போல இருந்தாலும், வைகோவுக்கு கலைஞரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று குத்திக் காட்டுவதுதான் அவரது பேச்சின் உண்மையான பொருள். இப்படி பல விஷயங்கள் சொல்லிக்கொண்டு போகலாம்.
தினகரன் நாளிதழில் நான் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். தினம் தினம் கத்தி மேல் நடப்பது போல கவனமாக இருக்க வேண்டும். அதன் உரிமையாளர் கலாநிதி மாறன் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலிடத்தில் யார் யார் எப்போது என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று தெரியாது. ஆகையால். அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். செய்தி வெளியிடுவதிலும் இந்த கவனம் தேவையாக இருந்தது.
வெளிநாட்டு உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு குரங்கு குட்டிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்றனர் என்ற செய்தியை மார்ச் 1ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியிட்டோம். குரங்கு குட்டிக்கு இன்று பிறந்தநாள் செய்தி உள்ளே என்று முதல் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டிருந்தோம். அன்று தான் திரு. மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள். இதை வைத்து சிண்டு முடிந்து விட்டனர் சிலர். ஸ்டாலினை கிண்டல் செய்வதற்காகத்தான் இப்படி வேண்டுமென்றே வெளியிட்டோம் என்றும் இதை மேலிடத்தில் இருந்து சொல்லித்தான் செய்தோம் என்றும் கிளப்பிவிட்டு விட்டனர். எதார்த்தமாக நடந்தது இது. ஒரு ஆங்கிலப் பத்திரிகையும் இதை செய்தியாக்கி வெளியிட்டு மகிழ்ந்தது. அதிலிருந்து எச்சரிக்கை உணர்வு எங்களுக்கு அதிகரித்தது. 85 வயது முதியவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட செய்தி வந்தது. 85 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை என்று தலைப்பிட்டனர். அதைப் பார்த்த நான், 85 வயது என்பதை எடுத்துவிடுங்கள் என்றேன். 85 வயதில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை என்பதுதான் செய்தியே. ஆனாலும் அதை வெளியிட முடியவில்லை. காரணம், கலைஞருக்கு அப்போது 85 வயது. எனவே, 85 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை என்று தலைப்பு கொடுத்தால் வேண்டுமென்றே செய்வதாக சிண்டு முடிவார்கள் என்பதால் 85 வயது என்பதை எடுத்துவிட்டு வெளியிட்டோம். இப்படி பல அனுபவங்கள்.
சென்னை மாநிலக்கல்லூரியில் நான் எம்ஏ படித்துக் கொண்டிருந்தபோது, எனது நண்பர் சிவ. மாதவன், சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறையில் எம்.பில். படித்துக் கொண்டிருந்தார். மாலையில் இருவரும் கடற்கரையில் நடந்துவிட்டு வருவோம். அப்போது அவர் படித்த பல புத்தகங்கள் பற்றி அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகளை எல்லாம் என்னிடம் சொல்வார். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை பாரிமுனையில் உள்ள கந்தசாமி கோயில் என்று சொல்லும் கந்தக் கோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அது முருகன் கோயில். அந்தக் கோயில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கந்தக் கோட்டம் முருகனை வழிபட்டு வள்ளலார் எழுதிய தெய்வமணிமாலை என்ற நூலின் 30 பாடல்களையும் கல்வெட்டில் பொறித்து கோயில் பிரகாரத்தின் சுவரில் பதித்திருப்பார்கள். வாரா வாரம் செவ்வாய்க் கிழமை கந்தக் கோட்டம் போவேன். வள்ளலார் எழுதிய தெய்வமணிமாலை 30 பாடல்களையும் படித்து விட்டு முருகனை வழிபட்டு வருவேன். 30 பாடல்களில்,
'ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்'
என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். கோயிலுக்கு போவேன் என்றாலும் திராவிட இயக்க கொள்கைளில் எனக்கு ஈடுபாடு உண்டு.
தினமலர் நாளிதழில் வேலைக்கு சேர்ந்த பிறகு, நெல்லைக்கு மாற்றலாகிப் போனேன். அப்போது என்னில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. விழுந்து விழுந்து சாமி கும்பிடும் பலரும் உண்மையற்றவர்களாகவும் நேர்மையில்லாதவர்களாகவும் இருப்பதைப் பார்த்து, எனக்கு சாமி கும்பிடுவதில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. சாமி கும்பிடுபவர்களின் தவறான செயல்களை வெறுப்பதற்கு பதில், சாமி கும்பிடுவதை வெறுத்தேன். இது, அப்போது ஏனோ எனக்கு புரியவில்லை. அது முதல் எனக்கு சாமி கும்பிடும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது. வாய்ப்பு நேர்ந்தால் யாருடனாவது கோயிலுக்கு போவேன். ஆனால், வழிபாடு செய்ய மாட்டேன். கடவுள் இல்லை என்றோ, வழிபடுவோரை தவறு என்றோ சொல்லமாட்டேன். இறைவனை வழிபட வேண்டும் என்று என் மனதில் தோன்றவில்லை. அதனால் நான் வழிபடவில்லை.
அன்புதான் மதத்தின் அடிப்படை என்றால் நான்கூட மதவாதிதான் என்று அண்ணா சொல்வார். அவர் தன்னை மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று ஒருபோதும் சொன்னதில்லை. 'நான் திருநீறு பூசாத இந்து; லுங்கி கட்டாத முஸ்லிம்; சிலுவை அணியாத கிறித்தவன்' என்றுதான் தன்னைப் பற்றி சொல்வார். இந்த அடிப்படையில் தான் ஒரு பேட்டியில் மதம் தேவை என்று சொல்லியிருந்தார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு அண்ணா பேட்டி கொடுத்திருந்தார். அதில் மதம் பற்றிய உங்கள் கொள்கை என்ன என்ற கேள்விக்கு, 'மனித நேயத்தை வளர்க்க மதம் தேவை' என்று அண்ணா பதிலளித்திருந்தார். இதைப்படித்த குத்துாசி குருசாமி மிகவும் வருத்தப்பட்டாராம். மிகப் பெரிய படிப்பாளியான அண்ணாவே மதம் தேவை என்று சொல்லிவிட்டாரே என்று நினைத்து நினைத்து வருத்தப்பட்டதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூட சொல்வார்கள்.
மனித நேயம் வளர்ப்பதற்கு மதம் தேவை என்பதைத் தான் மடாதிபதிகளும் வலியுறுத்துகின்றனர். தெய்வத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் நான் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது, 'மதம்கூட அறிவியல்தான்' என்றார். புரியவில்லையே சாமி என்றேன். 'அறிவியல் என்ன செய்கிறது? மனிதனை மேம்படுத்துகிறது. மதமும் அதைத்தானே செய்கிறது. புறத்தை மேம்படுத்துகிறது அறிவியல். அகத்தை மேம்படுத்துகிறது மதம்' என்றார்.
என்னுடைய 'அருள்தொண்டர் அறுபத்து மூவர்' நூல் வெளியீட்டு விழாவில், திருப்பனந்தாள் மடத்தின் இணை அதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தி சுவாமிகள் பேசும்போது, 'சைவம் என்ற குடையின் கீழ் வேறுபாடு கிடையாது. மழைக்கு ஒரு இடத்தில் ஒதுங்குகிறோம். அங்கே யாரும் வேறுபாடு பார்ப்பதில்லை. அதே போலத்தான் சைவம் என்ற குடையின் கீழ் வரும்போது சாதி வேறுபாடு பார்க்கக்கூடாது. அப்படி யாராவது வேறுபாடு பார்த்தால் அவர்கள் சைவம் என்ற குடைக்கு வெளியே போய்விட்டார்கள் என்று அர்த்தம்' என்றார். ஆக மனித நேயத்தை வளர்ப்பதுதான் மதம்.
குன்றக்குடி அடிகளார் ஒருமுறை அண்ணாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, 'தவறு செய்யக் கூடாது என்று நாம் சொன்னால் மக்கள் கேட்கமாட்டார்கள். தவறு செய்வது பாவம்; இறைவன் தண்டிப்பான் என்று சொன்னால் பயந்துகொண்டு தவறு செய்ய மாட்டார்கள். அந்த இறைவனே இல்லை என்று நீங்கள் பிரச்சாரம் செய்ததால், இறைவன் தண்டிப்பான் என்ற பயமும் பலருக்குப் போய்விட்டது. அதனால் தவறு செய்பவர்கள் அதிகரித்துவிட்டனர்' என்று சொன்னாராம். உடனே அண்ணா, அருகில் இருந்த ராஜாராமை பார்த்து 'தப்பு பண்ணிட்டோமோ' என்று கவலையோடு கேட்டாராம். அடிகளார் உடனே, 'அப்படியெல்லாம் இல்லை. நான் சொன்னது உண்மை என்றாலும் உங்கள் பிரச்சாரத்தால் பல நன்மைகள் கிடைத்துள்ளது. மக்கள் மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வந்துள்ளார்கள். இறை நம்பிக்கை வேண்டும். அதே நேரத்தில் இறைவன் பெயரால் நடக்கின்ற மூடப் பழக்க வழக்கங்களை ஏற்க முடியாதே. அந்த மூடப்பழக்கத்தை உங்கள் பிரச்சாரம் குறைத்துள்ளது' என்று கூறி அண்ணாவை சமாதானப்படுத்தினாராம்.
இறை நம்பிக்கை இருப்பதில் தவறு இல்லை. இன்னும் சொல்லப் போனால், மனிதனுக்கு இறை நம்பிக்கை ஒரு பலம், ஒரு ஆறுதல். இதைத்தான், இந்து மதத்தின் ஒவ்வொரு தத்துவமும் சிந்ததாந்தமும் எதில் முடிகிறதென்றால் நெஞ்சுக்கு நிம்மதி தருவதில் தான் என்று கவியரசர் கண்ணதாசன் சொல்வார். ஆனால் இறை நம்பிக்கை என்ற பெயரால் மூடநம்பிக்கை கூடாது. வழிபாடு தேவைதான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முறை பிடித்திருக்கும். ஆனால் அது ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். என் மகன் முல்லைச் செல்வனுக்கு இரு சக்கர மோட்டார் வாகனம் வாங்கிக் கொடுத்தேன். அதை கோயிலுக்கு கொண்டு போய் பூஜை போட்டு கொண்டு வரும்படி என் மகனிடம் குடும்பத்தினர் கூறினர். அவன் செய்யவில்லை. அவனுக்கு இறை நம்பிக்கை உண்டு. விநாயகரை வழிபடுவான், பயபக்தியோடு அல்ல. நட்போடு வழிபடுவான். அதனால், 'வண்டி சாவியை பிள்ளையார் முன்பு வைத்து வணங்கிவிட்டு எடுத்துக் கொண்டேன் அது போதும்' என்று சொல்லிவிட்டான். கோயிலுக்கு வண்டியை எடுத்துச் சென்று பூஜை போடவில்லை. இந்த முறை எனக்குப் பிடித்திருந்தது.
எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர். பகுத்தறிவாளர். இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தவர். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரை ஒரு முறை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். வயதாகிவிட்டது. உடலும் மனமும் தளர்ந்து விட்டது. அதனால், இறை மறுப்பு கொள்கையில் என்னால் உறுதியாக இருக்க முடியவில்லை. இறை வழிபாட்டில் ஈடுபட தொடங்கிவிட்டேன் என்று சொன்னார்.
'முக்காலிக்(கு) ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கண்டு அஞ்சாமுன் – விக்கி
இருமாமுன் மாகாணிக்(கு) ஏகாமுன் கச்சி'
ஒருமாவின் கீழரை ஓது என்ற பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. ஆனாலும் இறைவனை வழிபடும் எண்ணம் வரவில்லை. ஒரு வேளை அந்த ஆசிரியரைப் போல, உடலும் மனமும் தளர்ந்தால் நாமும் வழிபடுவோமோ என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால், ஒன்றை மட்டும் அடிக்கடி சொல்வேன். நான் இறைவனை ஏற்றுக் கொள்கிறேனோ இல்லையோ, இறைவன் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதற்கு தகுதி உடையவனாக நான் இருக்கிறேன் என்று சொல்வேன். இறைவன் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சில நிகழ்வுகளை சொல்வேன். நான் திருப்பதிக்கு பல முறை போயிருக்கிறேன். ஒரு முறைகூட காத்துக் கிடந்து சாமி தரிசனம் செய்ததில்லை. உடனே பார்த்துவிட்டு வந்து விடுவேன். பெருமாள் என்னை காக்க வைப்பதில்லை. உடனே அழைத்து விடுவார். காரணம் அவரிடம் நான் எதுவும் கேட்பதில்லை. அதனால் தான் காக்க வைக்காமல் உடனே அழைத்துவிடுவார் என்று சொல்வேன். எனது தங்கை ஞானவதி இதை ஒரு முறை அவரது 15 வயது மகள் பவித்ராவிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு அந்தச் சிறுமி கேட்ட கேள்வியையும் கருத்துகளையும் என்னிடம் என் தங்கை கூறியபோது, கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. அந்தச் சிறுமியின் சிந்தனை என்னை புரட்டிப் போட்டு விட்டது. அன்று இரவு முழுக்க என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது.
நல்ல சிந்தனைகளை, வியக்க வைக்கும் கருத்துக்களை கேட்டாலோ படித்தாலோ என் மனம் அதிலேயே ஊறிக்கிடக்கும். சிந்தனை அதையே சுற்றி வரும். இதனால் எனக்கு தூக்கம் வராது. நெல்லை தினமலர் அலுவலகத்தில் நான் பணியாற்றிய போது, இரவுப் பணி முடித்து அதிகாலை இரண்டு மணிக்கு அறைக்கு திரும்பினேன். கண்ணதாசன் எழுதிய புஷ்பமாலிகா புத்தகத்தை படித்துவிட்டு படுத்தேன்.
தூக்கம் வரவில்லை. அதில் சொல்லப்பட்ட கருத்துகளிலேயே மனம் லயித்துக் கிடந்தது.
'ஒவ்வொரு மனிதனுக்கும் சுய தரிசனம் என்ற ஒன்று உண்டு. இதற்கு அவதார புருஷர்கள்கூட விதிவிலக்கு அல்ல. கற்பு நெறி தவறினாள் என்று கல்லாக்கப்பட்ட அகலிகைக்கு உயிர் கொடுத்த அதே ராமன்தான், சீதை மீது சந்தேகப்பட்டான். கோபியர்களின் சேலைகளை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு விளையாடிய கண்ணன்தான், பாஞ்சாலிக்கு சேலை கொடுத்தான். அனுபவம் தன் வீட்டில் எத்தனை படங்களை மாட்டி வைத்திருக்கிறது என்று கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்படிப்பட்ட பல தத்துவக் கருத்துகளைக் கொண்ட அந்த புத்தகம் என்னை விடிய விடிய தூங்க விடாமல் புரட்டி எடுத்தது. பல புத்தகங்கள் இப்படிப்பட்ட அனுபவத்தை எனக்கு கொடுத்துள்ளன. மாநிலக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ் மகன் என்ற மாணவர்
கவிதை
ஒரு மென்மையான
பூகம்பம்.
அது
படிக்கும் போதே வெடிக்கும்
என்று எழுதியிருந்தார். என்னை வெகுவாக பாதித்த கவிதை இது.
சிற்பி பாலசுப்ரமணியம் எழுதிய மவுன மயக்கங்கள் என்ற புத்தகத்தை படித்தபோது இப்படியும் எழுத முடியுமா என்று வியந்து போனேன். அற்புதமாக இருந்தது. வலம்புரிஜான் சொல்வதைப் போல அழுதும் தொழுதும் அந்த நூலை வாசித்தேன்.
மு. மேத்தாவின் கண்ணீர் பூக்கள் கவிதை நூலும் அப்படித்தான்.
விழிகள்
நட்சத்திரங்களை
வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்
திருமணமாக வழியில்லாமல் இருக்கும் ஒரு பெண்ணின் துயரத்தை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாமா என்று தெரியவில்லை.
கவிஞர் மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலில்
உனக்கென்ன
ஒரே ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்.
என் மனமல்லவா
வைக்கோல் போராய்
பற்றி எரிகிறது
என்று ஒரு கவிதை வரும்.
அதைப் போலத்தான் பல புத்தகங்கள். ஒரே ஒரு சிந்தனையை அல்லது கற்பனையை வீசிவிட்டு போய்விடுகின்றன. என் மனம் விடிய விடிய தூங்காமல் அவதிப்படுகிறது.
அப்படித்தான் என் தங்கை மகள் சொன்ன கருத்தும் என்னை புரட்டி எடுத்தது. அது என்ன என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காக அம்மா மகளுக்குள் நடந்த உரையாடலை அப்படியே கீழே தருகிறேன்.
அம்மா: குமார் அங்கிள், சாமி கும்பிட மாட்டாங்க... ஆனால் அவங்க திருப்பதிக்கு பலமுறை போயிருக்காங்க. ஒரு முறை கூட சாமி பார்க்கிறதுக்காக காத்துக்கிடந்தது இல்லியாம். கல்யாண உற்சவத்துக்கு பணம் கட்டியிருக்கேன். அதுல ஐந்து பேர் போகலாம் நீங்களும் வாங்கன்னு ஒருத்தர் ஒரு முறை கூட்டிகிட்டு போனாராம். இது போல ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒண்ணு நடக்குமாம். பெருமாள் அந்த அங்கிளை காக்க வைக்கிறதே இல்லையாம்.
மகள்: ஏம்மா... நம்மள பிடிக்காதவங்க நம் வீட்டுக்கு வந்தா என்ன நினைப்போம்?
அம்மா: எப்படா திரும்பிப் போவாங்கன்னு இருக்கும்.
மகள்: அதுமாதிரிதான் குமார் அங்கிளையும் பெருமாள் நினைச்சிருப்பாரு.
அம்மா: அப்படின்னா பார்க்காமலே அவங்களை பெருமாள் திருப்பி அனுப்பியிருக்கலாமே?
பவி: மனிதர்கள்னா அப்படிச் செய்வாங்க. கடவுள் கருணை உள்ளவர். அதனால, இவங்கள பார்க்க அனுமதிச்சிருக்காரு. என்னை பிடிக்காத உனக்கு இங்க என்ன வேலை? ஏதோ வந்துட்ட, வா.... வந்து பார்த்துட்டு போயிகிட்டே இரு... சீக்கிரம் இடத்தை காலி பண்ணட்டும்னு பெருமாள் உடனே கூப்பிட்டு பார்க்க சொல்லி அனுப்பியிருப்பாரு. அவ்வளவுதான். மனமுருகி வேண்டிக்கிறவங்கள்...... அவரை நம்புறவங்கள தன்னோட சந்நதியில் அதிக நேரம் இருக்க அனுமதிப்பாரு.
இந்த உரையாடலை என் தங்கை என்னிடம் சொன்னபோது, அதை முதலில் மிகவும் ரசித்தேன். சின்னப் பெண் இந்த அளவுக்கு சிந்திக்கிறதே என்று வியந்தேன். நான் திருப்பதி சென்று வந்த சம்பவத்தை கேட்ட பலரும் அப்படியா என்று தான் வியந்திருக்கிறார்கள். அல்லது, உங்களுக்கு இறையருள் இருக்கிறது; இறைவனுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். பிடிக்காததால் விரைவில் அனுப்புகிறார் என்ற கருத்து வித்தியாசமாக இருந்தது. அந்தச் சிறுமி அத்துடன் நிற்கவில்லையாம்.
அறுபத்து மூவர் பற்றி அந்த அங்கிள் எழுதிய புத்தகத்தை படித்து விட்டு நீ கண்ணீர் விடுகிறாய். இறைவனைப் பற்றி அவ்வளவு அற்புதமா எழுதியிருக்காங்க. தன்னைப் பற்றி எழுதுவதற்கு ஆற்றலையும் மூளையையும் அந்த அங்கிளுக்கு கொடுத்த இறைவன், அவரை உணர்வதற்கான மனத்தை மட்டும் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டதாம்.
பவித்ராவின் சிந்தனை என்னை புரட்டிப் போட்டதோடு மட்டுமல்ல... ஒரு நூலையும் எழுத வைத்தது. அந்தச் சிறுமியின் வித்தியாசமான சிந்தனையை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த ஆரம்பத்தின் முடிவுதான் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல்.
(முற்றும்)